'ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’:

ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க உருவானது

 

ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க உருவானது
ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்


தேர்தல் முடிந்ததும் எல்லோரும் வெற்றி தோல்விகளைப் பற்றி கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் போது, எந்தவித இலாபநட்டக் கணக்குகளையும் பார்க்காமல் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் ஈழத் தமிழர் நலன் குறித்தே சிந்திக்கத் தொடங்கினார். அதன் விளைவு ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’ உருவானது.


மே 19ஆம் நாள் பெரியார் திடலுக்குச் சென்ற எழுச்சித்தமிழர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட இயக்கப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுபவீ ஆகியோருடன் ஆலோசனை செய்து அடுத்தக் கட்டப் போராட்டங்கள் குறித்துப் பேசினார். அப்போது, ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’ என்கிற பெயரில் செயல்பட முடிவு செய்யப்பட்டது.


திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள், திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆகிய இயக்கங்கள் சேர்ந்து செயல்பட முடிவுசெய்யப்பட்டது. மேலும், பல இயக்கங்களைச் சேர்ப்பது குறித்து அடுத்தடுத்த அமர்வுகளில் முடிவு செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து மே 23ஆம் நாள் பெரியார் திடலில் நடைபெற்ற இரண்டாவது அமர்வில், கூடுதலாக கவிஞர் மு.மேத்தா, விவசாயத் தொழிலாளர்கள் கட்சித் தலைவர் பொன்.குமார், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.


1. ‘ஈழத்தமிழர்களைக் காப்போம்’ எனும் பொருளில் கீழ்க்கண்ட ஊர்களில் பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது. கூட்டத்தில் ஈழத்தமிழர் வாழ் வுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்படுகிறது.


1.6.2009 மாலை சென்னை, சைதாப்பேட்டை தேரடித் தெருவில் பொதுக்கூட்டம்
7-6-2009 மாலை திருச்சியில் பேரணி- பொதுக்கூட்டம்
13-6-2009 மாலை மதுரையில் பேரணி- பொதுக்கூட்டம்
பேரணி-பொதுக்கூட்டத்தின்


நோக்கங்கள்
1. ஈழ மண்ணில் உணவின்றியும் மருந்தின்றியும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களுக்கு, பன்னாட்டுப் பார்வை யாளர்களின் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்.


2. சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை அவரவர் பகுதியில் மீள்குடியேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.


3. தமிழின அழிப்பையே நோக்கமாகக்கொண்டு, தமிழீழ மக்களை அழித்தொழித்த இராஜபக்சேயைப் போர்க்குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.

4. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று, உடனடியாக இலங்கைக்குச் சென்று உண்மை களைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.


5. இலங்கைக்கான இந்தியத் தூதுவராக தமிழர் ஒருவரை உடனடியாக நியமிக்கப்படவேண்டும்.


எழுச்சித்தமிழர் 1-6-2009 அன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளில் பங்கேற்கச் சென்றதால் சென்னை பொதுக்கூட்டம் 7-6-2009ஆம் நாள் நடத்தப்பட்டது.

 

வதைமுகாம்களில் சிக்கியிருக்கும்
ஈழத்தமிழர்களைக்காப்பது
நம் கடமை

எழுச்சித்தமிழர் முழக்கம்


ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம் சார்பில் சைதாப்பேட்டை தேரடி திடலில் கடந்த 7.6.2009 அன்று பொதுக்கூட்டம் நடை பெற்றது. திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் வில்வநாதன் தலைமைதாங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் தலைமை நிலையச் செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொறுப்பாளர் மாறன் முன்னிலை வகித்தனர். தோழர் மகாலட்சுமி வரவேற்புரை நிகழ்த்தினார்.

இப்பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன், மு.மேத்தா, பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், பொன் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.


கூட்டத்தில் மேதகு பிரபாகரன் குறித்தும், எழுச்சித்தமிழர் குறித்தும், கவிஞர் தணிகைச் செல்வன் எழுச்சிக் கவிதை படித்தார். பின்னர் எழுச்சித்தமிழர் நாடாளுமன்ற உறுப்பினரானதற்கு வாழ்த்திப் பொன்னாடை அணிவித்தார்.

கூட்டத்தில் எழுச்சித்தமிழர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ இருக்கும்போது எதற்கு ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’ என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஆனால், இதுதான் உண்மையான இயக்கம் என்று சொல்லவேண்டிய கடமை எமக்கு உண்டு. பழ.நெடுமாறன் உள்ளிட்ட அனைத்துத் தலைவர்களையும் நாம் மதிக்கிறோம்.

ஈழத்தமிழர்ச் சிக்கலைத் தமிழகத் தேர்தலோடு இணைத்து அப்பிரச் சினையை திசைதிருப்பக்கூடிய வகையில் சிலரின் சதித் திட்டமாக உருவெடுத்து அதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பலியாகிவிட்டது என்பதைச் சொல்லாமல் இருக்க முடியாது. அந்தத் தலைவர்கள் ஆற்றிவந்த பணிகள் தூய்மையா னவை. ஆனால், எங்கோ தீட்டப் பட்ட சதி தேர்தல் அரசியலுக்குள் நம்மைச் சிக்கவைத்து விட்டது.
இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள், 25 ஆண்டுகளாக ஈழத்தமிழர்களுக் காகத் தொடர்ந்து போராடிய திருமாவளவனைவிட ஒரு நாள் உண்ணாவிரதக் கூத்து நடத்திய ஜெயலலிதாவை நம்புகிறார்கள் என்றால் அவர்களின் புரிதல் என்னவாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணன் வைகோ, இராமதாசு ஆகியோர் ஜெயலலிதாவோடு இருந்தாலும் அவர்கள் ஈழப்பிரச்சினையில் உறுதியாக இருப்பார்கள் என்று நாம் வெளிப்படையாக அறிவிக்கிறோம். ஆனால், காங்கிரசோடு திருமாவளவன் இருப்ப தனால் திருமாவளவன் போலி என்று சொன்னால் அவர்களின் புரிதல் என்னவாக இருக்கிறது?


3 இலட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களைக் காப்பது நம் கடமை. அதற்காக ‘ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கம்’ தனது கடமையாற்றும். இப்போது நான்காம் கட்டப் போர் முடிந்திருக் கிறது. இதில் சிங்களவர்கள் வென்றிருக் கிறார்கள்.

ஆனால், விரைவில் ஐந்தாம் கட்டப் போர் வெடிக்கும். மேதகு பிரபாகரன் தலைமையில் அது வெடிக்கும் இது உறுதி. கைப்பிடி மண்கூட தம் இனத்துக்குச் சொந்தமாக இல்லாமல் ஒரு கைத்துப்பாக்கியுடன் பத்துப் பேர் கொண்ட குழுவுடன் தொடங்கப்பட்டதுதான் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம்.


ஆனால் 25 ஆண்டுகளில் ஓர் அரசை நிர்மாணித்துத் அதைத் திறம்பட நடத்திக் காட்டியவர்தான் மேதகு பிரபாகரன்! நான் இந்திய அரசை வலியுறுத்தி ஒன்றைக் கேட்க விரும்பு கிறேன், ஈழத்தில் நடந்தது என்ன? அதில் இந்தியாவின் பங்கு என்ன, ஏன்? என்பது பற்றி தெளிவான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” இவ்வாறு பேசினார்.


கூட்டத்தின் ஏற்பாடுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்டப் பொருளாளர் தினகரன், மாவட்டத் துணைச் செயலாளர் விடுதலைச்செல்வன், சைதை பகுதிச் செயலாளர் ஜேக்கப் உள்ளிட்டோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

 

 

 

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann