மதிப்பிற்குரிய மன்மோகன்சிங் அவர்களுக்கு, வணக்கம்.
மலைவாழ் மக்களுக்கு தனி அமைச்சகம் அமைத்ததைப் போல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி ஆணையம் அமைக்க கோரி லோக் சபாவில் கடந்த 8.6.2009 அன்று எனது முதல் உரையில் கூறியதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
2001ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 16.23 விழுக்காடு தாழ்த்தப்பட்ட மக்கள் இந்நாட்டில் பல்வேறு இடங்களில் வாழ்கின்றனர் என்று தாங்களுக்கு நன்கு தெரியும். இம்மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகளும் பலதரப்பட்ட சிக்கல்களும் உள்ளன. இம்மக்களின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டுமே பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி கொண்டிருக் கின்றனர் என்பது உண்மை. ஆனால், தொடர்ந்து அவர்கள் கொடுமைகளுக்கும் அடக்குமுறை களுக்கும் ஆளாகிறார்கள். அவர்களின் பொருளாதாரம் மற்றும் கல்வி முன்னேற்றம் திருப்திகரத்திலிருந்து தூரமாய் உள்ளது. மொத்தமுள்ள தாழ்த்தப்பட்ட மக்களில் 75 சதவிகிதத்தினர் கிராமங்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ விவசாயத்தையே சார்ந்து வாழ்கின்றனர். மிக சொற்பமான மக்களே நிலங் களுக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். எஞ்சி யுள்ள மக்கள் விவசாயக் கூலிகளாக உள்ளனர். இவைகளே இம்மக்கள் எதிற்கொள்கின்ற பிரச்சனைகளில் சில. தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர் கொள்ளும் தீண்டாமை என்னும் ஆழ்ந்தப் பிரச் சனை இன்னும் மௌனிக்கப்பட்டு அதை பரீட் சிக்க கவனிக்கத்தக்க முயற்சிகளை கோரு வதாக இருக்கின்றது.
தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஊனமுற்றோர் மற்றும் மூத்தக் குடிமக்களின் நலன் தற்போது சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.இவை ஒவ்வொன்றும் நெருக்கமான மற்றும் சிறப்பான கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய பூதாகரமான பிரச்சனை களாக இருக்கின்றன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஈடுபட்டுள்ள பாரம்பரிய தொழில்களில் உள்ள சிக்கல்கள், கல்வியில் வேற்றுமை போன்ற ஆழ்ந்த பிரச்சனைகளை பிற்படுத்தப்பட்டுள்ள வகுப்புகள் கொண்டுள்ளன. துரதிர்ஷ்டமாக 19 ஆண்டுகளுக்கு முன்னர் தான் பிற்படுத்தப்பட்ட மக்களை இந்திய அரசு அங்கீ கரித்தது. முன்னேற்றத்திற்கான முழு கவனமும் அவர்களுக்கு தேவைப்படுகிறது. தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ற சமூகப் பிரிவைப்போல உடல் ரீதியாக, மனரீதியாக ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி பிரிவு இல்லை. அவர்கள் தனி கவனம் செலுத்தப்பட வேண்டிய நிலையில் உள்ளனர்.
எனவே, இச்சூழ்நிலையில் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் தனி தனி அமைச்சகம் அமைப்பது பயனுள்ளதாகயிருக்கும். இவை இவர்களுக்குரிய தனிப்பட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கும், வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு தனி கவனம் செலுத்தவும் ஏதுவாகயிருக்கும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஊனமுற்றோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் தனி தனி அமைச்சகம் அமைப்பதை கவனத்தில் கொள்ளுமாறு நான் தங்களிடம் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். நீங்கள் எடுக்கும் இம்முயற்சிக்கு, இந்த சமூகத்தைச் சார்ந்த மக்கள் என்றென்றும் உங்களை பாராட்டுவார்கள்.
நன்றி.
தங்கள் உண்மையுள்ள
தொ.திருமாவளவன்
சூலை 3, 2009
தமிழாக்கம் : ஜீடி ரோச்