ஓரே நாளில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலை:

-- எழுச்சித்தமிழர் தலைமையில் சிறுத்தைகள் வீரவணக்கம்


மண் விடுதலைக்காகப் போராடும் ஈழ விடுதலைப் போராளிகளை அழிப்பதாகக் கிளம்பிய சிங்கள இனவெறிக்கும்பல் கொத்துக் கொத்தாக அப்பாவித் தமிழ் மக்களை கொன்றழித்து அதில் வடிந்த இரத்தத்தில் தமது முகத்தில் படிந்த கறையை துடைத்துக்கொண்டது.


போரை நிறுத்தச் சொல்லி உலகமெங்கும் தமிழர்கள் தெருக்களில் ஒப்பாரி ஓலங்களோடு கதறி அழுதனர். தாய்த்தமிழகமும் கதறியது. ஒரே நாளில் 50,000 தமிழர் களை கொன்று குவித்துவிட்டு, மாவீரன் பிரபாகரனை கொன்றுவிட்டதாக அறிவித்தான் சிங்கள இனவெறியன் இராஜபக்சே.

சர்வதேசச் சமூகத்தின் மேல் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு புத்தரை வணங்க கண்டிக்குச் சென்றுவிட்டான் இராஜபக்சே. தமிழகத்தில் இந்துராம் வகையறாக்களிலிருந்து ‘துக்ளக்’ சோ வரை சிங்களக் கொடுங்கோலர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், சிங்களக் கொடுபாதகச் செயலைக் கண்டித்தும் போரில் பலியான அப்பாவிப் பொது மக்களுக்கும் களப்பலியான தளபதிகளுக்கும் வீரவணக்க அஞ்சலி செலுத்தும் விதமாக மே 28ஆம் நாள் மிகப்பெரும் பேரணிக்கு அறைகூவல் விடுத்திருந்தார் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன். தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் இப்பேரணிக்கான பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டனர்.
ஒருவார கால இடைவெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட பேரணி மன்றோ சிலையிலிருந்து தொடங்கியது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் தலைநகரத்தில் இதுவரை காணாத எழுச்சிமிகுந்த வீரவணக்கப் பேரணியைத் துவக்கி அந்தப் பேரணியின் மூலமாக இதுவரை ஈழத்தமிழர்களுடைய குரலை அடக்கி விட்டோம், ஒடுக்கிவிட்டோம் என்று கொக்கரித்துக் கொண்டிருக்கின்ற சக்திகளுக்கு இல்லை - தமிழ்நாடு உரியவர்களுடைய தலைமையிலே எழுந்து நிற்கிறது என்பதைக் காட்டுவதற்கு இளைஞர்கள், தாய்மார்கள், இனஉணர்வாளர்கள், வீரஅணியினர் எத்தகைய உயிர்த் தியாகத்திற்கும் தயார் என்று விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுடைய தலைமையில் நாம் இங்கு திரண்டிருக்கின்றோம்.


பக்கத்திலே தொப்புள்கொடி உறவுள்ள நம்முடைய ஈழத்திலே தமிழ் ஈழத்திற்காகப் போராடியவர்களை எல்லாம் நாங்கள் அடக்கிவிட்டோம். புலிகளுக்கு வேலை இல்லை. புலிகளை அழித்துவிட்டோம் என்றெல்லாம் சொல்கின்ற நேரத்தில் புலிகளை நீங்கள் அழித்தது உண்மை அல்ல என்பதற்காக சிறுத்தைகள் திரண்டிருக்கக் கூடிய ஓர் உணர்ச்சிகரமான நிலையைப் பார்க்கின்றோம்.


எனவே, திரண்டிருக்கின்ற இவர்கள் வெறும் உணர்ச்சிப் பிழம்புகள் அல்ல. உணர்வுகளினுடைய வெளிப்பாடு. அதுவும் அறுபடாத உறவுகளினுடைய வெளிப்பாடு. அதுவும் அரசியல் இலாபத்தைக் கருதாமல் மனித நேயத்தோடு இங்கு நாம் கூடியிருக் கின்றோம்.

 


யாரை அடக்கிவிட்டோம் ஒடுக்கி விட்டோம் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்களோ, யாருடைய உரிமைக் குரல்வளையை நெரித்து விட்டோம் என்று கருதிக் கொண்டிருக்கின்றார் களோ அது இல்லை என்று காட்டுவதற்கு திரண்டிருக்கின்ற அணிதான் இந்த அணியாகும். பிரபாகரன் என்பவர் ஒரு தனிமனிதரல்ல; அவர் தமிழர்களின் திரண்ட உணர்வு. அவர் இருக்கிறாரா? இல்லையா? என்பது முக்கியமல்ல.


அந்த உணர்வுகளைத் தட்டி எழுப்பு வதற்கு நம்முடைய திருமா போன்ற தளபதிகள் இருக்கிறார்கள். எனவே, யாருக்கு அக்கறை இருக்கிறது என்பது இங்கு தெளிவாக ஆகியிருக்கிறது. சிலருக்கு இது தேர்தல் பிரச்சினை; நமக்கோ அது உயிர்ப் பிரச்சினை, மானப் பிரச்சினை.

கொளுத்தும் வெயிலாக இருந்தாலும், கொட்டும் மழையாக இருந்தாலும், சீறும் புயலாக இருந்தாலும் இந்த அணியைப் பொறுத்தவரையிலே, ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக் கத்தைப் பொறுத்தவரையில் இந்த இயக்கமானாலும் திராவிடர் கழக மானாலும் இறுதிவரை குரல் கொடுக்க நாம் இங்கே திரண்டிருக்கின்றோம்.


ஈழத்திலே இறந்தவர்கள் மீண்டும் பிறப்பார்கள். எப்படிப் பிறப்பார்கள்? நம்முடைய இன உணர்வின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய கட்டுப்பாட்டின் மூலம் பிறப்பார்கள். நம்முடைய உரிமைக் குரல் மூலம் பிறப்பார்கள்.


அவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, விதைக்கப்பட்டவர்கள் பெரும் ஆல மரமாகக் கிளம்புவார்கள். எல்லா அரசு களுக்கும் சொல்லுகிறோம். இலங்கை அரசுக்கும் சொல்கிறோம். இந்திய அரசுக் கும் சொல்கிறோம். இந்தப் பேரணியை தவறாகக் கணிக்காதீர்கள்.

இந்தப் பேரணிக்கு ஆழமான பொருள் உண்டு. இந்த உணர்ச்சிக் கொப்பளிப்பு என்பது ஒரு சின்ன ஒத்திகை.


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று சொல்லக்கூடிய இந்த இனமானப் போரிலே, அறப்போரிலே நம் அனை வரையும் ஒப்படைப்போம்.

அங்கே மறைந்தவர்கள், மறைந்தவர்கள் அல்லர்; நம் நெஞ்சில் நிறைந்தவர்கள். எனவே, அப்படிப்பட்ட அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி இந்த அமைதிப் பேரணியைத் தொடங்கி வைக்கின் றேன். விரைவில் மலரும் தமிழீழம்” இவ்வாறு உரையாற்றினார்.


பின்னர், ஆசிரியர் கி.வீரமணி விடுதலைச் சிறுத்தைகளின் கொடியை அசைத்துப் பேரணியை தொடங்கிவைத்தார். பேரணியில் சிறுத்தைகளும் பொதுமக்களும் பெண்களும் குழந்தைகளும் மேதகு பிரபாகரன் படத்தையும் எழுச்சித்தமிழர் திருமாவளவன் படத்தையும் ஏந்தியவாறு நடைபோட்டனர்.

“மாவீரன் பிரபாகரன் வாழ்க” என்று எழுச்சித்தமிழர் முழக்க மிட்டதும் சிறுத்தைகள் மிக்க புத்துணர்ச்சியோடு பின்தொடர்ந்து முழக்கமிட்டனர். மன்றோ சிலையி லிருந்து தொடங்கிய பேரணி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் முடிவடைந்தது. இளைஞர்களின் முழக்கங்களும் எழுச்சித்தமிழரைக் காண்பதற்கான நெருக்கடிகளும் கூடிக்கொண்டே போனது.

இளைஞர் களோடு இளைஞராக எல்லோரையும் அரவணைத்து எழுச்சித்தமிழர் வழிநெடுக சிங்கள இனிவெறியாட்டத் தைக் கண்டித்து முழக்கமிட்டவாறு நடந்துவந்தார்.
இடையில், திடீரென சிறுத்தைகள் சிங்கள இனவெறியன் ‘நடமாடும் ஹிட்லர்’ இராஜபக்சே உருவபொம்மையை கொளுத்தினர்.

அந்த இடத்தில் நின்று எழுச்சித்தமிழர் ‘ராஜபக்சே ஒழிக’ என்று முழக்கமிட்டது தொண்டர்களின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தியதாக அமைந்தது.


மாலை 5 மணிக்குத் தொடங்கிய பேரணி இரவு 7 மணிக்கு சேப்பாக்கத்தில் முடிவடைந்தது. அங்கு அமைக்கப்பட்ட மிக வித்தியாசமான மேடையில் எழுச்சித்தமிழர் மட்டும் ஏறி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். படுகொலை செய்யப்பட்ட ஐம்பதாயிரம் தமிழர்களின் நினைவாக 50 மெழுகு வர்த்திகளும் போராளிகளின் நினைவாக இரு துப்பாக்கிகளும் தலைகீழாகக் குத்தப்பட்டு இருந்தன.

அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மெழுகுவர்த்தியை எழுச்சித்தமிழர் ஏற்றினார். பின்பு எல்லோரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்து மாறு கேட்டுக் கொண்டார். அதன்படி வந்திருந்தோர் அனைவரும் 1 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.


பின்னர், உரையாற்றிவிட்டு தீர்மானங்களை வாசித்தார். சிறுத்தைகளின் கரவொலிகள் அத்தீர்மானங்களை வரவேற்றன. மேதகு பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்று ஒரு குழப்பத்தை ஏற்படுத்த தமிழின விரோதிகள் முயற்சிக்கும்போது, பிரபாகரன் 5ஆம் கட்டப் போரை நடத்த விரைவில் வருவார் என்று எழுச்சித்தமிழர் அறிவிப்புச் செய்தது பிரபாகரனின் உண்மையான தளபதியின் துணிச்சலான செயலாகவே அமைந்தது.

தமிழின விடுதலைக்காக நாங்கள் ஆயுதம் ஏந்தாத புலிகள், பிரபாகரனின் தம்பிகள் என்ற எழுச்சித் தமிழரின் பிரகடனம் இனி தில்லியின் காதுகளைத் துளைக்கும் என்பதில் சந்தேகமில்லை. தேர்தலில் வெற்றி பெற்றவுடன், வெற்றி விழாக்களை நடத்தி மக்களை மறக்கும் ‘மாண்புமிகுக்கள்’ மத்தியில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தான் வெற்றி பெற்ற வுடன் நடத்திய முதல் நிகழ்ச்சியே போராட்ட நிகழ்ச்சி தான். மானுட விடுதலைக்கான போராட்ட முன்னெடுப்பு தான். அந்தவகையில், எழுச்சித்தமிழர் போராளித் தலைவனாக தமிழகத்தில் தலைநிமிர்ந்து நிற்கிறார்.

 

அமைதிப்பேரணி தீர்மானங்கள்


1. வீரவணக்கம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பை முற்றிலும் கைப்பற்றி விட்டோமென உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆக்கிரமிப்பு வெறியில், கடந்த மே 16, 17 ஆகிய நாட்களில் சிங்கள இனவெறிக்கும்பல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் விடுதலைப்புலிகளின் ஒருசில முன்னணித் தளபதிகள் உட்பட ஏறத்தாழ ஐம்பதாயிரம் தமிழர்களுக்கும் மேலாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அப்போரில் மண்ணை மீட்கவும் மானத்தைக் காக்கவும் உறுதி குலையாமல் இறுதிவரையிலும் போராடி வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் தளபதிகளுக்கும் களப்பலியான பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச்செலுத்துகிறோம்.


2. கண்டனம்: அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஒருசில நாடுகள் மற்றும் ஐ.நா.பேரவை ஆகியவற்றின் வேண்டுகோள்களையும் எச்சரிக்கைகளையும் பொருட்படுத்தாமல், சர்வதேச சமூகத்திற்கு அஞ்சாமல், கடந்த இரண்டரை ஆண்டுகால போரில் ஏறத்தாழ ஒரு இலட்சம் தமிழர்களை படுகொலை செய்தும், சுமார் மூன்று இலட்சம் தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்துவைத்து கொடுமைகள் செய்தும், இளம் ஆண்களையும் பெண்களையும் கடத்திச்சென்று ஈவிரக்கமற்ற கொடூரமான வதைகளைச் செய்தும், தொடர்ந்து இனவெறியாட்டத்தை நடத்தி வருகிற காட்டுமிராண்டி இராசபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசையும் அதற்கு அனைத்து வகையிலும் துணைநிற்கிற இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட இனவெறி ஆதரவு நாடுகளையும் விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், கடந்த மே 26 மற்றும் 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு பேரவையில் சிங்கள இனவெறி அரசுக்கு ஆதரவாகவும் தமிழ் இனத்துக்கு எதிராகவும் குரல்கொடுத்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் தமிழின விரோதப் போக்குகளையும் மிகவன்மையாக விடுதலைச்சிறுத்தைகள் கண்டிக்கிறது.


3.அனைத்துலக விசாரணை: போர் முனையில் சிக்கித்தவித்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் போன்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், கடைசிப் பொழுதுகளில் வெள்ளைக்கொடியோடு சிங்களப் படையினரை நோக்கி நகர்ந்த புலிகளின் முன்னணித் தலைவர்களான நடேசன் மற்றும் பூலித்தேவன் போன்றவர்களை கோழைத்தனமான முறையில், போர் மரபுகளையெல்லாம் மீறி சுட்டுப்படுகொலை செய்துள்ளனர். சிங்கள இனவெறியர்களின் அருவருக்கத்தக்க, மிகக் கேவலமான இந்த இழிச்செயலை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், இது தொடர்பாக சர்வதேச வல்லுநர்களைக்கொண்ட அமைப்பின் மூலமாக விசாரணை நடத்த வேண்டுமென ஐ.நா. பேரவைக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


4. மறுவாழ்வு - மறுகட்டமைப்பு: சிங்கள இனவெறிப் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வதை முகாம்களில் அடைபட்டுக்கிடக்கும் சுமார் மூன்று இலட்சம் தமிழர்களைப் பாதுகாத்திடவும் அவரவர் வாழிடங்களில் அவர்கள் மீண்டும் குடியேறவும், மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்றும், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்புக்கான பணிகளை சிங்கள அரசின் மூலம் செய்யாமல் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மூலம் செய்வதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்றும் இந்திய அரசுக்கும் ஐ.நா. பேரவைக்கும் விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


5.போர்க்குற்றவாளி ராஜபக்சே: அனைத்துலக மரபுகளையும் மனிதநேய மரபுகளையும் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சிங்கள இனவெறி அரசு செய்துவருகிற போர்க்குற்றங்கள் தொடர்பாக இராசபக்சே உள்ளிட்ட சிங்களப்படை இனவெறியர்களை சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி அவர்களைத் தண்டிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்தை விடுதலைச்சிறுத்தைகள் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


6.கடத்தப்பட்டவர்களின் மீட்பு: சிங்களப் படையினரால் கடத்தப்பட்ட - தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிற, இளம் ஆண்கள் மற்றும் இளம் பெண்களின் நிலை என்ன ஆனது என்றே தெரியவில்லை.

அத்துடன், பொதுமக்களுக்கு மருத்துவம் செய்துவந்த அரசு மருத்துவர்கள் மூன்றுபேர் முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து கடத்தப்பட்டு மிகக் கொடூரமான முறையில் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும், கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் கேவலமான முறையில் வதைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் தெரிய வருகிறது.

எனவே, கடத்தப்பட்டவர்களில் எஞ்சியிருப்பவர்களையாவது மீட்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென ஐ.நா-மனித உரிமைப் பாதுகாப்புப் பேரவைக்கு விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது.


7.தமிழீழமே தீர்வு: ஈழத்தந்தை செல்வா காலத்திலிருந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக சம உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடியும், அதனைத் தொடர்ந்து சிங்கள இனவெறியர்களின் தொடர்ச்சியான ஒடுக்குமுறைகளை எதிர்த்து மேதகு பிரபாகரன் தலைமையில் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதம் தாங்கிய விடுதலைப் போர் நடத்தியும், ஏறத்தாழ இரண்டு இலட்சம் தமிழர்கள் இதுவரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் சொந்த மண்ணிலேயே வதை முகாம்களில் அகதிகளாக அடைபட்டு கிடக்கின்றனர். அத்துடன், சுமார் பத்து இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உலக நாடுகளில் அகதிகளாக சிதறிக்கிடக்கின்றனர். மேலும், ஈழத்தில் எஞ்சியுள்ள தமிழர்கள் திறந்தவெளி சிறைக்கைதிகளாக வதைக்கப்பட்டுவருகின்றனர். இத்தகைய கொடுமையான நிலைமைக்கு ஒட்டுமொத்த ஈழத் தமிழினம் ஆளாகியுள்ளது.

இந்நிலையில், ஈழத்தமிழ்ச் சமூகம் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ, தமிழினத்தின் இறையாண்மையைப் பாதுகாக்க, அவர்களின் ஒரே வேட்கையான ‘தமிழ் ஈழமே’ நியாயமான - நீதியான - சனநாயகமான அரசியல் தீர்வாக அமையும். எனவே, மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு என்னும் பெயரில் தமிழ்ச் சமூகத்தை ஆயுள்கால அடிமைகளாக நடத்திட சிங்கள இனவெறியர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு, இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் துணைபோகக்கூடாது எனவும், தமிழினத்துக்குரிய தமிழீழத்தை மீட்டுத் தருவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும், அத்துடன், அதற்கான பேச்சுவார்த்தையை விடுதலைப்புலிகளின் முன்னணித் தளபதிகளோடு மட்டுமே நடத்தவேண்டுமெனவும் சர்வதேச சமூகத்தை விடுதலைச்சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது.

பிரபாகரன்
தலைமையில் ஐந்தாம்
விடுதலைப் போர் விரைவில் வெடிக்கும் எழுச்சித்தமிழர் உரைவீச்சு

தோழர்களே, நமது கட்சியின் முன்னணித் தலைவர்களே, இரண்டொரு நாள் இடைவெளியில் நான் விடுத்த அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் இங்கே திரண்டு வந்திருக்கின்ற என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, உங்கள் அனைவருக்கும் என் னுடைய பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தமிழீழ விடுதலைக்களத்தில் களப்பலியான நமது போராளிகளுக்கும், சிங்களக் கோழைகளால் படுகொலை செய்யப்பட்ட நமது தமிழ்ச்சொந்தங் களுக்கும் வீரவணக்கம் செலுத்துகின்ற ஒரு மகத்தான அணிவகுப்பாக இந்த அணிவகுப்பை நாம் நடத்தியிருக்கிறோம்.


தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னணித் தலைவர்களையும், அவர்களுக்குத் துணையாக இருந்த நமது தமிழ்ச் சொந்தங்களையும் ஒரே நாளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்களைப் படுகொலைச் செய்து, அந்தக் கொடுமையை உலகின் பார்வையிலிருந்து முற்றிலுமாக மறைப் பதற்காக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும், சுட்டுக்கொன்றுவிட்டதாக சிங்கள இனவெறியன், கோழைப்பயல் இராசபக்சே கோயபல்சைவிடக் கேவலமான முறையில் அண்டப் புளுகுகளை அவிழ்த்துவிட்டிருக்கிறான்.

வரலாற்றில் இதற்கு முன்னும் இல்லை; இதற்குப் பின்னும் இருக்கப் போவதில்லை என்கிற ஒரு மகத்தான வீரம்செறிந்த போராளித்தலைவன்தான் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்.


தாம் நேசித்த மண்ணையும் மக்களையும் விட்டுப் பிரியாமல் பகைவர்களைக் களத்தில் சந்தித்த மாவீரன் தான் மேதகு பிரபாகரன்!


2006ஆம் ஆண்டு ஆகத்துத் திங்களில் போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவுபெற்ற நாளிலிருந்து அதிகாரப்பூர்வமாக இராசபக்சே யுத்தத்தைத் தொடங்கினான். சிங்கள இன வெறியர்கள் மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் துணையோடு அவன் வன்னிப்பகுதியைச் சுற்றிவளைத்தான்.

அனைத்துலகமே படைதிரண்டு வந்தாலும் எம்மக்களுக்காக, எம் மண்ணுக்காக ஏற்றுக் கொண்ட இலட்சியத்திலிருந்து சமரசமாகமாட்டோம் என்கிற மன உறுதியோடு எதிரிகளை களம்கண்ட மாவீரன் தான் மேதகு பிரபாகரன்.


இதோ இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக ஈழத்தைப் பிடித்துவிடுவோம்; புலிகளை ஒழித்துவிடுவோம்; இதோ இன்னும் ஓரிரு நாட்களுக்குள்ளாக; இதோ, இன்னும் ஒரு சில மணி நேரங்களில் என்று இரண்டரை ஆண்டுகளாக சொல்லி வந்தான் இராசபக்சே! 2006ஆம் ஆண்டு ஆகத்திலிருந்து அடுத்தடுத்து அவன் இத்தகைய அண்டப்புளுகுகளையெல்லாம் அவிழ்த்து விட்டான்.

ஐந்து முனைகளையும் சுற்றிவளைத்தான். வான் வழியாக சர்வதேசப் போர் மரபுகளையெல்லாம் மீறி கொத்தணிக் குண்டுகளை வீசினான். நச்சு வாயு நிறைந்த குண்டு களை வீசினான். பல்குழல் பீரங்கிகளைப் பயன்படுத்தி எரிகணைகளை ஏவினான். அப்போதும்கூட மேதகு பிரபாகரன் அவர்கள், அச்சப்படவில்லை; பேச்சுவார்த் தைக்கு வா என்று கெஞ்சவில்லை; உறுதிகுறையாமல் இறுதிவரையில் மோதுவோம் என்று மோதினார்.

ஒருநாள் அல்ல; இருநாள் அல்ல! ஒரு மாதம் அல்ல, இருமாதம் அல்ல இரண்டரை ஆண்டுகள் ஒட்டுமொத்த உலக நாடுகளின் ஆதரவோடு, ஒத்துழைப்போடு ஐந்து முனைகளிலும் சுற்றிவளைத்தபோதுகூட கிஞ்சிற்றும் அச்சப்படாமல் எதிரிகளைப் பந்தாடி, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சிங்களவர்களை, சிங்களப் படையினரை கொன்றுகுவித்த மாவீரர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகள்!


சனவரி 2ஆம் நாள் கிளிநொச்சியைப் கைப்பற்றி விட்டார்கள் என்ற செய்தியைக்கேட்டு நான் அதிர்ச்சி யடைந்தேன், வேதனைப்பட்டேன், தாங்கமுடியாத துக்கத்திற்கு ஆளானேன். கடுமையான மன உளைச் சலுக்கு ஆளானேன். சனவரி 4 அன்று திருச்சிராப் பள்ளியில் நடைபெற்ற மாநாட்டில் நான் ஆவேசமாக அறைகூவல் விடுத்தேன்.

தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்களே, நீங்கள் காவிரிப்பிரச்சினையில் ஒன்று படவில்லை, பாலாறு பிரச்சினை யில் ஒன்றுபடவில்லை, பெரியாறு பிரச்சினையில் ஒன்றுபடவில்லை, பவானி ஆற்றுப்பிரச்சினையில் ஒன்றுபடவில்லை; பெங்களூரில் தமிழன் கொல்லப்பட்டபோது ஒன்றுபடவில்லை; பர்மா தமிழன் வீழ்த்தப்பட்டபோது ஒன்றுபட வில்லை; ஆனால், இந்த முறை ஒன்றுபட்டுத்தான் ஆகவேண்டும். நம் தமிழீழத்துச் சொந்தங்களை யெல்லாம் அழித்தொழிப்பதற் காக உலகப் படைகளையே ஒன்று திரட்டிக்கொண்டு போகின்றான் இராசபக்சே!


நம் இனத்தைக் காப்பாற்ற வேண்டிய ஒரு நெருக்கடி வந்து விட்டது. எனவே, ஒன்றுபட்டாக வேண்டும், தலைவர்களே, உங் களுக்கு நான் அறைகூவல் விடுக் கிறேன். தேர்தல் அரசியலை ஒரு ஓரமாகத் தூக்கிவையுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன். அப்படி வெறுமனே அறைகூவல் விடுத்துவிட்டு நான் அமைதி யாக இருக்கவில்லை.

சனவரி 5ஆம் நாள் தொடங்கி சனவரி 12ஆம் நாள் வரையில் தமிழ்நாட்டின் முன்னணித் தலைவர்களையெல் லாம் சந்தித்துப்பேசினேன். என்னு டைய சந்திப்புக்குப் பயன் இல்லை என்று தெரிந்த பிறகு தான், தலைவர்களை ஒன்று சேர்க்க முடியவில்லை என்ற நிலையில்தான் இனி போராடு வதற்கு எந்தக் களம் இருக்கிறது என்று சிந்தித்தேன்.


இரயில்மறியல் போராட்டம் நடத்திவிட்டோம்; அடுக்கடுக் கான ஆர்ப்பாட்டங்களை நடத்தி விட்டோம்; தொடர்முழக்கப் போராட்டங்களை நடத்தி விட்டோம்; எழுச்சி நடைப் பயணங்களையும் மாநாடு களையும் பேரணிகளையும் நடத்திவிட்டோம், இனி என்ன களம் இருக்கிறது என்று சிந்தித்துப் பார்த்துக் கடைசியாக, “நான் சாகத் துணிகிறேன் தமிழி னமே ஒன்றுபடு; இந்திய அரசே இரக்கம் காட்டு; எம் தமிழ்ச் சொந்தங்களைக் காப்பாற்று” என்று வேண்டுகோள் வைக்கின்ற வகையில்தான் சனவரி 15ஆம் நாள் மறைமலைநகரில் சாகும் வரை உண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங் கினோம்.

தலைவர்கள் வந்தார்கள், வாழ்த்தினார்கள், போரை நிறுத்தும்படி கேட்டுக்கொண் டார்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து கிடுகிடு போராட்டத்தை அனைவரும் இணைந்து நடத்து வோம் என்று சொன்னார்கள், அவர்களின் வேண்டுகோளை ஏற்று சனவரி 4ஆம் நாள் உண்ணாநிலை அறப்போரை நிறுத்திக்கொண்டோம். அது தமிழகத்தில் மிகப்பெரிய கொந் தளிப்பை ஏற்படுத்தியது.

ஒட்டு மொத்த உலகத் தமிழர்களின் பார்வையை ஈர்த்தது.
என் உயிரின் உயிரான விடு தலைச் சிறுத்தைகள் காவல்துறை யினரால் நாடெங்கிலும் கைது செய்யப்பட்டார்கள்.

350க்கும் மேற்பட்டவர்கள் சிறைப்படுத்தப் பட்டார்கள். அதில் ஏறத்தாழ 26பேர் குண்டர் தடுப்புச் சட்டத் திலும், தேசிய பாதுகாப்புச் சட்டத்திலும் சிறைப்படுத்தப் பட்டார்கள்.


ஆனால், நாம் எதிர்பார்த்தபடி தோழமை கட்சித் தலைவர்கள் யாரும் அடுத்தக்கட்ட போராட் டத்தை முன்னெடுப்பதற்குத் தயாராக இல்லை. பா.ம.க., ம.தி.மு.க., சி.பி.ஐ. போன்ற கட்சிகளிடமும் அடுத்தக்கட்டப் போராட்டத்தை நோக்கி நகர் வதற்கான எந்த முனைப்பும் இல்லாத நிலை! இந்நிலையில், விடுதலைச்சிறுத்தைகளின் மகத்தான பங்களிப்போடு உரு வானது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.


தமிழகத்துக் கரும்புலி தம்பி முத்துக்குமார், நாம் நடத்திய உண்ணாநிலை அறப்போராட் டத்தில் பங்கேற்ற போராளி! ‘உயிரைக் கொடுப்பதற்கும் நாம் தயாராகவேண்டும்’ என்று அந்த உண்ணாநிலை போராட்டத்தின் மூலம் நாம் உணர்த்திய செய்தி அவரைத் தாக்கியது.

ஈழ மக்களைக் காப்பாற்றுவதற்கும், ஈழ விடு தலைப் போராட்டத்தை அடை காப்பதற்கும் தமிழ் இளைஞர்கள் உயிரைக்கொடுக்கவும் தயாராக வேண்டும் என்கிற செய்தி திருமா வளவனின் உண்ணாநிலை அறப் போராட்டத்தால் இளைஞர்களின் நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத் தியது.

அதன் விளைவாகவே தமிழகத்துக் கரும்புலி தம்பி முத்துக்குமார் உடலில் தீ வைத்துக் கொண்டான். அவன் கடைசி நேரத்து ஆசையாக, “தலைவர் பிரபாகரனிடத்திலும், அண்ணன் திருமாவளவனிடத்திலும் என் இறப்பைச் சொல்லுங்கள்” என்று சொல்லிவிட்டு இறந்தான். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய போராட்டமாக நமது உண்ணா நிலை அறப்போராட்டம் இருந்தது.


ஆனால், தமிழகத்தின் தேர்தல் அரசியல் விளையாட்டுகளால் அந்த வெப்பம் நீர்த்துப் போகக் கூடிய நிலை உருவானது. அப்போது நான் சொன்னேன், திமுக அணியும் வேண்டாம்; அதிமுக அணியும் வேண்டாம்! தனித்து ஒரு அணியைக் கட்டு வோம் என்று நான் வலியுறுத் தினேன்.

என் சொல்லுக்கு எந்த மதிப்பும் இல்லாமல் போய் விட்டது. உலகத் தமிழர் பேரமைப் பின் தலைவர் பழ.நெடுமாறன் அவர்களிடத்தில் கெஞ்சினேன், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களிடத்தில் கெஞ்சினேன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அவர்களிடத் தில் மன்றாடினேன். தனி அணி யைக்கட்டுவோம், வெற்றி தோல் வியைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காகத் தமிழகத்தில் ஓரணியைக் கட்டுவோம் என்று நான் திரும்பத் திரும்பச் சொன் னேன்.

ஆனால், அவர்கள் திரும்பத் திரும்ப அதிமுக அணிக்குப் போக வேண்டும் என்பதிலேயே அவர் கள் உறுதியாக இருந்தார்கள். அதிமுக அணியில் எப்படி நாம் போய் இணைய முடியும்? அதிமுக தலைமை என்றைக்கு ஈழத்தை ஆதரித்தது? என்றைக்கு ஈழத்தமிழர் களை ஆதரித்தது?


2006ஆம் ஆண்டுக்கு முன்பாக நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன். அப்போது செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்தார். அந்தப் பேரவையில் வந்து அவர் என்ன சொன்னார்? என்ன தீர்மானத்தை அவர் படித்தார்? தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள், சர்வதேச ஊடகவிய லாளர்கள் சந்திப்பில் பேசுவதைப் பார்த்துவிட்டுப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரத்தால், சட்டமன்றத்தில் அவர் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார்.


மேதகு பிரபாகரன் அவர்களை உயிரோடு பிடித்துவந்து இந்தி யாவில் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி விசாரித்துத் தண்டிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார். காங்கிரசுக் காரர்கள்கூட இந்தத் தீர்மானத்தை முன்மொழியவில்லை.

சோனியா காந்தி அம்மையார்கூட இப்படி சொல்லவில்லை. ஆனால், ஜெயலலிதா சொன்னார். ஈழம் என்றாலே அவருக்குக் கசப்பு. பிரபாகரன் என்றாலே அவருக்கு வெறுப்பு. எந்தக் காலத்திலும் ஈழத்தையோ பிரபாகரனையோ அவர் ஆதரித்ததே கிடையாது. இனம் அழிந்துகொண்டிருந்த இந்த நெருக்கடியான நிலையில் கூட அவர் என்ன சொன்னார் தெரியுமா? போர் நடந்தால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்.


பிரபாகரன்தான் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகிறார். பிரபாகரன் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும், பிரபாகரன் இராசபக்சேவிடம் சரணடைய வேண்டும். இப்படியெல்லாம் சொன்னது ஜெயலலிதா அம்மை யார்தானே!.

மானமுள்ள தமிழன் எவனாவது புலிகள் சரணடைய வேண்டும் என்று சொல்லுவானா? மானமுள்ள தமிழன் எவனாது ஆயுதங்களைப் புலிகள் கீழே போடவேண்டும் என்ற கோரிக் கையை வைப்பானா? இன உணர்வோ, மொழி உணர்வோ இல்லாதத் தலைமை அதிமுக தலைமை. ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்; பிரபாகரன் சரணடையவேண்டும் என்று சொன்னார். இப்படிப்பட்ட முழுமையான தமிழின எதிரி ஜெயலலிதாவோடு தேர்தல் கூட்டணி வைக்கவேண்டும் என்று மருத்துவர் இராமதாசும் வைகோ வும் பழ.நெடுமாறன் மற்றும் தா.பாண்டியன் ஆகியோரும் கேட்டுக்கொண்டால், திருமா வளவன் எப்படிப் போகமுடியும்? அந்த அணியை எப்படி ஆதரிக்க முடியும்?


காங்கிரசுக்காரன் எங்களை திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றச் சொல்லுகிறான்; நாங்கள் கவலைப்படவில்லை! திமுக அணியைவிட்டு வெகுதூரம் நாங்கள் விலகிவந்துவிட்டதாக திமுக தலைமை கருதுகிறது; ஆனாலும், கவலைப்படவில்லை.

ஈழத்திற்காக தனி அணி கட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம். இல்லையெனில், தனித்துப் போட்டியிடவும் நாங்கள் தயாரானோம். அந்த நிலையில் தான், தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் விடுதலைச்சிறுத்தை கள் எங்கள் அணியில்தான் இருக் கிறார்கள் என்ற அறிவிப்பைச் செய்தார். ஏற்கெனவே இரண்டு முறை தோற்றுப்போன நிலையில் மூன்றாவது முறையாக போட்டி யிடும் நாம் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தால்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்க முடியும், நாடாளு மன்றத்தில் பேசமுடியும் என்று கருதினோம்.


ஆகவே, நாம் திமுக கூட்ட ணியிலிருந்து நாடாளுமன்றத் தில் நுழையவேண்டிய அவசி யத்தை உணர்ந்து திமுக தலைவர் கலைஞர் அவர்களின் அழைப்பை யேற்று அந்த அணியில் நாம் தொடர்ந்தோம். இதில் என்ன குற்றம் இருக்கிறது? முற்றிலும் ஈழத்திற்கும் ஈழத் தமிழர்களுக்கும் எதிரான செல்வி ஜெயலலிதா அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஈழத் தமிழர்களைப் பற்றி பேச மாட்டார் என்று சொன்னோம். இப்போது பேசினாரா?

ஒரே நாளில் ஐம்பதாயிரம் தமிழர் களைப் படுகொலை செய்திருக் கிறார்களே அதைப்பற்றி வருத்தப் பட்டாரா? ஒரு அறிக்கை விட்டார். இரண்டு தரப்பிலும் இழப்பு ஏற் பட்டிருக்கிறதாம்! அவன் தரப்பில் இழப்பு ஏற்பட்டால் இவருக்கு என்ன கவலை? சிங்கள நாய்கள் செத்துப்போனால் இவர் ஏன் கவலைப்படவேண்டும்?


எம் இனத்தை அழித்தொழிக் கின்ற சிங்களஇன வெறிபிடித்த நாய்களை எம் போராளிகள் கொன்றார்கள்தான். இல்லை யென்று சொல்லவில்லை. எம் இனத்தை அழித்தவர்களை எம் போராளிகள் கொன்றார்கள்; களத்தில் மோதிக்கொன்றார்கள். கடைசிநாள் சமரில்கூட பன்னி ரெண்டாயிரம் சிங்களக் கோழை களைக் கொன்றுவிட்டுத்தான் தமிழீழ தேசியத் தலைவரைக் காப்பாற்றியிருக்கிறார்கள் புலிகள்! செல்வி ஜெயலலிதா அம்மாவுக்கோ இரு தரப்பிலும் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்று கவலை!


இப்படிப்பட்ட ஒரு தலை மையின் பின்னால் எந்த அடிப் படையில் திருமாவளவனும் வர வேண்டும் என்று அழைத் தார்கள். ஈழத்திற்காக ஏதாவது ஒரு வடிவத்தில் ஏதாவது ஒரு வகையிலே தொடர்ந்த போராட் டங்களை நடத்திக்கொண்டிருக் கின்ற திமுகவோடு நாங்கள் இணைந்து நின்றதில் என்ன தவறு உள்ளது.


இப்படிப்பட்ட நிலையில் தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் மகத்தான வெற்றியை விடுதலைச் சிறுத்தைகள் பெற்றிருக்கிறது. இந்த வெற்றி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் சிறுபான்மைச் சமூகத்தினரின் பாதுகாப்புக்காகவும் எம் ஈழத் தமிழ்ச்சொந்தங்களின் தலை நிமிர்வுக்காகவும் பயன்படும் என்று நான் நம்புகிறேன். இந்த வெற்றிக்காக நான் மகிழ்ச்சி யடையவில்லை; பூரிப்பு அடைய வில்லை.


போர் முடிந்தது என சிங்களவன் அறிவிக்கிற கடைசி நிமிடம் வரையில் உலக நாடுகள் வேடிக் கைப் பார்த்தன. இந்திய அரசு நம் வேண்டுகோளை ஒரு பொருட் டாகவே மதிக்கவில்லை. அனைத் துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம், சட்டப்பேரவையில் தீர்மானம், தமிழர் சங்கிலி போராட்டம்; இரயில் மறியல் போராட்டம்; மகளிர் விடுதலை இயக்கத்தின் போராட்டம்; தொழிலாளர் விடு தலை முன்னணியின் போராட்டம்; மாணவர் அணியின் போராட்டம்; தமிழீழ அங்கீகார மாநாடு; நாடு தழுவிய அளவில் ஊர் ஊராக எழுச்சி நடைப்பயணம்; இராச பக்சே கொடும்பாவி எரிப்புப் போர். இப்படி எத்தனை எத்தனைப் போராட்டங்கள் நடத்தினோம்.


இந்திய அரசு நமது உணர்வு களை மதித்ததா? உலக நாடுகள் கவலைப்பட்டனவா? சிங்கள வனுக்கு சீனா உதவுகிறது; ஐ.நா. பேரவையில், பாதுகாப்புப் பேரவையில் இலங்கைப் பிரச் சினைப் பற்றி பேசவிடாமல் இரண்டு முறை தடுத்தது சீனா அரசுதான்! இந்தியாவோ வலிந்து வலிந்து சிங்களவர்களுக்கு துணை நிற்கிறது. சீனாவும் இவனுக்கு உதவி செய்கிறான், பாகிஸ்தானும் உதவி செய்கிறது, பங்களா தேஷ், ரஷியா, ஐரோப்பிய நாடுகள் உதவி செய்கின்றன. அமெரிக்கா, கனடா, இப்படி எல்லா நாடுகளும் உதவி செய்கின்றன.


ஒட்டுமொத்தத்தில் உலகப் படைகளையே எதிர்த்து நின்ற மாவீரன்தான் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள். உலகத்தில் ஒரே ஒரு நாடு கூட மனிதாபிமான அடிப்படையில் கூட போரை நிறுத்தச் சொன்னார் களா? ஒரே ஒரு நாளாவது போர் நடந்துக்கொண்டிருந்தபோது அங்கே போய்ப் பார்க்கவேண்டும் என்று விரும்பினார்களா?


ஒட்டு மொத்தத்தில் நிலப் பரப்பைக் கைப்பற்றிவிட்டோம் என்று அறிவிக்கின்ற வரையில் நடேசனையும், பூலித்தேவனை யும் கொன்றுவிட்டோம்; பிரபா கரனின் மகன் சார்லஸ் அந்தோணி யையும் கொன்றுவிட்டோம் என்று இராசபக்சேவும் அவனது கும் பலும் பூரிப்டைந்துக்கொண்டிருந்த வேளையில் பான் கீ மூன் என்ற ஐ.நா. பொதுச்செயலாளர் இலங் கைக்கு போய்ப் பார்த்துவிட்டு, நான் இதுவரையில் இப்படிப்பட்ட கொடூரமான வதைமுகாம்களை எங்கும் பார்த்ததே இல்லை என்று சொல்லுகிறார். ஆனால், போரை முடித்துவிட்டோம் என்று சொல்லு வதற்கு முன்னால் போய் பார்த் திருக்கக்கூடாதா?


போரை முடித்துவிட்டோம் என்று சொன்ன உடனேயே இங்கி ருந்து எம்.கே.நாராயணன் போகி றார். எத்தனைமுறை கெஞ்சி னோம். அப்போது போயிருக் கக்கூடாதா? போரை நிறுத்தி யிருக்கக்கூடாதா? புலிகளையும் காப்பாற்றவேண்டும்; பொது மக்களையும் காப்பாற்ற வேண்டும்; அப்போதுதான் புலிகளோடு பேச்சு வார்த்தை நடத்தமுடியும்; தீர்வு காணமுடியும்; புலிகளை அழித்து விட்டால் யாரோடு பேசமுடியும்? கருணவோடா? ‘டக்ளஸ்’ தேவா னந்தாவோடா? பிள்ளையா னோடா? வரதராசப் பெருமா ளோடா? அல்லது எம்.கே.நாரா யணனோடா? யாரோடு பேசப் போகிறீர்கள்? தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனையும் அவருடைய தளபதிகளையும் நீங்கள் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்று சொல்கிற ஒரே இயக்கம் விடுதலைச்சிறுத் தைகள்தான்!


சோனியாகாந்தி அம்மையார் பங்கேற்ற தீவுத்திடல் பொதுக் கூட்டத்தில் ஒன்றை சொன் னேன், அம்மையார் அவர்களே, எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை! ஏசுவை நம்புகிறவர்கள் தேவாலயத்திற்குச் சென்று இறைஞ் சுகிறார்கள்! நபியை நம்புகிற வர்கள் மசூதிக்குச் சென்று தொழு கிறார்கள். ஆனால், “எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. ஆகவே, உங்களை மன்றாடி இறைஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், எமது போராளிகளையும், தமிழ்ச் சொந்தங்களையும் காப்பாற்றுங்கள்” என்று பேசினேன்.


தமிழர்கள் உலக அளவில் இருக்கிறோம். ஆனால், நம் சொந்தங்கள் அழிவதை நம்மால் காப்பாற்ற முடியவில்லை. யாரா வது வரமாட்டார்களா? ஏதாவது ஒரு நாடு வராதா? ஏதாவது ஒரு அரசு வராதா? யாராவது ஒரு தலைவன் தலையிட மாட்டானா? என்று எம் சொந்தங்கள் அலறி அலறி, கதறிக் கதறி அழுது, கடை சியில் மாண்டே போனார்கள். ஈவிரக்கமில்லாத காட்டுமிராண்டி இனவெறியன் இராசபக்சே, எமது ஒற்றைத் தலைவனைப் பிடிப்ப தற்காக இரண்டு இலட்சம் தமிழர் களைக் கொன்றிருக்கிறான். ஆனாலும், அவரை அவனால் பிடிக்கமுடியவில்லை.


அந்தக் கோழைப்பயல் இராசபக் சேவால் எம் தலைவர் பிரபாகரன் அவர்களை நெருங்க முடியவில்லை. அவர் நலமோடு இருக்கிறார். அவர் தலைமையில் மீண்டும் ஐந்தா வது கட்டப்போர் வெகுண் டெழும். நான்காம் கட்டப்போர் தான் முடிந்திருக்கிறது. ஐந்தாம் கட்டப் போர் வெடிக்கும். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபா கரன் தலைமையில் ஐந்தாம் கட்டப் போர் வெடிக்கும். நாங் களும் புலிகள்தான்; ஆயுதம் ஏந் தாத புலிகள்.

சாதி ஒழிப்பைப் போல, ஈழ விடுதலையும் எங்கள் குறிக்கோள்களில் ஒன்று! எம் தமிழ்ச் சொந்தங்கள் படுகொலை யாயிருக்கிறார்கள். இந்த இனப் படுகொலைக்கெல்லாம் இராச பக்சே ஒருநாள் பதில் சொல்ல வேண்டி வரும். வேடிக்கைப் பார்த்த நாடுகள் பதில் சொல்ல வேண்டிவரும்.


இன்றைக்கு அமெரிக்கா, கனடா உள்ளிட்ட 17 நாடுகள் ஒன்றுசேர்ந்து அங்கே நடைபெற்ற போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஐ.நா. மனித உரிமைப் பாதுகாப்புப் பேரவையைக் கூட்டி மே 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் விவாதம் நடத்தியது. அதில் ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட நாடுகள் ஒன்றுசேர்ந்து அந்தத் தீர்மானத்தைத் தோல்வி அடையச்செய்துவிட்டன.


இலங்கைக்கு இனப்படுகொலைக்கு, சிங்கள இன வெறியன் இராசபக்சேவுக்கு, 22 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன அமெரிக்கத் தலைமை யிலான நாடுகள் மேற்கொண்ட முயற்சி முறியடிக் கப்பட் டிருக்கிறது. உலக அளவில் எம் தமிழ்ச் சொந்தங் களுக்கு நேர்ந்து வருகின்ற இந்தக் கொடுமை களையெல்லாம் வரலாறு பார்த்துக்கொண்டிருக் கிறது. காலம் இதற்கெல்லாம் விடைசொல்லும். அதற்குரிய நேரம் வரும்.


விடுதலைக்களத்தில் கிட்டுவை இழந்தாலும், சார்லஸ் அந்தோணியை இழந்தாலும், பாலசிங் கத்தை இழந்தாலும், சுப. தமிழ்ச்செல்வனை இழந் தாலும் தொடர்ந்து அந்த விடுதலைப்போரை முன்னெடுத்துச் சென்ற மாவீரன், மகத்தான போராளித்தலைவன் பிரபாகரன் அவர்கள், ஈழவிடு தலைக்கான ஐந்தாம் போரையும் தொடங்குவார். அந்தப் போர் விரைவில் தொடங்கும். இந்த நிலையில், களப்பலியான எமது தமிழ்ச்சொந்தங்களுக்கும் வீரச்சாவடைந்த எமது தளபதிகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.


28-5-2009 அன்று சேப்பாக்கத்தில் நடைபெற்ற அமைதிப் பேரணி நிறைவுப்பொதுக்கூட்டத்தில் எழுச்சித்தமிழர் ஆற்றிய உரை
தொகுப்பு : கவினி, உதவி : வீர. பொன்னிவளவன்

 

 

 

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann