இவன் ஒற்றை நட்சத்திரம்!

- தணிகைச்செல்வன்

 

இங்கேயும் சாதியம் தடுத்தது
ஆனால் தலித்தியம் வென்றது தில்லையின் வெகுசனத்தை

இறைச்சாதி ஆதிக்கம் கோயிலுக்குள்ளே
பறைச்சாதி ஒதுக்கீடு கோயிலுக்கு வெளியே என்று
அடங்கிக் கிடந்த பூர்வீக நந்தனிலிருந்து
அடங்க மறுத்த புரட்சிநந்தன் புறப்பட்டிருக்கிறான்

ஆண்டைகளின் விதிமீறாத அடிமை நந்தன்
அத்துமீறு - என்று ஆணையிடும் உரிமை நந்தனானான்
வேதிய நெருப்பிலே வெந்தான் அந்த நந்தன்
வேதியத்தை நெருப்பிலிட்டு வென்றான் இந்த நந்தன்

நந்தன் மட்டுமே இவன் குறியீடல்ல - தமிழினத்தின்
சொந்தம் அனைத்தும் இவன் குறியீடுதான்
ஆகவேதான் - உணவின்றி வதையும் ஈழவனுக்காக
உண்ணமறுக்கிறான்

உணர்வின்றிக் கிடக்கும் தமிழனுக்கு
உணர்வூட்டுகிறான்

உத்தப்புரத்திலே போர்தொடுக்கிறான்
முத்துக்குமாரையும் தத்தெடுக்கிறான்
தமிழியமும் தலித்தியமும் ஒரே கொடியில் இயங்கும்
ஒற்றை நட்சத்திரம் இவன்

தமிழியம் இவன் ரத்தம்
தலித்தியம் இவன் யுத்தம்

தமிழீழம் இவன் சுற்றம்
புலிப்படை இவன் பாசறை
பிரபாகரன் இவன் படிப்பறை

இந்த ஐந்து முனைகள்தாம்
இந்த நட்சத்திரத்தின் ஐந்து முனைகள்

அவை
தெரு முனையில் அரும்பிச்
செருமுனையாய் மலர்கிற
வரலாற்றுத் தலைவனாய்
வளரவேண்டும் வெல்லவேண்டும்.

 

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann