தமிழீழ விடுதலைப்போராட்டம்

உலகத்தமிழர்கள் சோர்வடையாமல் ஒருங்கிணைந்து

முன்னெடுத்துச்செல்லவேண்டும்!

 

கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத்தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ சர்வதேசச்சமூகமோ எமது ஈழத்தமிழ்ச் சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப் படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது. சிங்கள இனவெறியர்கள் திட்டமிட்டவாறு எமது இனத்தை கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்து அழித்தொழித்துவிட்டனர்.


உச்சகட்டமாக எமது மக்களின் ஒரே பாது காவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர்.

உலகத்தமிழினத்தை தலை நிமிரச் செய்த தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் படுகொலை செய்து விட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக் கிறது. மேதகு பிரபாகரன் அவர்கள் படுகொலை யானரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50,000க்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.


ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடிமறைப்பதற்காகவும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது.

இந் நிலையில், இந்தியாவும் சர்வதேசச் சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்தக் கொடூரமான இனப்படு கொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பதுதான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாகவுள்ளது. உலகமெங்கும் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும் முல்லைத் தீவில் எமது மக்களும் எமது தலைவர்களும் கேட்பாரற்ற அனாதைகளைப்போல படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இரத்தக் கண்ணீரை வடிக்க வைக்கிறது.

ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரப் பூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், பூலித்தேவன் போன்றவர்களை மிகக் கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.


இந்நிலையில், மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக் கத்தை செலுத்துகிறோம்.புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும் ஈழவிடுதலைப்போரை அழிக்க முடியாது.

இருந்தாலும் மறைந்தாலும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனbறியன் இராஜபக்சேவின் காட்டு மிராண்டித்தனமானக் கொலைவெறித்தனத்தை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிப் பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக் கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலைச்சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம்.

புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட் டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


இது தொடர்பாகவும். தேர்தல் முடிவுகள் தொடர் பாகவும், அடுத்தக்கட்டப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாட நாளை 21.5.2009 காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச்சிறுத்தை களின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாநில - மாவட்ட நிர்வாகக்குழு தீர்மானங்கள்:

தேர்தல் முடிவுகள் அறிவிப்புக்குப்பின் விடுதலைச்சிறுத்தைகளின் மாநில - மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வுக்கூட்டம் எழுச்சித்தமிழர் தலைமையில் கடந்த 21.5.2009 அன்று வேளச்சேரி ‘தாய்மண்’ வளாகத்தில் நடைப்பெற்றது. விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனதும் நடைப்பெற்ற முதல் கூட்டமானதால் மாவட்டம் முழுவதும் நிர்வாகிகள் வந்து எழுச்சித்தமிழருக்கு வாழ்த்துக்கூறியவண்ணம் இருந்தனர்.

இரண்டுமணி நேரம் நடைப்பெற்ற கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்களை தலைவர் திருமாவளவன் வாசித்தார். மாநில - மாவட்ட நிர்வாகிகள் கரவொலி எழுப்பி தீர்மானங்களை வரவேற்றனர்.


1. தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான நான்காவதுப் போரில் வீரச்சாவடைந்த படைத்தளபதிகள் உள்ளிட்ட அனைத்துப் போராளிகளுக்கும், களப்பலியான பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அவை தமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறது.


2. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பரப்பை முழுமையாகக் கைப்பற்றிவிட்டோம் என்பதை அனைத்துலக சமூகத்திற்கு அறிவிக்க வேண்டியும், அமெரிக்கா இங்கிலாந்து போன்ற ஒரு சில நாடுகள் மேற்கொண்ட போர்நிறுத்த முயற்சிகளை முறியடிக்க வேண்டியும் சிங்கள இனவெறி அரசு காட்டுமிராண்டித்தனமான தமிழின அழித்தொழிப்பு நடவடிக்கையில் இறங்கி ஈரவிக்கமற்ற முறையில் ஏறத்தாழ 50,000த்திற்கும் மேலான தமிழர்களை இரண்டொரு நாளில் கொன்று குவித்துள்ளனர்.

மனிதநேய மரபுகளையோ சர்வதேசப் போர் மரபுகளையோ ஒரு பொருட்டாகவே மதிக்காமல் கொடூரமான இனப்படுகொலையை நடத்தியுள்ளனர். மேலும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் அநாகரீகமான முறையில், கேவலப்படுத்தி கடும் வதைகளுக்கு ஆளாக்கிக் கொத்துக் கொத்தாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.

சிங்கள இனவெறியர்களின் இத்தகைய இழிவானப் போக்குகளை விடுதலைச்சிறுத்தைகள் மிகவன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், கொலைவெறியன் இராஜபக்சேவின் தலைமையிலான சிங்கள இனவெறிக்கும்பலை அனைத்துலக நீதிமன்றத்தின் மூலம் விசாரித்து ஈழத்தமிழர்களுக்கு நீதி கிட்டும் வகையில் மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமென அய்.நா.பேரவையை விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அவை கேட்டுக்கொள்கிறது.


3. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் இயக்கத்தின் முன்னணித் தளபதிகளையும் படுகொலை செய்துவிட்டதாக தம்பட்டமடிக்கும் சிங்கள இனவெறி அரசு, எஞ்சியுள்ள அவர்தம் குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது நெருங்கிய உறவினர்களிடமோ பலியானவர்களின் உடல்களை ஒப்படைத்து அவர்களை அடையாளம் கண்டு உறுதிப்படுத்துவதற்கும், அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களே இறுதி அடக்கம் செய்வதற்கும் சிங்கள அரசு அனுமதிக்க வேண்டும்.

மாறாக, அவர்தம் உடல்களை சிங்கள இனவெறியர்களே புதைக்கவோ எரிக்கவோ கூடாது எனவும், உறவினர்களை கண்டுபிடிக்கும் வரையில் பலியானோரின் உடல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.


4. விடுதலைப்புலிகளுக்கெதிரானப் போர் முடிந்துவிட்டதென சிங்கள இன வெறியர்கள் அறித்துள்ள நிலையில், உணவு, மருந்து, குடிநீர் முதலான அடிப்படைத் தேவைகளை அங்கே ஆற்றொணாத் துயத்தில் சிக்கியுள்ள தமிழ் மக்களுக்கு வழங்கிட உரிய ஏற்பாடுகளை செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக செய்திட வேண்டுமென சர்வதேசச் சமூகத்திற்கு இந்த அவை வேண்டுகோள் விடுக்கிறது.

அத்துடன், ஈழத்தமிழர்களின் மறுவாழ்வுக்கென உதவ முன்வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் எத்தகைய நிலையிலும் சிங்கள இனவெறி ஆட்சியார்கள் மூலமாக அத்தகைய உதவிகளைச் செய்யவே கூடாது என இந்த அவை கேட்டுக்கொள்கிறது.


5. கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்ற ஈழவிடுதலைப்போரில் சிங்கள இனவெறியர்களால் பாதிக்கப்பட்டு எஞ்சியிருக்கும் தமிழர்களுக்கு சிங்கள ஒற்றை ஆட்சியின் கீழ் சமஉரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையானது உரிய நீதிவழங்கும் அணுகுமுறையாகாது.

ஆகவே, அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களின் ஒரே தேவையான ‘தமிழ் ஈழத்தை’ மீட்பதற்குரிய வகையில் அரசியல் தீர்வுகாண முயற்சிக்க வேண்டுமென இந்த அவை வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. மேலும், இத்தகு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிகளை மேற்சொன்ன நாடுகள் மேற்கொள்ளும் நிலையில், எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு மட்டுமே பேசுவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். மாறாக, புலிகள் அல்லாத, மக்களுக்கு எதிரான வேறெந்தத் தனி நபர்களோடும் அத்தகைய பேச்சுவார்த்தை முயற்சிகளை மேற்கொள்ளவே கூடாது எனவும் சர்வதேசச் சமூகத்தை இந்த அவை கேட்டுக்கொள்கிறது.

 


6. தமிழீழ விடுதலைப்புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்த அறிவிப்பைச் செய்த பின்னரும், கடைசி நேரத்தில் சிங்கள அரசு அல்லாத இந்திய போன்ற வேறு சில அரசுகளின் முன்னிலையில் எஞ்சியுள்ள தமிழர்களைப் பாதுகாக்கும் நோக்கில் ஆயுதங்களை கையளித்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்த பின்னரும் சிங்கள இனவெறியர்களும் இந்தியா உள்ளிட்ட சர்வதேசச் சமூகமும் மனிதாபிமான அடிப்படையில் கூட புலிகளின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுவும் பல்லாயிரக்கணக்கான மக்களையும் புலிகளின் தலைவர்களையும் சிங்கள இனவெறியர்கள் அழித்தொழிக்கும் வரையில் வேடிக்கைப் பார்த்ததுவும் வரலாற்றில் படிந்த, துடைக்க முடியாத பெரும் களங்கமாகும். இந்தியா உள்ளிட்ட அனைத்துலக சமுகத்தின் மனிதநேயமற்ற இந்த அணுகுமுறைகளை ஆழ்ந்த வேதனையுடன் இந்த அவை வன்மையாகக் கண்டிக்கிறது.


7. முல்லைத் தீவில் கடந்த சில நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராளிகளையும் ஈவிறக்கமற்ற முறையில் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசைக் கண்டிக்கும் வகையிலும், களப்பலியான ஈழத்தமிழ்ச் சொந்தங்களக்கும் அஞ்சலி செலுத்தும் வகையிலும் எதிர்வரும் மே 28’ 2009 அன்று சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளின் அமைதிப் பேரணி நடத்துவதென இந்த அவை தீர்மானிக்கிறது.


8. நடந்து முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்த தமிழக வாக்காளப் பொதுமக்களக்கும் கூட்டணிக் கட்சியினருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இந்த அவை நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

 

 

முகப்பு

 

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann