கவிதை
காலச்சக்கரம்
- யுகபாரதி

மூங்கிலுக்குள் மட்டுமே
முடங்கிய காற்றை
மூச்சுக் குழலுக்குள்
மடைமாற்றும் காலமிது
வறண்டு கிடக்கும்
நம் சேரிக் கழனிகளுக்கு
மானுட நதி மய்யமிட்டு
பாயத் தொடங்குகிறது
கண்களை இழந்ததாய்
கவலையுற்ற தருணத்தில்
சூரியக் கைத்தடிகள் நமக்கு
சொந்தமாகிவிட்டன
அழுக்குகளை
அப்புறப்படுத்த
கிழக்குக் கீரிடம் நமக்கு
கிட்டியிருக்கிறது
பஞ்ச சீழ் வடிந்த
நம் பிள்ளைகளின்
காதுகளுக்குள்
பஞ்ச சீலம் நுழைகிறது
பூபாளமாய்
வெட்டி வெட்டிச் சாய்த்த
வீராய்யுக் கற்களைத்
தட்டித் தட்டி சிலையாக்கத்
தயாராவோம்
நந்தனை எரித்த
நெருப்பிலிருந்து
குடிசை வீடுகளுக்கு
குண்டு பல்ப்பை
ஏற்றத் தொடங்குவோம்
துவக்குகள் ஏந்தும்
நம் தூரத்து உறவுகள்
சிவக்கும் பொழுதுகளை
சீக்கிரம் காணக்கூடும்
ஈழம் என்றால்
ஓலமல்ல
காலமென்று கூவட்டும்
கதர்க் கோழிகள்
செயிண்ட் ஜார்ஜ்
கோட்டை முதல்
செங்கோட்டை வரை
எண்ணிக்கையாய்
இருந்த நாம்
நம்பிக்கையாய் மாறுவோம்
புழுதி படிந்த முகங்களை
ஒட்டடை நிறைந்த
அகங்களை
புன்னகைத் துரட்டியால்
புதிதாக்குவோம்
இனி
அசோக சக்கரம்
நம் ஊருக்குப் போகும்
வண்டி சக்கர
வடிவமாகட்டும்
அம்பேத்கர் என்பது
வாழும் பெயரல்ல
ஆளும் பெயரென்று
அறியட்டும் உலகம்.

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann