|
|
|||||||
உங்களுடைய அரசியல் வாழ்க்கையில் ‘இன்ஸ்பிரேஷனாக’ (inspriation) இருந்தவர் யார்? அதனுடைய சூழ்நிலை என்ன? உங்கள் பின்னணி என்ன? அரசியலில் ஈடுபடவேண்டும் என்கிற திட்டம் எதுவும் இல்லை. கல்லூரிப் பருவத்தில் சென்னை மாநகரத்தில் நான் தங்கியிருந்தபோது திராவிட இயக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகள் ஏற்பட்டன. அந்தச் சூழல் எனக்கு மெல்ல மெல்ல அரசியல் ஈடுபாட்டை உருவாக்கியது. 1979ஆம் ஆண்டு தான் நான் சென்னைக்கு வந்த கால கட்டம். 1983 சூலை கலவரம் என்கிற மிகப்பெரிய இனக்கலவரம் இலங்கையில் வெடித்தது. அதனையொட்டி ஏராளமான ஈழத்தமிழர்கள் சென்னையை நோக்கித் தஞ்சம் புகுந்தனர். அப்போது தமிழகமே கொந்தளிப்பு அடைந்தது. அனைத்துக் கட்சியினருமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். மாணவர்களும் கட்சி சார்பில்லாமல் வீதிக்கு வந்து போராடுகின்ற சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ஈடுபாடு ஏற்பட்டு மெல்லமெல்ல அரசியலில் தீவிரமாக இறங்கினேன். ஈழத்தமிழர் அரசியல் அவர்களுடைய விடுதலை தொடர்பான போராட்டம்தான் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. தலைவர்களில் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற மகத்தான தலைவர்களின் கருத்துகள் என்னை வெகுவாகப் பாதிக்கச் செய்தன. ஓர் ஒடுக்கப்பட்டச் சமூகத்தில் பிறந்து ஒரு மாபெரும் தலைவராக வளர்ந்திருந்த புரட்சியாளர் அவர்களின் வாழ்க்கை வரலாறு எனக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்திருந்தது. தந்தை பெரியார் தமிழகத்தில் அடித்தட்டு மக்களையெல்லாம் தட்டி உசுப்புகிற அளவிற்கு மாமனிதர். அவருடைய கருத்துக்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. அந்த இரு பெரும் தலைவர்களோடு என்னை மிகவும் ஈர்த்தத் தலைவர் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள். அவர் சென்னையில் தங்கியிருந்த காலத்தில் நான் அவரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அவருடைய அந்தப் போர்க்குணம் என்னை வெகுவாக ஈர்த்தது. புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன் என்கிற இந்த மூன்றுபெரும் தலைவர்கள்தான் என்னை வெகுவாக ஈர்த்த, என்னை இத்தகைய போராட்டக் களத்துக்குத் தள்ளிய உந்து சக்திகள். நீங்கள் என்ன படித்துள்ளீர்கள்? நான் மாநிலக் கல்லூரியில் இளம்நிலை அறிவியல் பட்டப் படிப்பு - பி.எஸ்சி. வேதியியல் (B.Sc., Chemistry) - படித்தேன். எம்.சி. இராசா மாணவர் விடுதியில் தங்கியிருந்தேன். ஆதிதிராவிடர் மாணவர்கள் தங்கிப் படிக்கிற ஒரு விடுதி. மூன்று ஆண்டுகள் நான்கு ஆண்டுகள், நான் அங்கேதான் தங்கிப் படித்தேன். அதன்பிறகு - 1979 - 82 வரை பி.எஸ்சி. வேதியியல் பாடத்தை நான் முடித்தபிறகு - குடும்ப வறுமை காரணமாக மேற்கொண்டு படிப்பதைவிட ஏதாவது ஒரு வேலைக்குச் செல்லலாம் என்று கருதி ஓராண்டு காலம் வேலைதேடி காலத்தை வீணாக்கிவிட்டேன். ‘கொத்தவால் சாவடி’யில் மூன்று மாதம் காய்கறிக் கடையில் கணக்கு எழுதும் வேலை எனக்குக் கிடைத்தது. எங்கள் ஊர் தணிக்கையாளர் ஒருவர் (ஆடிட்டர்) அந்த வேலையில் என்னைச் சேர்த்துவிட்டார். ஆனால், தொடர்ந்து என்னால் அந்த வேலையில் நீடிக்க முடிய வில்லை. மனஉளைச்சலாக இருந்தது. தொடர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு இருந்தது. 1985இல் இருந்து 1988 வரை சட்டக் கல்லூரி மாணவனாக நிறையப் போராட்டங்களில் ஈடுபட்டு மாணவர்களின் மத்தியில் அறிமுகமாகக் கூடிய அளவிற்கு இருந்தேன். சட்டக்கல்லூரி மாணவனாக இருந்தபோது, திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அமைப்பில் ஒரு பொறுப்பு கேட்டு முயற்சித்தேன். என்னுடைய நண்பர்கள் அந்த ஆர்வத்தைத் தூண்டி னார்கள். அப்போது சென்னை மாவட்டப் பொறுப்பு கேட்டு விண்ணப்பம் செய்தேன். சென்னை சட்டக் கல்லூரி மாணவர் தலைவர் பொறுப்பு கேட்டும் வேண்டுகோள் வைத்திருந்தேன். ஆனால், அப்போது எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. 1988ஆம் ஆண்டு இறுதித் தேர்வு எழுதும் நேரத்தில் எனக்கு வேலைக்கான நேர்காணல் ஒன்று வந்திருந்தது. நான் பி.எஸ்சி வேதியியல் என்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தேன். நிறைய நேர் காணல் வரும் போவதில்லை. அந்த நேர்காணல் தடய அறிவியல் துறையில் இருந்து வந்த அழைப்பு. நான் இயல்பாக அந்த நேர்காணலில் போய் கலந்து கொண்டு வரலாம் என்று போயிருந்தேன். எதிர் பார்க்கவேயில்லை எனக்கு அந்த வேலை கிடைத்து விட்டது. அங்கே நேர்காணல் முடிந்த ஒருசில மணி நேரத்தில் யார் யார் தேர்வு பெற்றிருக்கிறார்கள் என்று சொல்லி விட்டார்கள். அப்போது தடய அறிவியல் துறையில் இயக்குநர் சந்திரசேகர் இருந்தார்கள். வேலை கிடைத்துவிட்டது ஆனால், போக முடியவில்லை. ஏனென்றால் நான் சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன். இறுதி ஆண்டுத் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்த நேரம் அதனால் வேலைக்குப் போக மனமில்லாமல் இருந்தது. அங்கே இருந்த ஒருவர் சொன்னார் வேலைக்குப் போய் சேர்ந்து விடுங்கள் வேலை கிடைப்பது அரிது. சம்பளம் இல்லா விடுப்புப் போட்டுவிட்டு வந்து நீங்கள் தேர்வு எழுதலாம் என்று அவர் சொன்ன ஆலோசனையின் அடிப்படையில் கோயம்புத்தூரில் எனக்கு வேலை கிடைத்தது. என் னுடைய நண்பர் ஒருவரின் உதவியோடு பயணச் செலவிற்குக் காசு வாங்கிக் கொண்டு தொடர் வண்டியில் கோவைக்குச் சென்றேன். தடய அறிவியல் துறையில் எத்தனை ஆண்டுகள் அரசு ஊழியராக நீங்கள் பணியாற்றினீர்கள்? கோவையில் சேர்ந்த போது இரண்டு ஆண்டுகள் தான் பணியாற்ற முடிந்தது. மதுவிலக்குக் கொள்கை யில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டு அந்தப் பணியில் இருந்து நிறைய பேரை வெளியேற்றிவிட்டார்கள். அது எனக்குச் சாதகமாகத்தான் இருந்தது. என்னுடைய பணியைத் தொடர வேண்டும் தேர்வு எழுத வேண்டும் என்று மகிழ்ச்சியாக வந்துவிட்டேன். தேர்வு எழுதுகிற நேரம் மறுபடியும் எனக்கு அதே துறையில் மதுரையில் பணியாற்றுவதற்கு ஆணை வந்துவிட்டது. எனக்கு மதுரைக்குப் போய் பணியாற்ற விருப்பம் இல்லாமல் அப்படியே ஒருமாத காலம் விட்டுவிட்டேன். அந்தத் தகவல் என்னுடைய தந்தைக்கு தெரிந்ததும் மிகவும் வருத்தப்பட்டார். “அவனவன் வேலை கிடைக்காமல் அவதிப்படுகிறான். இவன் வேலை கிடைத்தும் போகாமல் இருக்கிறான்” என்று கூடஇருந்தவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதன்பிறகு, 1988 ஏப்ரல் 5ஆம் நாள் மதுரை வட்டாரத் தடய அறிவியல் துறையில் போய் பணியில் சேர்ந்தேன். அதன்பிறகுதான் என்னுடைய வாழ்க்கை யில் திருப்புமுணை அமைந்தது. அதுவரையில் எனக்குப் பெரிய அளவில் அரசியல் புரிதல் கிடையாது. குறிப்பாக, தலித் அரசியல் குறித்து அவ்வளவு ஈடுபாடும் இல்லை. என்னுடைய தொடக்கக்கால ஈடுபாடு என்பது மாணவர்களோடு சேர்ந்து நடத்திய போராட்டங்கள், அது தொடர்பான கருத்தரங்குகள் போன்றவைதான். அவற்றில்தான் நான் பங்கேற்றிருந் தேன். மதுரையில் போய் நான் தங்கிய கால கட்டத்தில் சம்பளம் இல்லா விடுப்பு போட்டுக் கொண்டு, தேர்வு எழுதிவிட்டு மீண்டும் அந்தப் பணியில்போய் சேர்ந்துவிட்டேன். அந்தத் தேர்வில் நான் வெற்றி பெற்று பி.எல். முடித்துவிட்டேன். ஒரு வழக்கறிஞராக வேண்டும். அதோடு அரசியல் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை தான் எனக்கு அப்போது இருந்தது. அரசு ஊழியராக இருக்க வேண்டும் என்கிற மனநிலை அப்போது இல்லை. ஆனால், குடும்ப வறுமை காரணமாக ஓர் அரசு ஊழியராக இருந்தால் தான் நல்லது என்கிற அழுத்தம் இருந்ததால்தான் நான் அந்தப் பணியைத் தொடர்ந்தேன். அப்போது மதுரையில் வழக்கறிஞர் மலைச்சாமி என்கிற தோழர் எனக்கு அறிமுகமானார். அவர் ‘பாரதிய தலித் பேந்தரி’ன் அமைப்பாளராக அங்கே பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய தம்பி என்னுடன் சென்னை சட்டக்கல்லூரியில் படித்தவர். அவருடைய வழிகாட்டுதலில் அவருடைய அண்ணன் வந்து என்னைப் பார்த்தார். அப்போது 1989இல் சட்டமன்றத் தேர்தல். அந்தத் தேர்தலில் வரகூர் தொகுதி கேட்டு நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். அதுகூட என்னுடன் இருந்த நண்பர்களின் வற்புறுத் தலின் பேரில்தான். யார்யாரோ பணம் கட்டுகிறார்கள், விண்ணப்பம் செய்கிறார்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. நீங்கள் வைகோவை வைத்து நிகழ்ச்சி யெல்லாம் நடத்தியிருக்கிறீர்கள். சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகவும் இருப்பதால் வாய்ப்பு கிடைக்கும் என்று நண்பர்கள் சொன்னார்கள். அது அப்போது பிரபலமான ‘தராசு’ பத்திரிகையில் என்னுடைய படம் போட்டு செய்தியாக வந்திருந்தது. அந்தப் பத்திரிகையோடு வந்து என்னைப் பார்த்தார் வழக்கறிஞர் மலைச்சாமி. இதுபோல் வார ஏட்டில் பார்த்தேன் வாழ்த்துகள். உங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும், தேர்தலில் நிற்க வேண்டும். உங்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்கிறேன் என்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினேன். அந்த உரை அங்கே கூடியிருந்த மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. சில மாதங்களில் வழக்கறிஞர் மலைச்சாமி நோய்வாய்ப்பட்டுக் காலமாகிவிட்டார். அவருக்கொரு இரங்கல் கூட்டம் போட வேண்டும் என்று அவரோடு பணியாற்றிய தோழர்களை அழைத்து நான் ஏற்பாடு செய்தேன். அந்த இரங்கல் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக அங்கே இருந்த இளைஞர்கள் நீங்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுச் செயல்படுங்கள் என்று சொன்னார்கள். அது எனக்கு அதிர்ச்சியாகவும் தயக்கமாகவும் இருந்தது. “இந்த அமைப்பின் முன்னணித் தோழர்களோடு அமர்ந்து முடிவு செய்து பிறகு என்னிடத்தில் தெரிவி யுங்கள் நானும் யோசிக்கிறேன்” என்று மறுதலித்து விட்டு வந்துவிட்டேன். 1989 திசம்பர் 31ஆம் நாள் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. செப்டம்பர் 14 அவர் காலமான நாள். சனவரி 21ஆம் நாள் மதுரையில் ஒரு பயணியர் விடுதியில் இருபது இருபத்தைந்து பேர் மட்டுமே கலந்து கொண்ட ஓர் ஆலோசனைக்கூட்டம். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்து திருமாவளவன் இந்த அமைப்பின் மாநில அமைப் பாளராக இருந்து செயல்பட வேண்டும் என்று தீர் மானத்தை நிறைவேற்றினார்கள். அப்போது எனக்கு 27வயது நடந்து கொண்டிருந்தது. வெளிஉலக அனு பவங்கள் எதுவும் எனக்கு இல்லை. அரசியல் ஈடுபாடு என்பதும் கத்துக்குட்டித்தனமாகத்தான் இருந்தது. மாணவர்களோடு இருந்த அரசியல் புரிதல் மட்டுமே இருந்தது. அச்சமும் இருந்தது தயக்கமும் இருந்தது. ஆனால், ஏதோ ஒரு துணிச்சலில் சரி என்று அந்தப் பொறுப்பை ஏற்றுச் செயல்படத் தொடங்கினேன். பொறுப்பேற்றவுடனே இயக்கத்திற்கான கொடி அமைப்பு, இயக்கத்திற்கான கொள்கை வரையறை எல்லாம் முடிவு செய்தேன். ‘தலித் பேந்தர் இயக்கம்’ மராட்டிய மாநிலத்தில் உருவான இயக்கம். 1982இல் மதுரை தமுக்கம் மைதானத்தில் திருமதி சபீதா அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டது. அந்த இயக்கம்தான் மலைச்சாமி அவர்களால் நடத்தப் பட்டு அவர்கள் காலமான பிறகு நான் நடத்த வேண்டிய நிலை வந்தது. பாம்பாய் பொறுப்பாளர்களோடு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களின் கொடியைப் பற்றியோ கொள்கைக் கோட்பாடைப் பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. அதுவும் நானே சுதந்திரமாக யோசித்து கொடியை வடிவமைத்து, கொள்கைக் கோட்பாடுகளை முழக்கங்களாக வரையறுத்தேன். 1990ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் மதுரையில் கொடியை ஏற்றிவிட்டேன். நீலம், சிவப்பு கலந்து நடுவில் விண்மீன் பொறித்த கொடி. ‘இன்று நமது இயக்கக் கொடி நாளை நமது தேசியக் கொடி’ என்கிற முழக்கத்தோடு அந்தக் கொடியை அறிமுகப்படுத்தி செயல்படத் தொடங்கினேன். ஓராண்டு கழித்து இந்திய ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்பதுதான் ‘தலித் பேந்தர்ஸ் ஆஃப் இந்தியா’. மலைச்சாமி தலைவராக இருந்த போது ‘பாரதிய தலித் பேந்தர் இயக்கம்’ என்ற பெயரில் செயல்படுத்தி வந்தார்கள். இந்தியா என்பதை பாரதமாகவும், தலித் பேந்தரை, பேந்தர் இயக்கம் என்று தமிழில் போட்டுச் செயல்படுத்தி வந்தார்கள். அதை நான் ‘இந்திய ஒடுக்கப்பட்டச் சிறுத்தைகள்’ என்று ஓராண்டு காலமாக நடத்தி வந்தேன். தமிழ்த்தேசியக் கருத்தில் எனக்கு தீவிரமாக ஈடுபாடு இருந்தது. அதனால் ‘இந்திய’ என்பதையும் ‘ஒடுக்கப்பட்ட’ என்ற சொல்லாட்சியையும் ஏற்கனவே நாமே ஒடுங்கிக்கிடக்கிறோம், ஒடுக்கப்பட்டுக் கிடக் கிறோம், அழுத்தப்பட்டுக்கிடக்கிறோம் மறுபடியும் நாம் அதே பெயரை வைக்கக்கூடாது. விடுதலைக்காகப் போராடுகிறோம் என்பதால் அந்தச் சொல்லாட்சியை மாற்ற வேண்டும் என்று கருதினேன். அதன் அடிப் படையில் ‘விடுதலைப் புலிகள்’ என்பதைப் போல ‘விடுதலைச்சிறுத்தைகள்’ என்று எழுச்சியோடு இருக்கக் கூடிய வகையில் அந்தப் பெயரை இணைத்துப்போட்டு கொண்டு இருந்தேன். 1991களில் முழுமையாக விடுதலைச்சிறுத்தைகளாய் செயல்படத் தொடங்கி னோம். ‘அடங்கமறுப்போம்’ ‘அத்துமீறுவோம்’ ‘திமிறியெழுவோம்’ ‘திரும்பியடிப்போம்’ என்கிற தாரக மந்திரத்தோடு இந்த இயக்கத்தைத் தொடங்கிச் செயல்படுகிறோம். மக்கள் எழுச்சி இயக்கமாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கிற ஓர் இயக்கமாகத் தொடங்கி தேர்தலில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போது ஏற்பட்டது? 1999 வரை தீவிரமாக அரசியல் புறக்கணிப்பு இயக்கமாகத்தான் நடத்திவந்தோம். எனக்கு என்ன மனதில் தோன்றியது என்றால் தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் அது வழுக்குப் பாதையில் செல்வதைப் போல எங்காவது இழுத்துக் கொண்டுபோய் விட்டு விடும். எனவே, நம்மைப் பின்பற்றி வருகின்ற இளைஞர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபாடு இல்லாத இளைஞர்களாக இருக்க வேண்டும். எனவே, எடுத்த எடுப்பிலேயே தேர்தல் புறக்கணிப்பு என்பதைச் செயல்திட்டமாக வைத்திருந்தோம். முழுக்க முழுக்க தியாகம் செய்யக்கூடிய தலைமுறையை உருவாக்க வேண்டும். தேவைப்பட்டால் ஆயுதப் பயிற்சி எடுக்கக்கூடிய அளவிற்கு தேவை அல்லது வேட்கை எனக்குள் இருந்தது. இதெல்லாம் சேர்ந்துதான் திருமணத்தைப் பற்றி முடிவெடுக்க முடியாமல் அதைப்பற்றி பொருட்படுத்தாமல் விட்டுவிட்டேன். இந்த நிலையில் மக்களிடத்தில் இருந்து தனிமைப் பட்டுவிடக்கூடாது. புரட்சிகரமாகச் செயல்படு கிறோம் என்று சொல்லி அதிதீவிரமாக செயல்படத் தொடங்கி நம்மை ஆதரிக்கின்ற மக்களே நம்மை கைவிட்டுவிட வேண்டியநிலை வந்தால் நம் எண்ணமோ சிந்தனையோ பயனற்றுப் போய்விடும். ஆகவே, நாம் இதற்கு ஒரு முடிவெடுத்தாக வேண்டும் என்று 1998ஆம் ஆண்டு விழுப்புரத்தில் மாநிலச் செயற் குழுவைக்கூட்டி, நடைபெறவிருக்கிற நாடாளு மன்றத்தேர்தல் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு கூட்டத்தைக் கூட்டினேன். சிதம்பரம் தொகுதியின் மீது அப்படி என்ன ஒரு காதல்? அது எனக்குத் தெரியாது. இயக்கத் தோழர்கள் எல்லாம் சிதம்பரம் தொகுதியை விட்டுவிடாதீர்கள். அந்தத் தொகுதியை வாங்குங்கள் என்று திரும்பத் திருப்பச் சொன்னதனால், விழிப்புணர்வு பெற்ற தலித் சமூகம் அங்கே இருக்கின்ற காரணத்தினால் அந்தத் தொகுதியை நாங்கள் கேட்டோம். அதற்கு மூப்பனார் அவர்கள் சொன்ன நிபந்தனை, “நீங்கள் போட்டியிடுவதாக இருந்தால் சிதம்பரம் தருகிறோம்” என்றார். ஏனென்றால் நான் அரசு ஊழியர் என்பதால் போட்டியிடமுடியாத நிலை. அதுவரை நான் ராஜி னாமா செய்யவில்லை. 1988இல் நான் வேலைக்கு சேர்ந்து 1999வரை பணியாற்றிக் கொண்டிருந்தேன். மொத்தம் பதினொரு ஆண்டுகள் நான் அரசு ஊழி யராக பணியாற்றிக் கொண்டிருந்தேன். 1999இல் மூப்பனார் அவர்களின் வற்புறுத்தலில் நானே வேட்பாளர் என்று ஒப்புதல் கொடுத்து எனது அரசு ஊழியர் பதவியை ராஜினாமா செய்தேன். அப்போது 1999 ஆகஸ்ட் 17. அந்தத் தேர்தலில் இரண்டு லட்சத்து இருபத்தி அய்ந்தாயிரத்துச் சொச்சம் வாக்குகள் பெற்றேன். பல்வேறு கலவரங்களுக்கிடையில் கிடைத்த வாக்குகள். அப்போது திமுக - பா.ம.க. கூட்டணி. திமுக ஆளுங் கட்சி. காவல்துறை, திமுக, பா.ம.க. எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய அளவில் நெருக்கடியை ஏற்படுத் தினார்கள். அப்போது எழுபது, எண்பது கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டன. பதினைந்து கிரா மங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் இளைஞர்கள் தாக்கப்பட்டார்கள். எண்பது பேருக்குமேல் எலும்பு முறிந்தது, மண்டை உடைந்து அதையெல்லாம் தாண்டி இரண்டு லட்சம் வாக்குகள் கிடைத்தன. அதற்கடுத்து 2001இல் 1999 தேர்தலில் எப்படி மூன்றாவது அணி உருவாகி போட்டியிடுகிற வாய்ப்பு கிடைத்ததோ, அப்படியே 2001 சட்டப் பேரவைத் தேர்தலில் கலைஞரோடு சேர்ந்து போட்டியிருக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போது தமிழகத்தில் எட்டுத் தொகுதியும் புதுச்சேரியில் 2 தொகுதியும் தந்தார்கள். நான் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மற்ற தொகுதியில் வெற்றிபெற இயல வில்லை. ஆனால், நல்ல வாக்குகள் கிடைத்தன. 2004 நாடாளுமன்றத் தேர்தல் வந்த போது சிதம்பரம் தொகுதி வேண்டும் என்று நான் முதல்வர் அவர்களிடத்தில் கேட்டேன். அப்போது அவர்கள் தருவதற்கான வாய்ப்பில்லை என்று மறுதலித்தார்கள். ஒரு உறுத்தல் நெருடல் வேதனையைத் தந்தது. தமிழ கத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் 24சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். இதை நான் சாதி உணர்வோடு பேசவில்லை. ஆனால் அரசியல் என்பது சாதி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு சமூகமும் எவ்வளவு வாக்கு வங்கிகள் பெற்றிருக் கிறார்கள், மக்கள் தொகை எவ்வளவு என்கிற அடிப்படையில்தான் காய்கள் நகர்த்தப்படுகின்றன. ஆகவே, இவ்வளவு பெரிய சமூகத்தைச் சார்ந்த ஓர் இயக்கம். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவம் பெற்ற சமூகமாக நாங்கள் இன்றைக்கு வளர்ந்து வந்திருக்கிறோம். ஆகவே, எங்களுக்கு ஒரே ஒரு இடம் வேண்டும் என்று கேட்டபோது பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்திருக்கலாம் எங்களுக்கு வழங்கப் படாதது வேதனையாக இருந்தது. அந்த வேதனையில் நான் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டேன். அதுவும் ‘உதயசூரியன்’ சின்னத்தில்தான் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். ஒரு மனக்கசப்பு ஏற்பட்டுவிட்டது. மனக்கசப்பு ஏற்பட்ட பிறகு எப்படி சட்டசபையில் போய் தி.மு.க. உறுப்பினராக இருந்து செயல்பட முடியும். ஆகவே, இந்தப் பதவி தேவை யில்லை என்று எனக்குள்ளே குமைந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். பிறகு மீண்டும் தனித்துப் போட்டி என்று அறிவித்தேன். அந்த நேரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி, ராஜ கண்ணப்பன் ஆகியோர் மூவரும் சேர்ந்து பேசுவோம் என்று கூப்பிட்டார்கள். நாங்கள் மூவரும் கலந்து பேசி ஒரு புதிய கூட்டணி ‘மக்கள் கூட்டணி’ என்று பேசி முலாயம்சிங்கிடம் போய் சைக்கிள் சின்னத்தை பெற்று கொண்டு வரலாம் என்று கண்ணப்பன் எங்களை அழைத்துக் கொண்டு டெல்லிக்குப் போக அங்கே நாங்கள் எதிர்பாராத வகையில் ஜார்ஜ்பெர்ணான்டசின் உதவியாளரை சந்திக்க நேர்ந்தது. எங்களை அழைத்துப் போய் ஜார்ஜ் பெர்ணான்டசிடம் கொண்டுபோய்விட எல்லாமே எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. அவர் எங்களைப் பார்த்து நீங்கள் எங்களோடு சேர்ந்து போட்டியிடுங்கள் நாங்கள் உங்களுடன் கூட்டணியில் இணைந்து கொள் கிறோம். நீங்கள் எங்களுடைய ‘அம்பு’ சின்னத்தில் போட்டியிடுங்கள் என்று சொன்னார். நாங்கள் முலாயம் சிங்கையே சந்திக்காமல் ‘அம்பு’ சின்னத்தில் போட்டியிடலாம் என்று சொல்லி, இங்கு வந்து போட்டியிட்டோம். இசுலாமியர்கள் என்மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பார்கள். எனக்கு வாக் களிப்பதாக முடிவெடுத்தார்கள். ஆனால், நீங்கள் ஜார்ஜ்பெர்ணான்டசோடு கூட்டணி வைத்து விட்டீர்கள் அவர் பாரதிய சனதாவில் தேசிய முன்னணியில் முக்கியமானவர் அதனால், உனக்கு வாக்களிக்க முடியாது என்று கடைசி நேரத்தில் சொல்லி கைவிட்டுவிட்டார்கள். அப்படி இருந்தும்கூட 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் எங்களோடு கூட்டணி வைத்த ஜார்ஜ் பெர்ணான்டசுக்கு வாக்கு இல்லை. டாக்டர் கிருஷ்ண சாமிக்கும் சிதம்பரத்தில் வாக்குகள் இல்லை, கண்ணப்பன் அப்போதுதான் புதிதாக கட்சியை கட்டியிருக்கிறார் அப்போது அவரது கட்சி வடிவமே பெறாத நிலை. நாங்கள் தனித்துப் போட்டியிடுகிறோம் என்பதுதான் நிலை. அப்படித் தனித்துப் போட்டி யிட்டோம் இரண்டு லட்சத்து அய்ம்பத்தி ஆறாயிரத்து சில்லரை வாக்குகள் பெற்றோம். உங்களை ஈர்த்தத் தலைவர் விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் மேதகு பிரபாகரன். நீங்கள் ரசித்து உங்கள் கல்லூரி நாட்களில் அழைத்துக் கொண்டு போனவர் வைகோ. இப்போது ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்து உங்களோடு ஒத்தக் கருத்துடைய பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி எல்லோரும் அதிமுகவில் இருக்கும் போது, காங்கிரஸ் எதுவுமே செய்யவில்லை என்று ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தோடு சேர்ந்து குரல் கொடுத்த நீங்கள் இப்போது திமுகவுடன் கூட்டணியில் இருப்பது உங்களுக்கு முரண்பாடாகத் தெரியவில்லையா? கொள்கை நிலைப்பாடுகளையும் கூட்டணி உறவுகளையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. கொள்கைகளை காப்பாற்றுவதற்காக கூட்டணியை யாரும் அமைத்துக் கொள்ளவில்லை. தேர்தல் கூட்டணி என்பது வெற்றி வாய்ப்பு என்கிற அடிப்படையில் குறைந்தபட்ச உடன்பாடு உள்ள புள்ளிகளில் அந்த உறவுகளை தீர்மானிக்க விரும்புகிறார்கள். கொள்கை அடிப்படையில்தான் தேர்தல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா வில் எந்தக் கட்சியும் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது. கம்யூனிஸ்ட்டுகளும் அதிமுகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முடியுமா கொள்கை அடிப்படையில்? கம்யூனிஸ்ட்டுகளும் திமுகவும் கொள்கை அடிப்படையில் கூட்டணி வைத்துக்கொள்ள முடியுமா? முடியாது. உடன்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால்,முரண்பாடான கருத்துகளும் ஏராளம் இருக்கின்றன. மதவாத சக்திகளை தீவிரமாக எதிர்ப்பது என்று கம்யூனிஸ்ட்டுகள் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால், பாரதிய சனதாவோடு கூட்டணி வைத்துக் கொள்கிற இயல்பு அதிமுகவுக்கு இருக்கிறது. அந்த அதிமுகவோடு சேர்ந்து எப்படி நிற்க முடிகிறது? ஆக, கொள்கை அடிப்படையில் கூட்டணி உறவு இல்லை. அதைப்போல் பாபர் மசூதியை இடித்த பிறகு ராமர் கோயிலை அங்கு கட்டப் போகிறோம் என்கிற கரசேவை நிகழ்வில் அதிமுகவில் இருந்து ஆள் அனுப்பப்பட்டது என்கிற செய்தி இருக்கிறது. இதைக் கடுமையாக எதிர்க்கிற வர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆனால், அங்கே அவர் களோடு கூட்டணி வைத்துக் கொள்ள முடிகிறது. சிறுதாவூர் பங்களா தொடர்பாக சிபிஎம்முக்கும் அதிமுகவுக்கும் கடுமையான முரண்பாடு. அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவை மிகக் கடுமையாக விமர்சித்து எதிர்த்து போராட்டங்களை நடத்தியது சிபிஎம். ஆக முரண்பாடுகளை மட்டும் வைத்துப் பார்த்தால் யாரும் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ள முடியாது. ஆனால், குறைந்தபட்ச உடன் பாடுள்ள புள்ளிகளில் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்றால் பாரதிய சனதாவோடு என்னால் கூட்டணி வைத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால், காங்கிர சோடு வைத்துக்கொள்ளலாம் என்கிறநிலை. காங்கிர சோடு பாரதிய சனதா எப்படி வேறுபடுகிறது என்றால், பாரதிய சனதா இந்துத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறது. இந்து சாதிய வர்ணாசிரம தர்மத்தை நியாயப்படுத்து கிறது. சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை களை மேற்கொள்கிறது. தீண்டாமை ஒழிப்பிலோ அல்லது சாதி ஒழிப்பிலோ உடன்பாடுள்ள இயக்கம் இல்லை. ஆனால், காங்கிரஸ் அதிலிருந்து மாறுபட்டது. தீண்டாமை ஒழிப்பை காந்தி முன்னெடுத்தார். தீண்டாமை ஒழிப்பிற்கான பல்வேறு செயல்திட்டங் களை காங்கிரஸ் நடைமுறைப் படுத்தி இருக்கிறது. கடந்த கால வரலாறும் சரி; இப் போதும் சரி. இந்தப் புள்ளிகளில்தான் இணைய முடியும். உண்மையில் தேர்தல் உறவு என்பது வெற்றி வாய்ப்பு. நேர்முரணான கொள்கை உள்ள கட்சிகளோடு உறவு வைத்துக்கொள்ள முடியாது. காங்கிரசோடு பாரதிய சனதாவால் உறவு வைத்துக்கொள்ள முடியாது. இதுகூட கொள்கை முரண்பாடில்லை. இரண்டும் தேசியக் கட்சிப் போட்டியாளர்கள். அதைப்போல திமுக, அண்ணாதிமுகவோடு உறவு வைத்துக் கொள்ள முடியாது. அண்ணாதிமுக, திமுகவோடு உறவு வைத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அதிகாரத்தளத்தில் இருவரும் நேரெதிரான தலைமைப் போட்டியாளர்கள். மற்ற கட்சிகள் எல்லாம் கூட்டணி வைத்துதான் தேர்தலைச் சந்திக்க முடியும். ஆகவே, அந்தக் கூட்டணி உறவில் கொள்கை நிலைப்பாடு களைப் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. அதிகார வலிமையைப் பெறுவதற்கான கூட்டணி உறவு. அந்த அதிகார வலிமை என்பது கொள்கை நிலைப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்துகிற ஒரு கருவி. அதுசரி. இடதுசாரிகள், பாமக, மதிமுக, காங்கிரஸ் எல்லோருமே அவர்கள் ஆட்சிக்காகவும் இந்தத் தேர்தலுக்காகவும் நடத்துகிறார்கள். ஆனால், உங்கள் கட்சியின் அடிநாதமே ஈழப் பிரச்சினையில்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸ்காரர் களோடு முழுமனதோடு அங்கே நீங்கள் இருக்க முடியுமா? ஏதோ ஒரு நெருடலோடுதான் நீங்கள் இருப்பதாக தெரிகிறதே? அதே நிலைப்பாட்டைத்தான் அதிமுகவுக்கும் மதிமுகவுக்கும் சொல்லலாம். மதிமுக புலிகளை வெளிப்படையாக ஆதரிக்கிற இயக்கம். அதிமுக காலத்தில் வைகோ ‘பொடா’ சட்டத்தில் கைது செய்யப் பட்டவர். பிரபாகரன் அவர்களை மிகமிக வெளிப் படையாகப் போற்றக்கூடியவர்கள். இன்றைக்கு, பிரபாகரன் சரணடைய வேண்டும்; பிரபாகரன் ஒரு சர்வாதிகார வெறியர்; பிரபாகரனை கைது செய்து இங்கே கொண்டு வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அவரைத் தண்டிக்க வேண்டும்; பொது மக்களை கேடயமாகப் பயன்படுத்தி, பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர் பிரபாகரன் என்றெல்லாம் பிரபாகரன் மீது ஒரு கடுமையான வெறியை கோபத்தை கொண்டிருப்பவர் செல்வி ஜெயலலிதா. அதே கோபம்தானே காங்கிரசுக்கும் இருக்கிறது? அதைத்தான் சொல்கிறேன். அவர்களால் எப்படி இணைந்து இருக்க முடிகிறதோ அந்தக் காரணங்களை இதோடு பொருத்திப் பார்க்க முடியாவிட்டாலும் கூட, இந்த முரண்பாடுகளைத் தள்ளிவைத்து விட்டு அவரவர் கொள்கை, அவரவர் நிலைப்பாடுகள் தேர்தலுக்காக தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது முன்னி றுத்தப்படுகிறது. இது தேர்தலில் தவிர்க்கமுடியாத எதார்த்தமான நிலை. வெளிப்படையாகப் பேசுவோம். எதையும் நான் பூசி மெழுகிப் பேசவில்லை. ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ தொடங்கப் பட்டது என்னுடைய பெரும் முயற்சி. கடந்த சனவரி மாதம் இரண்டாம் தேதி சிங்கள இராணுவம் கிளி நொச்சியை கைப்பற்றிவிட்டார்கள் என்ற பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து அரசியல் கூட்டணிகளைத் தாண்டி நாம் ஒன்றுபடுவோம் என்ற பிரகடனம் செய்து எல்லோரையும் சந்தித்தேன். பாமக நிறுவனர், பழ நெடுமாறன், ஆசிரியர் கி. வீரமணி எல்லோரையும் சந்தித்து உருவானதுதான் ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம். அந்த ஈழத்தமிழர் பாது காப்பு இயக்கத்தில் இடம் பெற்றவர்கள் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு, பழ நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் ஆகிய நான்குபேர். இந்த நான்குபேரும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு உடையவர்கள். நாங்கள் திமுகவோடுதான் போன தேர்தலில் இருந்து கூட்டணியில் இருக்கிறோம். நாங்கள் வெளியேறவும் இல்லை. வெளியேற்றப் பட்டதாக அறிவிக்கப்படவும் இல்லை. திமுக கூட்டணியில் தொடருகிற அதே வேளையில் திமுகவுக்கு எதிரான தலைவர்களோடு நான் இணைந்து பயணம் செய்தேன். ஏன்? ஈழத்தமிழர்களுக்காக எந்தப் போராட்டம் நடந்தாலும் யார் தலைமையில் நடந்தாலும் அதில் பங்கேற்க வேண்டும் என்பது என்னுடைய நிலைப்பாடு. அதில் உண்மையாகவும் தூய்மையாகவும் இருந்தேன். இந்த இடத்தில் கலைஞர் கோபித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது எங்கள் மீது ஆத்திரப்பட வாய்ப்பிருக்கிறது. அவருக்கு வேண்டாத வர்களோடு கைகோத்து நிற்கிறபோது கூட்டணி யில் இருந்து வெளியேற்றுகிற வாய்ப்பு இருக்கிறது. இதில் எந்த பாதிப்பு வேண்டுமானாலும் நடக்கலாம் அரசியலில். அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு அப்படி நடந்தாலும் நடக்கட்டும் அதைப் பற்றி கவலையில்லை என்கிற நிலையில், என்னுடைய முதல் வேண்டுகோள் என்னவாக இருந்தது என்றால், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் தனி அணி உருவானால் அது ஈழத்தமிழர் ஆதரவு அணியா கவே இருந்து செயல்படும். அதுதான் சரி. ஆனால், இது வேறெங்காவது மாற்று அணிக்குப் போய் விடக்கூடாது அது சரியல்ல என்பதைத் தொடர்ந்து சொல்லிவந்தேன். அதற்கு தா. பாண்டியன் அவர் களோ, வைகோ அவர்களோ, பாமக நிறுவனர் மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி அவர்களோ உடன்பட வில்லை. தேர்தல் வேறு இதுவேறு என்றார்கள். நான் வேண்டுகோள் விடுத்ததைப் போல இது ஒரு தனி அணியாக உருவாகி அதில் நான் இடம் பெறாமல் இருந்திருந்தால் என்மீது விமர்சனம் வைப்பதில் ஒரு பொருள் இருக்கிறது. நான் முயற்சிக் காமல் இருந்தால் என்மீது விமர்சனம் வைப்பதில் ஒரு பொருள் இருக்கிறது. திமுக பிடிக்கவில்லை அதனால் அதிமுக பிடிக்கிறது என்றால் இதைவிட ஒரு தவறான அல்லது பிழையான முடிவு எதுவும் இருக்க முடியாது. திமுக எங்களோடு சேர்ந்து ஆர்ப் பாட்டம் நடத்தியிருக்கிறது, பேரணி நடத்தியிருக் கிறது, மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறது, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக் கிறது, டெல்லிக்குப் போய் பிரதமரை சந்தித்து முறையிட்டிருக்கிறோம் இவ்வளவு முயற்சிகளையும் எடுத்தது திமுக. இதில் ஏதாவது ஒரு நடவடிக்கையை அதிமுக எடுத்ததா? எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு அதிமுக ஈழத்தமிழர் விவகாரத்தில் நேர் எதிராகச் செயல்பட்டது. ஆக, ஈழத்தமிழரைப் பற்றி எந்த அக் கறையும் இல்லாத அதிமுகவோடு சேர்வதென்பது ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கை. ஒன்று தனித்துதான் போட்டியிட வேண்டும் கடைசிவரை. யாருடனும் சேரமுடியாது. ஏனென்றால் சாதிஒழிப்புக் கொள்கையில் எத்தனை கட்சிகளுக்கு உடன்பாடு இருக்கிறது. தமிழ்த்தேசியத்தில் ஒருசில கட்சிகளுக்கு உடன்பாடு இருக்கிறது. பல கட்சி களுக்கு முரண்பாடு இருக்கிறது. தமிழ்த் தேசியத்தில் திமுகவும் அதிமுகவும் கூட ‘தமிழ்’ ‘தமிழ்’ என்று பேசினாலும் ‘தேசியம்’ என்று வரும்போது திராவிட தேசியத்தைத்தான் அவர்கள் குறிப்பிடுவார்கள். தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தமாட்டார்கள். ஆனால், அவர்கள் பேசுவது தமிழர்கள் வாழ வேண்டும், ஈழத்தமிழர்கள் வாழவேண்டும் அதெல் லாம் சரி. தேசியம் என்று வரும்போது திராவிட தேசியம்தான் அவர்களின் அடிநாதம். தமிழ்த் தேசியம் விடுதலைச்சிறுத்தைகளின் அடிநாதம். இப்படி ஒவ்வொரு கொள்கையாகப் பார்க்கும் போது, ஏகாதி பத்திய எதிர்ப்பில் எங்களுக்கு கம்யூனிஸ்ட்டுகளோடு உடன்பாடு இருக்கிறது. சாதியொழிப்புக் கொள்கை யில் ஒரு சில கட்சிகளோடுதான் உடன்பாடு இருக் கிறது. திமுகவுக்கும் சாதி ஒழிப்புக் கொள்கை உண்டு. அதை வெளிப்படையாகவே அறிவித்திருக் கிறார்கள். எத்தனை இயக்கங்கள் சாதியொழிப்பை முன்னிறுத்தி சாதிக்கொடுமைகளை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்கிறார்கள். ஆக, கொள்கை அடிப்படையில்தான் நாம் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் நாம் யாரோடும் உறவு வைத்துக் கொள்ள முடியாது. கடைசிவரை தனித்துதான் போட்டியிட வேண்டும். தனித்துப் போட்டியிட்டால் தேர்தலில் வெற்றிப்பெறவே முடியாது. வெற்றி பெறுவதென்பது மிக மிக அரிது. ஏனென்றால் இன்றைக்கு அப்படித்தான் இந்திய அரசியல் கட்டமைப்பு இருக்கிறது. எனவே, தேர்தல் உறவு என்பது வெற்றி வாய்ப் பிற்கான ஒரு தற்காலிக உறவு. வெற்றிப் பெற்ற பிறகு அவர்கள் நிலைப் பாடுகளில் இருந்து மாறாமல் செயல்பட வேண்டும். அப்படித்தான் இன்றைக்கு நாங்கள் பார்க்கிறோம். எங்களோடு பல்வேறு உடன்பாடுகள் இருந்தாலும் கூட ஈழப் பிரச்சினையில் முரண்பாடு இருக்கிறது. ஈழப்பிரச்சினையில் இன்றைக்கு எல் லோரும் என்ன குற்றச்சாட்டை வைக் கிறார்கள் என்று சொன்னால், திமுக காங்கிரஸ் ஈழத்தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை. திமுக சரியில்லை என்கிறபோது அதிமுக எப்படி சரியாகும். அதிமுக கூட்டணிக்குப் போகவில்லை என்று நிறையப் பேர் வருத்தப்படு கிறார்கள். ஈழவிடுதலையில் உடன்பாடே இல்லாத கட்சி அதிமுக. விடுதலைப்புலி களை மிகவும் கடுமையாகச் சாடுகிற கட்சி அதிமுக. பிரபாகரனை கைது செய்து விசாரித்துத் தண்டிக்கவேண்டும் என்று சொன்ன கட்சி அதிமுக. செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வெளிப்படையாகவே பிரபாகரனை கைது செய்து இந்தியாவில் கொண்டு வந்து தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அதற்கு அவசியமே எழ வில்லை அப்போது. சர்வதேசப் பத்திரிகை யாளர்கள் பிரபாகரனை சந்தித்தார்கள் என்பதைத்தவிர வேறு சூழ்நிலை அப் போது இல்லை. பிரபாகரன் சர்வதேச அளவிலான புகழ்பெற்ற தலைவராக இருப்பதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சர்வதேச ஊடகங்கள் பிரபாகரனின் பேச்சை நேரடியாக ஒளிப்பரப்பின. அதைக்கூட தாங்கிக் கொள்ளமுடியாமல் சட்டப் பேரவையில் வந்து ஆவேசமாக முழங்கி னார் செல்வி ஜெயலலிதா அவர்கள். அவரோடு ஈழத்தமிழர் பிரச்சனைக்காகப் போகவேண்டும் என்று சொல்வதை எப்படி நாங்கள் புரிந்துகொள்ள முடியும். திமுக தலைவர், விடுதலைச்சிறுத்தைகள் எங்களோடுதான் இருக்கிறார்கள் எங்களுக்கும் அவர்களுக்கும் கொள்கை அடிப்படையில் ஒன்றான சிந்தனை இருக்கிறது என்று சொன்ன போது, காங்கிரசில் இருந்து விடுதலைச்சிறுத்தைகளை இந்த அணியில் சேர்க்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் அனுமதித்தால் காங்கிரசை அவர்கள் தோற்கடிப்பார்கள், அல்லது நாங்கள் அவர்களைத் தோற்கடிப்போம், புலிகளுக்கு ஆதரவாக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறவர்களுக்கு காங்கிரசில் கூட்டணிகூடாது என்று குரல் எழும்பியதே? காங்கிரசில் இருந்து எழுந்தது என்று சொல்வதைவிட காங்கிரசில் இருந்து யாரோ ஒருவர் சொன்னார். அது அதிகாரப் பூர்வமான குரல் அல்ல. அதிகாரப்பூர்வ மான குரல் என்றால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழ்நாட்டைச் சார்ந்த ப. சிதம்பரம் அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஜி.கே. வாசன் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் குலாம்நபி ஆசாத் சொல்லியிருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சோனியாகாந்தி சொல்லி யிருக்க வேண்டும். வெளிப்படையாகவே சொல்கிறேன் ஞானசேகரன் அவர்கள் சொல்லியிருக்கிறாரே? ஞானசேகரன் ஒரு அதிகாரப்பூர்வமான நபர் அல்ல. அந்தக் கட்சியைச் சார்ந்த சட்ட மன்ற உறுப்பினர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு சொல்லி யிருந்தால் அது சரி. கூட்டணி கட்சியின் தர்மத்திற்கு இதை யெல்லாம் செய்துதான் ஆகவேண்டும். அதற்காக குழிபறிப்பது உள்ளடி வேலை செய்வது அதைப் போல் துரோகம் செய்வ தெல்லாம் விடுதலைச்சிறுத்தைகளுக்குத் தெரியாது. கூட்டணி தர்மத்தைக் கடை பிடிப்போம். நியாயமாக என்ன கேள்வி எழும் என்றால் காங்கிரசை ஒழிப்பேன் என்று நீங்கள் பேசினீர்களே இதை சந்தர்ப்ப வாதம் என்பதா? காங்கிரசை ஒழிப்போம் என்று நாங்கள் பேசுவதின் பொருளடக்கம் வேறு. அப்படியே அதுதான் எங்களின் செயல்திட்டம் என்றால் கூட்டணி உறவில் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல. ஒரு கட்சியில் கூட்டணியில் இருந்து வெளியேறுவதினால் அதனை ஒழித்துவிட முடியாது. அல்லது ஒரு கூட்டணியில் சேரவே மாட்டேன் என்று சொல்வதால் அதனை ஒழித்துவிட முடியாது. காங்கிரஸ் கட்சி ஒரு தேசியக் கட்சி. அது தமிழ் நாட்டில் தோற்றால்கூட வேறு மாநிலத்தில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க முடியும். ஆக, இந்தத் தேர்தல் கூட்டணி நேரத்தில் எடுக்கப் படுகிற முடிவை வைத்துதான் அவர்களை ஒழிப்பதா அல்லது ஒழிக்காமல் விடுவதா என்பதைப்பற்றிய விவாதம் தவறானது. சென்ற முறை சட்டமன்றத் தேர்தலில் நீங்களும் பாமகவும் தனித்தனியாக போட்டியிட்டதின் விளைவு தேமுதிக என்கிற கட்சி வளர்ந்தது. நீங்கள் ஒன்றாக இருந்தால் செல்வாக்கு உள்ள பகுதிகளில் அவர்கள் ஊடுருவி பலமான வாக்குகளைப் பெற்று விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதே நிலை நீங்கள் இருவரும் பிரிந்து இருப்பதால் தேமுதிகவிற்கு வலுவைச் சேர்க்குமா, சேர்க்காதா? தேமுதிக கட்சி ஊடகத்தால் தூக்கி நிறுத்தப்படுகிற ஒரு மாயை! திமுக அதிமுகவை பிடிக்காத ஊடகங்கள் மாற்று சக்தியாகக் காட்டுகிறார்கள். 234 தொகுதிகள் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தொகுதிகள். போனமுறை தேமுதிக 232 இடங்களில் போட்டியிட்டது. அவர்கள் டெபாசிட் வாங்கியது ஒன்பது தொகுதிகளில்தான். மிச்ச தொகுதிகளில் டெபாசிட் காலியான தொகுதி தேமுதிக. 232இல் 9போனால் எவ்வளவு 223 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த கட்சியை ‘மாற்றுக் கட்சி’ ‘மாற்று சக்தி’ என்று தமிழ்நாட்டு ஊடகங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. உங்களுக்கு தொகுதி வழங்கப்பட்டுவிட்டது. உங்களுடைய எதிரணி பாமக என்று தீர்மானிக் கப்பட்டு விட்டது. அப்படியென்றால் மிகவும் சென்சிட்டிவான (Sensive) சிதம்பரம் தொகுதியில் எப்படி இருக்கும்? சமூக நல்லிணக்கத்தையும் தமிழ்த்தேசியத்தையும் வளர்த் தெடுக்க வேண்டும் என்பதையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் மனப்பூர்வமான ஈடுபாடு கொண்டிருந்தது. அதனால் தான் கடைசி நிமிடம் வரை பாமகவை திமுகவில் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி எடுத்தேன். முயற்சித்தார். ஏனென்றால், அவர் அதிமுக விற்குப் போனதற்கு ஈழத்தமிழர் பிரச்சனை மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது. அப்படியென்றால் அவர் திமுகவுடன் பேசியிருக்கக்கூடாது. திமுக காங்கிரஸ் சரியில்லை என்றால் இவர்களுடன் பேசியிருக்கக் கூடாது. அவர்களின் அணுகுமுறை சரியில்லை. எங்களை யாரும் கூப் பிடவில்லை. எனக்குச் சரியான மரியாதை இல்லை. திமுகவுடன் சேருவதற்கு பாமக விற்கு என்ன சிக்கல் இருக்கிறதோ, திமுக வுடன் சேருவதற்கு மதிமுக வுக்கு என்ன நடைமுறைச் சிக்கல் இருக்கிறதோ அந்த நடை முறை போலத்தான் நாங்கள் அதிமுக கூட்டணிக்குப் போவதற்கும். நாங்கள் திமுக வேண்டாம் என்று சொல்லிவிட்டுவந்து நடுத் தெருவில் நிற்க முடியுமா தேர்தல் அரசியலில்? எங்களுக்கு என்ன அதிகாரப் பூர்வமான அழைப்பு இருந்ததா அதிமுகவில்? எங்களை அழைத்துப் பேசுகிற வாய்ப்பு இருந்தது என்று சொல்லமுடியுமா அதிமுகவில்? அழைத்தப் பிறகு எங்களுக்குரிய மரியாதையைக் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியுமா? பத்து கட்சிகள் சேர்ந்து ஓர் அணியில் நிற்கும் போது எங்களை எங்கு வேண்டுமானாலும் ஓரங் கட்டி இருப்பார்கள். இல்லை. நாங்கள் முதலிலேயே சொல்லி விட்டோம். ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் உருவான போதே, நாங்கள் எடுத்த எடுப்பிலேயே எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். ஈழத்தமிழர்களை மிக எதிராக பார்க்கக்கூடிய கட்சி அதிமுக. எல்லா அமைப்பும் ‘போரை நிறுத்து’ ‘போரை நிறுத்து’ என்று பேசிக் கொண்டிருந்த போது ‘போரை நிறுத்து’ என்றுகூட சொல்லாத கட்சி அதிமுக. காங்கிரஸ் கட்சி திமுகவை விட்டுப் பிரிந்து வெளியே வராது என்று தெரிந்த பிறகுதான் ஒருநாள் கூத்து, உண்ணாவிரதக்கூத்து நடத்தப்பட்டது. அது அப்பட்ட மான வெளிப்படையான மோசமான ஒரு நாடகம். எந்த உறவும் இல்லாமல் ஈழத்தமிழர்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நடத்தப்பட்ட ஒரு நாடகம். அதைக் காரணம் காட்டி அம்மா கூட்டணிக்கு வாங்க என்றால் எப்படிப் போக முடியும்.
|
|||||||
|
|
|||||||