கூட்டணியைப் பற்றி கவலையில்லை

“ஈழத்தமிழர்களுக்கான
எனது குரல் தொடர்ந்து ஒலிக்கும்”

எழுச்சித்தமிழர் ஆவேசம்

 

ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பில் பேரணி, பொதுக்கூட்டங்கள் தமிழ் நாடு முழுக்க நடத்த முடிவு செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக மதுரையில் கடந்த 13.6.2009ஆம் நாள் பேரணி நடைபெற்றது. ஜான்சிராணி பூங்கா வில் தொடங்கிய பேரணி மேலமாசி வீதி வழியாக வந்து வடக்குமாசி வீதி-மேலமாசிவீதி சந்திப்பில் நிறைவடைந்தது. இதில் ஈழத்தில் தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் தாக்கப்பட்டு உடலில் காயங்களுடன் இருப்பதைச் சித்தரிக்கும் வகையில் சிலர் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து இரவு பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத் திராவிடர் கழக சட்டத்துறை மாநிலத் தலைவர் மகேந்திரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் நேரு ஆகியோர் தலைமை தாங்கினர். திராவிடர் கழக தென்மாவட்டப் பிரச்சாரக்குழு அமைப்பாளர் எடிசன் ராஜா முன்னிலை வகித்தார்.

 

திராவிடர் கழக மாவட்டத் தலைவர் செல்வம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலா ளர்கள் எல்லாளன், பாண்டியம்மாள் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள். ஆசிரியர் கி.வீரமணி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், வா.மு.சேதுராமன், பொன்குமார் உள்படப் பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் சுப. வீரபாண்டியன் பேசும்போது, “விடுதலைப்புலிகளை அழிக்க சிங்கள அரசு இந்தியா, பாகிஸ் தான், சீனா, ஈரான் ஆகிய நாடுகளின் உதவியை நாடி தற்போது அழித் துள்ளது. எனவே, விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த 4 நாடுகளுக்கும் எதிரான போரில்தான் தோற்று உள்ளது. இது அவர்களுக்கு வீழ்ச்சி அல்ல, வெற்றிதான். இப்போது இலங்கையில் தமிழர்கள் அனைவரும் முகாம்களில் ஆண்கள், பெண்கள் எனத் தனித்தனியாக அடைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, உடை என்று எதுவும் தருவதில்லை. அவர்களின் வாழ்வுரிமைக்காகத் தான் இந்த இயக்கம் போராடி வருகிறது” என்றார்.

எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் பேசுகை யில், “உலகம் முழுவதும் 10 கோடித் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களால் இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்படுவதைத் தடுக்க முடிய வில்லை. இதை என்னால் சகிக்க முடியவில்லை. உலகில் 500 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களில் ஒருவராவது பிரபாகரன் போன்று உள்ளார் என்று உங்களால் கூற முடியுமா? எனவே தான் அவரை தமிழர்கள் மாவீரன் என்று அழைக்கிறார்கள். அமெரிக் காவை பின்லேடன் தாக்கிய போது, அமெரிக்கா, உலகில் உள்ள பயங்கரவாத இயக்கத்தை கணக்கெடுத்து அழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தது. அந்த இயக்கத்தில் விடுதலைப் புலிகளையும் சேர்த்து விட்டனர். அதன் பின்னர்தான் அந்த இயக் கத்திற்கு பல நாடுகள் உதவி செய்ய முடியாமல் போனது.


கடந்த 6 மாதத்தில் இலங்கை யில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். தமிழர்களுக்கு எதிரான போரை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று அப்போது இந்திய அரசு கூறவில்லை. இது மன்னிக்க முடியாத குற்றம். இதைத்தான் நான் நாடாளுமன்றத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது என்று கூறினேன். இந்தப் போக்கை இந்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும்.

நான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, பிரதமர், காங்கிரஸ் தலைவி, எதிர்க்கட்சித் தலை வர் என்று அனைவரும் இருப்பார்கள் அப்போது நான் பேசலாம் என்று நினைத்தேன். ஆனால், அவர்கள் யாரும் அங்கு இல்லை. வெறும் 35 பேர்தான் இருந்தார்கள். இது எனக்கு வருத்தமாக இருந்தது.

இந்தியாவில் உள்ள மாநிலம் அருணாச்சலப் பிரதேசம். ஆனால், சீனா இது தன்னுடைய மாநிலம் என்று கூறிவருகிறது. அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவுடன் இருக்கிறதா? இல்லை சீனாவுடன் இருக்கிறதா என்று இந்திய அரசு தெளிவாகக் கூறட்டும். இதை நாம் வெளிப் படையாகக் கேட்கிறோம். இவ்வாறு நாம் கூறினால் கூட்டணியில் விருப்பமிருந்தால் வைத்துக் கொள்ளட்டும்; அதைப்பற்றிக் கவலை யில்லை. இலங்கையில் தற்போது 4ஆம் கட்டப் போர்தான் முடிந்துள்ளது. இந்தப் போரில் சிங்கள ராணுவம் வெற்றிபெற்று இருக்கலாம். ஆனால், 5ஆம் போரில் பிரபாகரன் தோன்றுவார். அவர்தான் போரை நடத்துவார். அவர் அதில் வெற்றியும் பெறுவார். ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மீட்புப் பணியும் வாழ்வுரிமையும் பெற்றுத்தரும்” என்றார்.

நிறைவாக ஆசிரியர் கி. வீரமணி பேசுகையில், “எனக்கு முன்னால் பேசியவர்கள் நிறைய பேசிவிட்டார்கள். அதனால் நான் சில முக்கிய செய்திகளை மட்டும் உங்களிடம் கூறுகிறேன். நாங்கள் ஆரம்பித்துள்ள இயக்கம் யாருக்கும் எதிரி அல்ல. எங்களுக்கு ஒரே எதிரி ராஜபக்சேதான். தமிழர்களை இனம், சாதி, மதம் எனத் தனித்தனி யாகப் பிரித்து வைத்துள்ளனர். எனவே, தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் இன உணர்வு கொள்ள வேண்டும். போரில் மாண்டவர்கள் மீள்வார்கள்” இவ்வாறு பேசினார்.

 

************************


முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann