2009, ஏப்ரல் மாதத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறும் நாட்களை அறிவித்த பிறகு இந்தியத் துணைக் கண்டத்தின் அரசியல் களம் சூடுபிடித்தது. கூட்டணிப் பேரங்களை பேசிமுடிக்க பெரிய கட்சிகள் காய்களை வேக வேகமாக நகர்த்தத் தொடங்கி, அணிச்சேர்க்கைகளின் வேகம் மும்முரமடைந்தது.

இந்த அணிச்சேர்க்கைகளின் வேகம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்தது என்றாலும், தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் பரபரப்பு நிலவியது. குறிப்பாக, ஈழப்போராட்டத்தின் நெருக்கடிகள் தேர்தல் அணிச் சேர்க்கையில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதனால், கட்சிகள் அணிசேருவதில் பெரிதும் குழப்பத்தைச் சந்தித்தன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் சி.பி.எம்., சி.பி.ஐ., ம.தி.மு.க., பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளும் திமுக கூட்டணியில் காங்கிரசு, விடுதலைச்சிறுத்தைகள் ஆகிய கட்சிகளையும் கொண்ட இரு அணிகளுக்கு இடையிலான போட்டியே இந்தத் தேர்தலில் முதன்மையாக இருந்தது.

இந்தக் கூட்டணியின் அணிச்சேர்க்கையின்போது பா.ம.க., தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததைத் தவிர அணிமாற்றம் எதுவும் நிகழவில்லை. எனவே, ஈழப்பிரச்சினையில் காங்கிரசு அரசாங்கம் நடந்துகொண்ட அதிருப்தித் தரத்தக்க நடவடிக்கைகளைத் தமக்குச் சாதகமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பயன்படுத்திக்கொள்ளப் பார்த்தது. அதை முன்வைத்தே தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வடிவமைத்துக் கொண்டது. ஆனால், திமுக கூட்டணி முற்றிலும் வேறான திசையில் தனது பிரச்சாரத்தை அமைத்துக்கொண்டது.

தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் நாள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வசிக்கும் முக்கிய அரசியல் தலைவர்கள், உள்ளூர் பிரமுகர்களுடனான சந்திப்பு என இரண்டு நாட்கள் கழிந்தன. பின்பு, சென்னையில் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்சிகளை முடித்துக்கொண்டு ஏப்ரல் 24ஆம் நாள் விழுப்புரத்தில் போட்டியிட்ட நீதியரசர் சாமிதுரை அவர்களின் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, தன்னுடைய பிரச்சாரத்தைத் தொடங்கினார் எழுச்சித் தமிழர். பிரச்சார வண்டி மெதுவாகவே நகர்ந்தது.
கட்டுக்கடங்காத கூட்டத்தில் மிதந்தபடி பிரச்சாரம் நடந்தது. சென்ற இடமெல்லாம் மக்களின் ஆரவார வரவேற்புடன் உற்சாகம் பொங்கியது. நள்ளிரவில் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மறுநாள் சிதம்பரத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கினார். பிரமுகர்களின் சந்திப்பு முடிந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான திருமுட்டம் கிராமத்தில் பிரச்சாரத்தைத் தொடங்கும்போது மாலை 6 மணி.
ஒலிபெருக்கி இல்லை. எனினும் கூடியிருந்த மக்கள் சிறப்பான வரவேற்பை அளித்து பிரச்சாரத்தை உற்சாக மாக்கியதுடன், “சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வாழ்க” என்ற முழக்கத்தை விண்ணதிர முழங்கினார்கள்.

எனவே, தொடக்கமே வெற்றி விழாபோலத் தொடங்கியது. அதற்குப் பிறகு இரவு 1 மணிவரை கிராமம் கிராமமாக பிரச்சாரம். தொடர்ந்து சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் இரவு நேரத்திலும்கூட மக்கள் விழித்திருந்து வரவேற்றனர். அத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் பிரச்சாரத்தில் தோழர்களுக்கு குளிர்பானங்களையும் வழங்கினார்கள்.
ஒவ்வொரு நாளும் காலை 9 மணிக்கு பிரச்சாரம் தொடங்கும். இரவு 10 மணிக்கு ஒலிப்பெருக்கி பயன்படுத்தக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறை கறாராகப் பின்பற்றப்பட்டதால், 10 மணிக்கு மேல் பிரச்சார வண்டியிலிருந்து தன்னுடைய மகிழுந்துக்கு மாறிச் சென்று கிராமங்களில் மக்களைச் சந்தித்தார் எழுச்சித்தமிழர்.
இதனால் ஒவ்வொரு நாளும் அதிகாலை 2 அல்லது 3 மணி வரை பிரச்சாரம் நடந்தது. பிறகு திட்டமிட்டபடி மறுநாள் பிரச்சாரம் தொடங்கிவிடும்.
இதில் உணவுக்கும், உறக்கத்திற்கும் எந்தவித முக்கியத்துவமும் தரப்படவில்லை. வழக் கமாக காலை உணவு 8.30 மணி அல்லது 9 மணிக்கு முடிந்தால், மதிய உணவு மாலை 5 மணிக்கும் இரவு உணவு 12 அல்லது 1 மணிக்கும்தான் நடக்கும்.
எழுச்சித் தமிழரோடு வந்த அனைத்துத் தோழர்களும் இப்படியே நடத்தப்பட்டனர். இதில் பேதம் ஏதும் இல்லை. அவ்வளவு கடுமையான உழைப்பு.
இந்தக் கடுமையான உழைப்பை மக்கள் புரிந்துகொண்டனர். அதை அங்கீ கரித்தனர். அதனால்தான் சென்ற இடமெல்லாம் வரவேற்பு சிறப்பாக இருந்தது.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காட்டுமன்னார்கோயில், ஜெயங் கொண்டம், அரியலூர், குன்னம், புவனகிரி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில், தொகுதி தேர்தல் பணிப் பொறுப்பாளர்களாக நியமிக் கப்பட்ட தோழர்கள் அனைவரும், தோழமைக் கட்சியினரும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்துத் தலைவரின் பணிச் சுமையை குறைக்க முயன்றனர். தலைவர் தேர்தல் பிரச்சாரம் சென்ற கிராமங்கள் தோறும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், சுவரெழுத்துகள், கிராம அலங்காரம், பட்டாசு கள் என கலைகட்டச் செய்தனர் என்றால், பெண்கள் ஆரத்தி எடுப்பதுடன் நில்லாமல் பல இடங்களில் கும்ப மரியாதையுடன் வர வேற்றனர்.
தலைவர் சென்ற கிராமங்கள் அத்த னையும் எழுச்சி அடைந்ததால் அது மற்ற கிராமங்களுக்கும் பரவியது. இதனால், பயணத் திட்டத்தில் இல்லாத பல கிராமத்தினர் மறியல் செய்தும், தலைவர் வண்டியை வழிமறித்தும் அழைத்துச் சென்றனர்.
அப்படி ஒரு நிகழ்வில், தலைவர் பிரச்சார வண்டியிலிருந்து இறங்கி தன் மகிழுந்தில் மாறிவந்துக் கொண்டிருந்த போது, பிரச்சார வண்டி முன்னே சென்றது.
அந்த வண்டியில் கருத்தியல் பரப்புச்செயலாளர் (கௌதம சன்னா) மற்றும் தோழர்கள் மட்டுமே இருந்த நிலையில் சுமார் 1000 பேர் கொண்ட கிராம மக்கள் அந்தப் பிரச்சார வண்டியைச் சிறைப் பிடித்தனர்.
எழுச்சித்தமிழர் வரும் வண்டி வரத்தாமத மானதால் சிறைப்பிடித்த வண்டியை கிராமத்திற்குள் அழைத்துச் சென்று ஒரு இளைஞர் பட்டாளம் காவலுக்கு நின்றது.
பிறகு மூன்று மணிநேரம் கழித்து எழுச்சித் தமிழர் சில கிராமங்களில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு வந்தபிறகுதான் வண்டியை விடுவித்தனர். மக்களின் அன்புச் சிறையில் மூன்று மணிநேரம் சிறைபட்டிருந்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே வாய்த்த பெரும் நற்பேரு.
எனவே, ஒவ்வொரு நாளும் விதவிதமான அனு பவங்கள், மக்களின் மகிழ்ச்சி ஆரவாரம் பொங்கு புனல் போல பெருக்கெடுத்து ஓடியது.
இத்தனைக்கும் மக்கள் எந்தச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்பதுகூட அதுவரை தெரியவில்லை. ஆனால், எழுச்சித் தமிழருக்கு வாக்குகள் நிச்சயம் என்பது உறுதியாகத் தெரிந்தது.
அதனால்தான் ஏப்ரல் 28ஆம் நாள் ‘நட்சத்திரம்’ சின்னம் கிடைத்தவுடன் அடுத்த நாள் காலையில் நாங்கள் பிரச்சாரத்திற்குச் சென்றபோது அனைத்துக் கிராமங்களிலும் நட்சத்திரம் சின்னம் வரையப்பட்டிருந்ததைக் கண்டோம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால், தலித் அல்லாதவர்களின் ஊர் பகுதிகளில் ‘நட்சத்திரம்’ சின்னம் பெருவாரியாக வரையப்பட்டிருந்தது வெற்றியை உறுதிசெய்தது.
எனவே, பிரச்சாரத்தில் தொய்வு என்பதே காணப் படவில்லை. பிரச்சாரத்தில் பல கிராமங்களில் குழந்தை களுக்குப் பெயர்சூட்ட வேண்டும் எனப் பெரிதும் பொதுமக்கள் விருப்பம் காட்டியதால் எழுச்சித்தமிழர் அவர்களிடம் கொண்டுவரப்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயர் சூட்டினார். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிராத நரிக்குறவர்களும்கூட தமிழ்ப்பெயர்களைச் சூட்டக்கோரி எழுச்சித்தமிழர் அவர்களிடம் தங் களுடைய குழந்தைகளைக் கொண்டு வந்தனர்.
இது அவர்களின் அன் பையும் தலைவருக்கு அவர்கள் அளித்த ஆதரவையும் படம் பிடித்துக் காட்டியது.
அதுவுமின்றி பிரச்சாரம் சென்ற பல கிராமங்களில் மக்கள் தேர்தல் நிதியை வழங்கினார்கள். மேலும், கட்சியின் பொறுப்பாளர்களும், தொண்டர்களும் ஆதரவாளர்களும் கூட தேர்தல் நிதியை வழங்கி ஊக்கப் படுத்தினார்கள்.
பிரச்சாரத்தின்போது கூட்டணிக் கட்சியினர், கூட்டணிக் கட்சி ஆதர வாளர்கள் எப்படி தங்களுடைய ஆதரவை தெரிவித்தார்களோ அதைப் போலவே கிறித்தவர்களும், இசுலாமி யர்களும் தங்களுடைய சமூக வழிபாட்டு இடங்களுக்கு அழைத்துச் சென்று தங்களுடைய சமூகக் கூட்டத்தின்முன் “எங்களு டைய வாக்கு நட்சத்திரத்திற்கு மட்டும் தான்” என்று தலைவர் அவர்களிடம் உறுதிமொழியளித் தனர்.
இசுலாமியச் சமூக அமைப்பைச் சேர்ந்தவர்களும், அரசியல் அமைப்பைச் சேர்ந்தவர் களும் தங்கள் ஆதரவைத் தெரி வித்தது மட்டுமல்லாமல், தேர்தல் பணிமனைகளை அமைத்தும் பிரச் சாரத்தைத் தீவிரப்படுத்தினார்கள்.
இதனால், சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் நட்சத் திரத்திற்குக் கிடைத்தன.
இப்படிக் கிடைப்பதற்கு எழுச்சித்தமிழர் அவர்களுடைய அணுகுமுறையும் உழைப்பும்தான் காரணம்.
இப்படி, தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்த அத்தனை நிகழ்வையும் பதிவுசெய்வது என்பது சாத்திய மில்லாத வேலையென்றாலும் அந்தப் பணியின்போது எழுந்த ஆதரவு அலையும், உணர்வு அலையும் தான் கவனத்தைக் கவரக்கூடிய அம்சம். இதுதான் அரசியல் அடித்தளத்தைக் கட்டமைக்க உதவும் அடிப்படையான சாதனம்.
அதை இந்தப் பிரச்சாரப் பயணம் வெற்றிகரமாக நிறைவேற்றியது என்றேகூற வேண்டும்.
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமின்றி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நீதியரசர் சாமிதுரை அவர்களையும், பெரம்பலூர் தொகுதியில் நெப்போலியன் அவர் களையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.
பிரச்சாரப் பயணத்தின்போது இடையில் கூட்டணித் தலைவர்களும் பேச்சாளர்களும் வந்து தம்முடைய பங்கினை ஆற்றினார்கள்.
திமுக விலிருந்து துணைப்பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, எம்.பி., பேரா.சுபவீ உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பெண்கள், அரவாணிகள், தொழிலாளர்கள் எனப் பெரிய பட்டாளம் களத்தில் இறங்கிப் பணி யாற்றியது. எழுச்சித்தமிழர் சென்ற வழியெங்கும் ஆதரவு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இப்படியான எழுச்சியான சூழலின் மத்தியில் பிரச்சாரம் நடந்தபோது சில நெகிழவைக்கும் சம்பவங்களும் நடந்தன. பிரச்சாரத்தின்போது ஒரு கிராமத்தில் பா.ம.க.வினர் பிரச்சாரம் செய்து கொண்டுவரும்போது எழுச்சித் தமிழர் அவர்கள் தமது ஒலிபெருக் கியை நிறுத்தச்சொல்லி வண்டியி லிருந்து இறங்கி பா.ம.க.வின் வேட் பாளர் திரு.பொன்னுச்சாமி அவர் களை நோக்கிச்சென்று வணக்கம் தெரிவித்து, ஆடைபோர்த்தி வாழ்த்துத் தெரிவித்தார். பதிலுக்கு அவரும் மரியாதை செய்தார்.
அப்போது எழுச்சித்தமிழர் அவர்கள், “மருத்துவர் அய்யா நலமாக இருக்கிறாரா?” என்று விசாரித்தார்.
இந்த முக்கியமான நிகழ்வைப் படம் பிடித்த கட்சியின் ஊடக மையப் பொறுப்பாளர்கள் நிகழ்வை அறிக்கை யாக்கி புகைப்படத்துடன் ஒரு மணி நேரத் திற்குள் எல்லா பத்திரிகைகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத் தனர். மறுநாள் மாநிலத்தின் அனைத்து நாளிதழ்களிலும் செய்தி வெளியானது. இதற்குச் சிறப்பான பாராட்டை ஊடக மையத்தினர் பெற்றனர்.
இதுபோன்ற சுவையான நிகழ்ச் சிகளோடும், விறுவிறுப்போடும் நடந்த பிரச்சாரம் மே 11 அன்று முடிவடைந்தது. இந்நிலையில் சிதம்பரம் கோயிலுக்கு வடக்கே இருந்த ஒரு குடியிருப்புப் பகுதியில் தீப்பிடித்து விபத்தானது.
இதையறிந்த எழுச்சித் தமிழர் அவர்கள் உடனடியாக அங்கு விரைந்துசென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன் நிவாரண உதவிக்கும் ஏற்பாடு செய்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை உருவாக்கியது.
இப்படி ஒரு பொறுப்பான நம்பிக்கை அளித்த நிலையில்தான் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது. அதைத் தொடர்ந்து வாக்களிக்கும் நாளுக் கான ஆயத்த ஏற்பாடுகள் மும்முர மடைந்தன. தலைவரும், கட்சி யினரும் பம்பரம்போல் சுற்றி பணி களை முடுக்கினார்கள். 13.5.2009 அன்று வாக்களிப்பு தொடங்கிய வுடன் அங்கனூரில் தனது தந்தை யுடன் சென்று வாக்களித்த எழுச்சித் தமிழர் அவர்கள் உடனடியாக வாக் களிப்பு மையங்களை பார்வையிடக் கிளம்பினார். வாக்குச்சாவடியில்கூட மக்கள் நம்பிக்கையூட்டினர், “நீங்க போங்கண்ணா நாங்கள் பாத்துக் குறோம்” என்று பல இடங்களில் சொல்லக்கேட்டோம்.
எனவே, நம்பிக்கையுடன் தேர்தல் முடிந்தது. பின்பு, 15.5.2009 அன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சிதம்பரம் தொகுதியைப் பொறுத்த வரையில் தொடக்கம் முதலே ஏறு முகம்;
எண்ணி முடிக்கும் வரையில் இறங்கவே இல்லை. விழுப்புரம் தொகுதியோ தொடக்கத்தில் ஏறுமுகமா கவும் பின்பு இறங்குமுகமாகவும் இருந்ததால் வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்த தொண்டர் களிடம் உற்சாகம் குறைந்தது.
எனினும் சிதம்பரம் வெற்றியும், விழுப்புரம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோனதையும் கட்சியினரும் மக்களும் ஒரு புதிய உணர்வோடே எதிர்கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது பேசிய அதிமுக கூட்டணியிருந்த பா.ம.க. தலைவர் இராமதாசு அவர்கள், “திருமா எங்கள் கூட்டணியில் இருந் தால் படுத்துக்கொண்டே ஜெயித் திருப்பார்; திமுக கூட்டணியில் இருப்பதால் அவரது தோல்வி உறுதியென்று” கூறினார். இதற்கு எழுச்சித்தமிழர் அவர்கள் தன்னு டைய உழைப்பின் மூலம் பதிலளித்தார்.
சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளுக்கு மொத்தம் 16 நாட்கள் கூட முழுமையாகப் பிரச்சாரம் செய்யவில்லை.
அப்படிப் பிரச்சாரம் செய்யப்பட்ட நாட்களில் சராசரியாய் 150 கிலோ மீட்டர் பயணம் என மொத்தம் 2400 கி.மீ. பரப்புரைப் பயணம் மேற்கொண்டார் எழுச்சித் தமிழர். சுமார் 490 கிராமங்களில், 680 சந்திப்புகளில் மக்களைச் சந்தித்தார். ஒவ்வொரு சந்திப்பிலும் சராசரியாக 100 முதல் 5000 பேர்வரை மக்கள் திரண்டனர்.
தலைவரும் அவருடன் வந்த தோழர்களும் ஒரு நாளைக்கு 3 மணி நேரத்திற்கு மேல் உறங்கவில்லை. உணவைப் பற்றி யாரும் யோசிக்கக் கூடவில்லை, அர்ப்பணிப்போடு பணிகள் நடந்தன.
இப்படியான கடுமையான உழைப்பினால்தான் வெற்றி சாத்தியமானது. மருத்துவர் இராமதாசுக்கு பதிலளித்த எழுச்சித் தமிழர் அவர்கள், “நான் படுத்துக் கொண்டு வெற்றிபெற விரும்ப வில்லை, உழைத்து வெற்றிபெற விரும்புகிறேன்” என்று பதிலளித் ததுடன் நில்லாமல் அதைச் சாதித்தும் காட்டினார்.
எனவே, சிதம்பரம் வெற்றி என்பது வியர்வையில் விளைந்த வெற்றி என்று சொல்வது சாலப்பொருத்தமட்டுமல்ல வரலாற்றில் குறிக்கத்தகுந்த அனுபவப் பொருத்தம்.
|