நாங்கள் இந்தியர்களா  இல்லையா?

எழுச்சித்தமிழர் ஆவேசம்

 

பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு அனுமதி வழங்கிய இந்திய அரசின் தமிழக விரோதப் போக்கைக் கண்டித்து கடந்த 24.6.2009 அன்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. சென்னை, நினைவு அரங்கம் முன் காலை 11 மணியளவில் தொடங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர்கள் வழக்கறிஞர் வீரமுத்து, கபிலன், இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். இந்திய அரசுக்கு எதிராக எழுச்சித்தமிழர் முழக்கமிட சிறுத்தைகள் பின் தொடர்ந்து முழக்கமிட்டனர். நிகழ்ச்சிக்கான பணிகளை இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை மைய மாவட்டச்செயலாளர் இரா.செல்வம் சிறப்பாகச் செய்திருந்தார். பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், கா.கலைக்கோட்டுதயம், தலைமை நிலையச்செயலாளர்கள் ஏ.சி.பாவரசு, வன்னி அரசு, எழுஞ்சிறுத்தை திலீபன், வா.வனச்செழியன், கடம்பன், மகளிர் விடுதலை இயக்க மாநிலத் துணைச்செயலாளர் யாழினி, மீனவர் மேம்பாட்டுப் பேராயம் மாநிலச்செயலாளர் சேரன், மாவட்டச்செயலாளர்கள் திருமாறன், பாலசிங்கம், சூ.க.விடுதலைச்செழியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர். நிறைவாக, எழுச்சித்தமிழர் கண்டன உரை நிகழ்த்தினார். 

        என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே, வணக்கம். ஓரிரு நாட்கள் இடைவெளியில் விடுத்த அழைப்பினை ஏற்று ஆயிரக்கணக்கில் இங்கு திரண்டு வந்திருக்கிற உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைக்கு மாநிலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் ஒன்றுகூடி ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாகவும், ஆகத்து 17 நிகழ்ச்சி குறித்து விவாதித்து முடிவெடுப்பதாகத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், திடீரென நமக்கு இந்த நச்சுச் செய்தி காதுக்கு எட்டவே, நிர்வாகிகள் சந்திப்பைத் தள்ளிவைத்து விட்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டு வதற்கு இந்திய அரசு அனுமதியளித்திருக்கிறது. இது தமிழ் இனத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசு செய்து வருகிற துரோகப் பட்டியலில்  இன்னொரு துரோகமாகும். இந்திய அரசு என்பது நீண்ட நெடுங்கால மாகவே தமிழ் இனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் எதிரான நிலைப்பாடுகளை எடுத்துவருகிறது என்பதை ஆதாரங்களோடு அடுக்கடுக்கான சான்றுகளோடு நம்மால் பட்டியலிட முடியும். அதற்குரிய  காரணங் களையும் ஆதாரங்களோடு விளக்க முடியும். குறிப்பாகச் சொல்லப்போனால் இன்றைக்கு  நம்முடைய நெஞ்ச மெல்லாம் பதறக்கூடிய வகையில், நம்முடைய அடிவயிறு பற்றி எரியக்கூடிய வகையில், எந்தக் காலத்திலும் நம்மால் சகித்துக்கொள்ள முடியாது என்கிற வகையில், தமிழினத்தால் என்றைக்குமே மன்னிக்க முடியாத வகையில் ஒரு துரோகத்தை இந்திய அரசு செய்திருக் கிறது என்று சொன்னால் அது ஈழத்தமிழர்களுக்கு எதிரான துரோகமாகும். ஈழத் தமிழினத்தை பூண்டோடு அழித்தொழிப்பதற்கு சிங்கள இனவெறியன் காட்டு மிராண்டி இராஜபக்சேவுக்கு வெளிப்படையாக அனைத்து வகையிலும் உதவிகளைச் செய்து ஊக்கப் படுத்தி, தமிழினத்திற்கே மன்னிக்க முடியாத ஒரு துரோகத்தை இந்திய அரசு செய்திருக்கிறது. மிக அண் மையில் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத, சகித்துக் கொள்ள முடியாத ஒரு கொடுமையான நிகழ்வாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிறோம். எனவே, இந்தியர்களாக வாழ்கிறோம். இந்திய அரசின் குடிமக்களாக வாழ்கிறோம். ஆகவே, இந்திய அரசிடம்தான் நம் முடைய கோரிக்கைகளை நாம் வைக்க முடியும். இந்திய அரசிடம் எப்படிப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் நாம் வைத்திருக்கிறோம் என்பது மிகப்பெரிய நீண்ட பட்டியல், அது நம்மிடத்திலே உள்ளது.

அதில் மிக முக்கியமாக, மாநிலங்களுக்கிடையி லான சிக்கல்கள் என்று வரும்போது, இந்திய அரசு, தமிழ்நாட்டிற்கு ஞாயப்படி எந்த உதவிகளையும் செய்யவில்லை. காவிரிநீர்ச் சிக்கலாக இருந்தாலும் சரி, முல்லைப் பெரியாறு அணை சிக்கலாக இருந்தாலும் சரி, பாலாற்று நீர்ச் சிக்கலாக இருந்தாலும் சரி, பவானி ஆற்றுச் சிக்கலாக இருந்தாலும் சரி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்குவது குறித்த சிக்கலாக இருந்தாலும் சரி, பெங்களூர்வாழ் தமிழர்கள் தாக்கப்படுகிற சிக்கலாக இருந்தாலும் சரி, எந்தச் சிக்கலிலும் தமிழ்நாட்டிற்கு, தமிழினத்திற்கு ஞாயப்படி ஆதரவாக இந்திய அரசு செயல்பட்டது இல்லை. காங்கிரசு ஆண்டாலும் சரி, பாரதிய சனதா ஆண்டாலும் சரி, சனதா அரசு ஆண்ட போதும் சரி, இதுவரையில் மாநிலங்களுக்கிடையிலான சிக்கல் என்று வரும்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு எதிரான நிலைகளைத்தான் இந்திய அரசு எடுத்திருந்திருக்கிறது.

கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் காவிரி நீர்ச் சிக்கல், கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பான சிக்கல், கர்நாடகத் திற்கும் ஆந்திர அரசுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலே பாலாற்றுச் சிக்கல், ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் பவானி ஆற்றுச் சிக்கல். இந்தச் சிக்கல்களில் தமிழகத்தின் பக்கத்தில் எவ்வளவு ஞாயம் இருந்தாலும், அந்த ஞாயத்திற்கு ஒருமுறைகூட வாய் திறந்து நமக்காகப் பேசியது இல்லை. தமிழ்நாடு இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தெற்குமுனையில் இருக்கிறது. மேற்கே கேரளா இருக்கிறது. வடக்கே ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன.

ஆகவே, அவை மேடான பகுதி என்கிற காரணத்தினால், மலைப் பகுதி என்கிற காரணத்தினால், ஆற்று நீரின் ஊற்று அங்கிருந்து தொடங்கி, கர்நாடகாவில் இறங்கி, ஆந்தி ராவில் இறங்கி அதற்குப் பின்னர்தான்  தமிழ்நாட்டிற்கு வருகிறது. காவிரிகூட அப்படித்தான். குடகு மலையில் உற்பத்தியாகிறது. பின் தமிழ்நாட்டில் நீண்ட தூரம் ஓடிக் கடலில் வந்து கலக்கிறது. தொடங்குகிற இடம் எல்லையால் பிரிக்கப்பட்ட காரணத்தினால் கர்நாட காவில் இருக்கிறது என்கிற வரலாறு உண்மைதான். ஆனால், அங்கே ஓடுகிற ஆற்றின் நீளம் குறைவு, 90 சதவீத காவிரி ஆறு தமிழ்நாட்டு எல்லைக்குள்தான் ஓடுகிறது; அப்படித்தான் பாலாறும்.

பாலாறு கர்நாடக எல்லையிலே தொடங்குகிறது. ஆனால், அங்கே வெறும் 82 கிலோ மீட்டர் நீளம்தான் ஓடுகிறது. பிறகு ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் வழியாகக் கடந்து வேலூர் மாவட்டத்திலே குன்னூர் எனும் இடத்திலே பாலாறு தொடர்கிறது. ஆந்திராவில் வெறும் 44 கிலோ மீட்டர் தான். மிச்சம் 242 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆறாக தமிழ்நாட்டில்தான் பாலாறு ஓடுகிறது. வேலூர் மாவட்டம் குன்னூரில் தொடங்கி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியாக ‘சத்ராஸ்’ என்று அழைக்கப்படுகிற சதுரங்கப்பட்டினத்தில் வந்து கடலில் கலக்கிறது. 242 கிலோ மீட்டர் தூரம் ஓடிவருகிறது. இந்தப் பாலாற்றில் தமிழ்நாட்டிலிருந்தும் பல காட்டாறுகள், துணையாறுகள் சேர்ந்து அந்த நீரின் அளவைப் பெருக்கி கடலில் கொண்டு போய்ச் சேர்க்கிறது.

இப்படிப்பட்ட இந்தப் பாலாறு தமிழ் நாட்டின் நான்கைந்து மாவட்டங்களின் மக்களை வாழ வைக்கிற, வளப்படுத்துகிற ஓர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரியின் ஒரு பகுதி. இப்படி இந்த ஐந்து மாவட்டங்களில் வாழ்கிற பல இலட்சக் கணக்கான மக்கள் குடிப்பதற்கும் பாசனத் திற்கும் இந்த ஆற்றை நம்பித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பான சிக்கல் 1890களிலேயே தொடங்கிவிட்டது. வெள்ளையன் ஆட்சிக் காலத்தில், கர்நாட கத்தில் கோத்தமங்கலம் என்கிற இடத்தில்  தண்ணீர் தடுக்கப்படுகிறது. அணை கட்டுவ தனால் தண்ணீர் வரத்துக் குறைகிறது.

எனவே, கால்நடைகளுக்குக் குடிநீர் இல்லை. நிலத்தடி நீர் மட்டம் குறைவதனால் மக்களுக்குக் குடிநீர் இல்லை. நீர் அளவு குறை வதனால் பாசனத்திற்குத் தண்ணீர் இல்லை என்கிற சிக்கல் 1890களிலேயே தொடங்கி விடுகிறது. அதனால், அன்றைக்கு ‘சமஸ்டி’ அரசாக  இருந்த மைசூர் அரசும் சென்னை ராஜதானி அரசும் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. மைசூரில் மைசூர் மன்னருடைய ஆட்சியாக இருந்த காலம். சென்னை ராஜதானி என்பது இன்றைக்கு இருக்கிற தமிழ்நாடு அல்ல. அன்றைக்கு ஆந்திராவிலுள்ள சில பகுதி களையும் உள்ளடக்கியிருந்தது.

1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியன்று மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்படிப் பிரிக்கப்பட்டபோதுதான், தமிழ்நாட்டிலே சேரவேண்டிய சித்தூர் மாவட்டம் ஆந்திராவுக்குப் போய்விட்டது. தமிழ்நாட்டுக்குச் சேரவேண்டிய திருப்பதி மாவட்டம் ஆந்திராவுக்குப் போய்விட்டது. தமிழ்நாட்டிற்குச் சேர வேண்டிய மூணாறு, திருவனந்தபுரம் ஆகிய இடங் களெல்லாம் கேரளாவுக்குப் போய்விட்டன. பெங்களூர் கூட தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டியதுதான். ஆனால், அது கர்நாடாகவிற்குப் போய்விட்டது. மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது அவரவர் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், அவர்கள் எழுப்பிய குரலில் இருந்த வலிமையைப் பொறுத்து அல்லது அரசியல்ரீதியாக அவர்கள் செய்த சிபாரிசுகளைப் பொறுத்து அந்த எல்லைகள் மாறிப் போய்விட்டன. திருத்தணிகூட நமக்குக் கிடைக்காத நிலை இருந்தது. எல்லைப் போராட்டம் நடந்ததால் திருத்தணி மீட்கப்பட்டது.

சென்னையும் இல்லை என்று சொன்னார்கள். சென்னையை விட்டுக்கொடுத்தால் திருப்பதியைத் தருகிறோம் என்றார்கள். அல்லது திருப்பதியை வைத்துக் கொள்கிறோம் சென்னையைத் தருகிறோம் என்று பேச்சு வார்த்தை நடந்தது. கடைசியில் திருப்பதி போனால் போகட்டும்; சென்னை வேண்டுமென்று அன்றைய தலைவர்கள் பேச்சுவார்த்தையிலே ஒரு சமாதானத்துக்கு வந்து, சென்னை மீட்கப்பட்டது. திருப்பதியை நாம் இழந்தோம். இல்லையென்றால் திருப்பதியும் இன்று தமிழ்நாட்டில் இருந்திருக்கும். 

1892இல் சென்னை இராஜதானிக்கும், மைசூர் அரசுக்கும் ஓர் ஒப்பந்தம் உருவானது. மைசூர் அப்போது மன்னரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு பகுதி. அப்போது மைசூர் சமஸ்டி இந்தியாவாக இருந்தது. வெள்ளைக்காரன் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதிகளெல்லாம் பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டது. மன்னர் களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளெல்லாம் சமஸ்டி இந்தியா என்று அழைக்கப்பட்டது. ஹைதராபாத் நிஜாம், மைசூர், திருவிதாங்கூர் இவையெல்லாம் சமஸ்டி இந்தியா. இந்தப் பகுதிகளெல்லாம் வெள்ளைக்காரனுக்கு வரி கட்ட வேண்டிய தேவை இல்லை. வெள்ளைக்காரன் வெளியேறிய  பிறகுதான் சமஸ்டி இந்தியாவும், பிரிட்டிஷ் இந்தியாவும் ஒன்றாக்கப்பட்டு இன்றைய இந்தியா உருவாக்கப்பட்டது.

ஆகவே, மைசூர் அரசு அன்றைக்கு, சென்னை ராஜதானி என்ற பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த ‘மதராஸ்’ மாநில அரசோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. அந்த ஒப்பந்தப்படி பாலாற்றின் குறுக்கே கர்நாடகத்திலோ அல்லது ஆந்திர எல்லையிலோ யாரும் அணை கட்டக்கூடாது. அணை கட்டினால் நீர் வரத்துப் பாதிக்கப்படும். அதனால், தமிழ்நாட்டிலுள்ள ஐந்து மாவட்டங்களைச்  சேர்ந்த மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். விவசாயம் பாதிக்கப்படும்.

எனவே, அணை கட்டக்கூடாது என்பது தான் அந்த ஒப்பந்தம். ஆனால், 1990-91 வாக்கில் கோத்தமங்கலம் என்கிற இடத்தில் 10 அடி உயரத்தில் ஒரு அணயைக் கட்டினார்கள். அந்த அணை ஒப்பந்தத்தை மீறிக் கட்டப்பட்டது தான். ஆனால், அதற்குப் பிறகு அந்த அணையை உயர்த்தக்கூடாது என்று வழக்குத் தொடுக்கப் பட்டது. அதற்கிடையில் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் எடுக்கப் பட்டும்கூட அதை மீறி ஆந்திராவில் சித்தூர் மாவட்ட எல்லைக்குள்ளேயே 22 தடுப்பணை களை 30 மைல் இடைவெளியில் கட்டியிருக் கிறார்கள். முதல் அணை நிரம்பி வழிந்தால் தான், இரண்டாவது அணைக்கு நீர் வரும். இப்படி 22 அணைகளும் நிரம்பிய பின்னர், அதன் பிறகு தண்ணீர் வழிந்தோடி வந்தால் தான் தமிழ்நாட்டிற்குள் நீர்வரும். அப்படி வருகிற தண்ணீர்தான் நமக்கு ஏரிப் பாசனத் திற்கு, குடிநீருக்கு, கால்நடைகளுக்குப் பயன் படுத்தப்பட்டு வந்தது. இதெல்லாம் ஒப்பந்தத்தை மீறி நடந்தது.

இதற்கிடையே இவ்வளவு ஒப்பந்தங் களையும் தாண்டி ஆந்திரா அரசு மறுபடியும் ஒரு புதிய அணையை கட்டுவதற்கான முயற்சி நடந்தபோதுதான் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் கிளம்பி, பல போராட்டங்கள் நடத்தி, அதற்கென்று பல குழுக்கள் அமைக் கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக் கப்பட்டு அவை நிலைவையில் இருக்கிற போது எந்த அடிப்படையில் இந்திய அரசு, ஆந்திர அரசுக்கு அனுமதி தந்திருக்கிறது? இதுதான் இப்போது நம் முன்னால் உள்ள கேள்வி. தமிழ்நாட்டு மக்களுக்குத் தொடர்ந்து இந்திய அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று நான் தொடக்கத்திலேயே குறிப்பிட் டேனே. இப்படித்தான் அந்தத் துரோகம். தமிழ்நாட்டு மக்களையும் தமிழினத்தையும் இந்திய அரசு ஒரு  பொருட்டாகவே மதிக்க வில்லை என்பதற்கு மீண்டும் ஒரு சான்றாக ஓர் ஆதாரமாக அமைந்திருக்கிறது.

இதற்கிடையில் பாலாற்றில், மணல் கொள்ளைகள் ஏராளமாய் நடந்திருக்கின் றன. தொடர்ந்து நடந்துகொண்டேயிருக் கின்றன. மணலைக் கொள்ளையடிப்பதன் மூலமாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்து கொண்டேயிருக்கிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைவதனால் அந்தக் கரையோரங்களில் வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான கிராமங் களைச் சேர்ந்த  மக்களுக்கு குடிநீர்ச் சிக்கலும் நீர்ப்பாசனக் சிக்கலும் ஏற்பட்டு விடுகிறது. மணல் என்பது  இயற்கை நமக்குக் கொடுத்திருக்கிற அருங்கொடை. மணல் என்பது ஒரு நாளில் உருவாகக்கூடிய ஒரு பொருள் அல்ல. சிமெண்ட்டை நாமே உற்பத்தி செய்து விடலாம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மூலப்பொருள், தாய்ப் பொருள் இருக்கின்றது.

ஆனால், மணலுக்கு அப்படி மூலப்பொருள், தாய்ப் பொருள் கிடையாது. மணல் என்பது இயற்கையிலேயே இலட்சக்கணக்கான ஆண்டுகளாக மலைகள் உடைந்து பாறைகளாகி, பாறைகள் உடைந்து சிறு கற்களாகி உருண்டு, பிறகு சிறு கற்கள் அந்த ஆற்றில் உருண்டு, அவை சிறுசிறு கற்களாக மாறி, அந்தச் சிறு கற்கள் மீண்டும் உருண்டு உருண்டு பல்லாயிரக் கணக்கான மைல்கள் ஓடி, அது உடைந்து சிறு கூழாங்கற்களாக மாறி, அது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நீரோட்டத்திலேயே உருண்டோடி உருண்டோடித் தேய்ந்து பிறகு அது மணலாக வேண்டும்.

மணல் உற்பத்தியை ஒரு வருடத்திலோ, இரண்டு வருடத்திலோ ஆயிரம் வருடத்திலோ செய்துவிட முடியாது. இலட்சக்கணக்கான ஆண்டுகளில் பரிணா மத்திலே உருவாவது மணல். அந்த மணலை முற்றிலு மாகச் சுரண்டிச் சுரண்டி அள்ளிவிட்டால் நீர் எங்கும் நிலத்தடியில்  சேராது. பரவாது. எங்கே பள்ளம் இருக்கிறதோ அந்தப் பள்ளத்தை நோக்கி ஓடிவிடும். மணல் இருக்கும்போது, அந்த இடங்களில் நீர் இறங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயரும். ஒரு காலத் திலே 40 அடி 50 அடி தோண்டினால் நீர் கிடைத்து விடும். ஆனால், இப்போது 80 அடி தோண்டினால் கூட நீர் கிடைப்பதில்லை. காரணம், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே போகிறது. ஏன் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது என்றால் ஆற்றுப் பகுதிகளிலிருந்து மணலை அள்ளுவதனால், மணலைச் சுரண்டுவதனால் ஏற்படுகிற சிக்கல் இது. பாலாறு மணற்கொள்ளையின் இடமாக மாறி விட்டது. அதனால், எவ்வளவோ அநியாயங்கள், அக்கிரமங்கள், கொலைகள் நடந்து கொண்டிருக் கின்றன. இப்படிப் பாலாற்றில் மணல் கொள்ளையடிக்கின்ற நிலைமை ஒருபுறம் நம்முடைய நிலத்தடி நீர் மட்டத்தைக் குறைத்து இயற்கையிலேயே நம்மை குடிநீர்ச் சிக்கலுக்குத் தள்ளுகிறது.

இன்றைக்கு ‘இடுக்கி’ பக்கத்தில் புதிய அணையைக் கட்ட கேரளா ஆய்வு நடத்திக்கொண்டிருக்கிறது. இந்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆக, காவிரிச் சிக்கலால் தமிழ்நாட்டில் ஏழு, எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. முல்லை பெரியாறு அணைச் சிக்கலால் ஐந்து  மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. பாலாற்றுச் சிக்கலால் ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. இப்படி ஒட்டுமொத்தமாக ஏறத்தாழ இருபது மாவட்டங் களுக்கு மேலாக அண்டை மாநில ஆக்கிரமிப்பால் ஆதிக்கத்தால், தமிழ்விரோதப் போக்குகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக் கெல்லாம் என்ன தீர்வை இந்தியா தந்திருக்கிறது? காங்கிரசுக் கட்சியும் பாரதிய சனதாவும் தமிழர் களின் உணர்வுகளை மதிக்கிறார்களா?

ஆறுமாத காலம் எம் மக்களைக் காப்பாற்றுங்கள் என்று கதறினோமே, கத்தினோமே, கெஞ்சினோமே, அழுதோமே இந்திய அரசு காது கொடுத்துக் கேட்டதா? வெளிப்படையாக ஆதரவைத் தந்து அவர்களை ஊக்கப்படுத்தி எம் தமிழினத்தை ஒட்டு மொத்த மாக முல்லைத் தீவில் அழித்தொழிப்பதற்குத் துணை போய்விட்டார்களே. இது எவ்வளவு பெரிய துரோகம்? வரலாற்றில் தமிழகம் இதை மன்னிக்கவே மன்னிக்காது.

பட்டப்பகலில் வெட்ட வெளியில் ஓர் இனத்தை அழித்தொழித்த காட்டுமிராண்டி இராசபட்சேவுக்குத் துணைபோன துரோகம் மன்னிக்க முடியாத துரோகம். ஒரே  ஒரு வார்த்தைகூட போரை நிறுத்து என்று சொல்வதற்குத் திராணி இல்லை அல்லது மனமில்லை. உலக நாடுகள் எல்லாம் வேடிக்கை பார்த்தன. சரி அவர்கள் யாரோ, நாங்கள் யாரோ, எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன உறவு? ஆனால் எங்களுக்கும் இந்திய அரசுக்கும் உறவு உண்டா இல்லையா? எங்களுக்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உண்டா இல்லையா? இந்திய எல்லைகளுக்குள் வாழ்கிற நாங்கள் இந்தியர்களா இல்லையா? எங்கள் குரலுக்கு என்ன மதிப்பு? நீங்கள் ஈழத்தமிழர் குரலுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாம். ஆனால், தமிழ்நாட்டுத் தமிழர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டாமா?

தமிழ்நாட்டில் உள்ள  ஆறரைக் கோடித் தமிழர் களின் குரலுக்கு என்ன மரியாதை? ஓட்டுப் போடு வதற்காக மட்டுந்தான் தமிழன் வாழ்கிறானா? ஈழத் தமிழர்களுக்காக நாங்கள் குரல் கொடுத்தால் அதற்கு மதிப்பில்லை. பாலாற்றுக்காக மண்டி யிட்டால் மதிப்பில்லை. காவிரிக்காகக் கையேந்தி னால் அதற்கும் மதிப்பில்லை. இந்திய அரசு என்ன தான் எண்ணுகிறது. தமிழர்களுக்கு என்னதான் மதிப்பளித்திருக்கிறது? என்ன மரியாதை அளித் திருக்கிறது? இவைதான் இன்றைக்கு நம்முன்னால் இருக்கிற மிகப்பெரிய  சவாலாக இருக்கின்றது. ஆகவே, தமிழகத்தில் வரும் தலைமுறையினர் இத்தகைய சூழலை எல்லாம் புரிந்துகொண்டு எதிர்காலத் தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு நிறைவு செய்கின்றேன். நன்றி, வணக்கம்.

24.6.2009 அன்று நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்தில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை
தொகுப்பு: நீல.தமிழேந்தி
உதவி: வீர.பொன்னிவளவன், குணவேந்தன் (குமார்)

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann