மே தினம் கொண்டாடிக் கொண்டிருந்தவரெல்லாம், இன்றைக்கு மேதினத்தை மறந்துவிட்டு வாக்குச் சேகரித்துக் கொண்டிருக்கிற போது, மே தினத்தை நினைவுகூர்ந்து விழா எடுப்பது தலைவர் கலைஞர் அவர்கள்தான். அடிப்படையில் தலைவர் கலைஞர் அவர்கள் தானும் ஒரு கம்யூ னிஸ்ட் என்று அடிக்கடி சொல்வார். சிலர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந் தால்தான் கம்யூனிஸ்ட். இல்லையென்றால் அவர்கள் கம்யூனிஸ்ட் இல்லை என்று எண்ணுவார்கள். ஆனால், ரஷ்யாவுக்குப் போய்விட்டு வந்த பிறகு தந்தை பெரியார் சொன்னார், நானும் ஒரு கம்யூனிஸ்டு தான் என்று அதைப்போல தந்தை பெரியாரின் பிள்ளை தலைவர் கலைஞர் அவர்கள், நானும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்வார்.
அப்படிப்பட்ட பொதுவுடைமைச் சிந்தனையாளராக இருக்கக் கூடிய தலைவர் கலைஞர் அவர்கள், இன்றைக்குத் தொழிலாளர் வர்க்கத்தைப் போற்றுகின்ற வகையில், இந்த விழாவை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர்களையும், உழைக்கும் வர்க்கத்தினரையும் பெரிதும் மதிக்கிற தலைவர் கலைஞர் அவர்கள் சாதனைகளைச் சொல்லி வாக்குச் சேகரிக்கிறார். உழைக்கும் வர்க்கமே, உங்களுக்கு உழைப்பதற்கு எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறார்.
ஆனால், எதிரணியில் இருப்பவர்கள், சாதனைகளைச் சொல்லாமல், ஜாதகங்கள் பேசி வாக்குக் கேட்கிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள் தமது ஆட்சியின் மூலம் சாதித்திருக்கிற சாதனைகளை எல்லாம் பட்டியலிட்டு, தொழிலாளர் வர்க்கத்திற்குச் செய்த சாதனைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, வாக்குக் கேட்கிறார்.
மே தினத்தை போற்றக்கூடிய வகையில் மேதினப் பூங்காவை சென்னையிலே அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
மே தினத்தை அரசு விடுமுறையாக அறிவித்துச் சம்பளமும் வழங்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
இப்படிச் சாதனைகளைச் சொல்லி வாக்குகள் கேட்கிறார். எதிரணி யில் இருப்பவர்கள் பழிசொல்லி அவதூறு பரப்பி, குற்றச்சாட்டுகளை வீசி வாக்குக் கேட்கிறார்கள். ஏதாவது சாதித்திருந்தால் தானே சாதனைகளைச் சொல்ல சாதிக்கிற ஆற்றல் இருந்தால்தானே சாதிக்கப் போகிறோம் என்று சொல்வார்கள். ஆகவேதான், இன்றைக்கு தலைவர் கலைஞர் அவர்கள் மீது அவதூறுகளைப் பரப்பி குற்றச்சாட்டுகளை வீசி வாக்குகளைப் பறிப்பதற்கு, அபகரிப்பதற்கு வேடம் போடுகிறார்கள்.
ராஜபக்சே திடீரென்று தந்தை செல்வா வேடம் போட்டால் எப்படி இருக்கும்? ஈழத்தந்தை செல்வா அவர்கள் ஈழத்தமிழர்களுக்காக தனித்தமிழ் ஈழம்தான் தீர்வு என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலே தீர்மானம் நிறைவேற்றி அந்தத் தீர்மானத்தையொட்டி வளர்ந்த இயக்கம்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற விடுதலைப்போராளிகள் இயக்கம். ஆக, ஈழத்தந்தை செல்வாதான் தமிழீழத்தின் மூலம். அப்படிப்பட்ட அந்த ஈழத்தந்தை செல்வா வேடத்தை ராஜபக்சே போட்டால் எப்படி நகைப்புக்கு உரியதாக இருக்குமோ அப்படித்தான் ஜெயலலிதா இப்போது வேடம் போடுகிறார். தனித் தமிழ் ஈழத்தை அவர் வென்றெடுத்துத் தரப் போகிறாராம். இந்திய படையை அனுப்பி தமிழ் ஈழத்தை வென்றெடுக்கப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.
தமிழ்த் தேசிய உணர்வாளர்களே, தமிழ்ப் பற்றாளர்களே, ஈழ உணர்வாளர்களே உங்களை நான் மன்றாடி தோழமையோடு கேட்டுக்கொள்கிறேன். ஒப்பிட்டுப் பாருங்கள், ஈழத்திற்காக ஈழ விடுதலைக்காக, ஈழத்து மக்களின் நலன்களுக்காக அடுக்கடுக்கான போராட்டங்கள் நடத்திய தலைவர் யார்? இதுவரையில் அதிமுக தலைமைப் பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து இத்தனை ஆண்டுகளில் என்றைக்காவது ஒரே ஒரு நாள் ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்காகக் கவலைப்பட்டதுண்டா? கண்ணீர் வடித்ததுண்டா? கண்டன அறிக்கைகள் வெளியிட்டதுண்டா? ஜெயலலிதாவுக்கு திடீர் கரிசனம் எதற்கு? தேர்தல் ஆதாயம் தேடுவதற்காக மட்டுமே இந்த நாடகம் என்பதைத் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மே மாதம் 11ஆம் தேதிக்குப் பின்னர் 12ஆம் தேதி அல்லது 13ஆம் தேதி செல்வி ஜெயலலிதா அவர்கள் ஈழத்தைப் பற்றிப் பேசுவாரா? தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும்தான் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்றைக்கு இன அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தும்கூட, எப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்தாலும்கூட இந்த அழித்தொழிப்பு நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் நொடிப் பொழுதும் வருந்தி வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிற தலைவர் கலைஞர் அவர்கள், எந்தச் சூழ்நிலையிலும் ஈழத் தமிழர்களை கைவிடமாட்டார்கள். ஈழம் என்கிற கருத்தைக் கைவிடமாட்டார்கள். இது நாடறிந்த உண்மை. உலகறிந்த உண்மை. கொள்கையளவிலே அவர் ஈழத்தை நேசிக்கிற தலைவர். ஆனால், இன்றைக்கு அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருப்பவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அதிமுகவில் இணைந்தது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.
நான் கேட்கிறேன், இடதுசாரிகளே, நீங்கள் அதிமுக கூட்டணிக்குப் போனபோது ஈழத்தமிழர்களைப் பற்றிப் பேசிவிட்டா போனீர்கள்? ஈழத் தமிழர்களை இந்திய அரசு சேர்ந்து கொல்லுகிறது. அதனால், நாங்கள் அதிமுக அணிக்குப் போகிறோம் என்று சொல்லிவிட்டா போனீர்கள்? அணுசக்தி ஒப்பந்தத்திலே காங்கிரசுடன் உங்களுக்கு முரண்பாடு. அதனால் காங்கிரசு அணிக்குக் கொடுத்திருந்த ஆதரவை கைவிட்டு நீங்கள் வெளியே வந்தீர்கள். வெளியே வந்ததும் எங்கே போகவேண்டும் என்று தெரியாமல் சிரஞ்சீவி வீட்டு வாசலுக்குப் போனீர்கள். அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை. விஜயகாந்த் வீட்டு வாசலுக்கு போனீர்கள். அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை. வேறு வழியில்லாமல் போயஸ் தோட்டம் போனீர்கள். நெஞ்சிலே கை வைத்துச் சொல்லுங்கள் ஈழத் தமிழர்களுக்காகவா, ஈழம் விடுதலை பெறவேண்டும் என்பதற்காகவா, ஈழப்படுகொலையை தடுத்துநிறுத்த வேண்டும் என்பதற்காகவா அதிமுக கூட்டணிக்குப் போனீர்கள்?
அண்ணன் வைகோ அவர்களே, உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். நீங்கள் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கிற ஒரே பாதுகாப்பு அரண் செல்வி ஜெயலலிதா என்று எண்ணியா அந்தக் கூட்டணிக்குப் போனீர்கள்? 2006ஆம் ஆண்டு திமுகவோடு கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியபோது இரண்டே இரண்டு இடங்களைப் பெறுவதில் ஏற்பட்ட சிக்கல். கலைஞர் தரவேண்டிய தொகுதிகளோடு கூட இரண்டு இடங்களைக் கேட்டீர்கள். அந்த இரண்டு இடங்களைத் தர முடியாத நிலையில் எண்ணிக்கைக்குக்கூட ஒத்துக்கொண்டார். ஆனால், குறிப்பிட்ட சில தொகுதிகளை குறிப்பிட்டுக் கேட்டதனால் அந்த இடங்களைத் தர முடியாது என்று சொன்னாரே தவிர எண்ணிக்கைகளை முடியவில்லை என்று கலைஞர் சொல்லவில்லை.
இரண்டே இரண்டு இடங்களுக்காக 2006ஆம் ஆண்டு அதிமுக கூட்டணிக்குப் போனவர் அண்ணன் வைகோ. இன்னும் அங்கேயே நீடிக்கிறார். ஈழத் தமிழர்களுக்காகவா போனார்? ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக்கூடிய ஒரே அரண் ஜெயலலிதா என்று சொல்லிவிட்டா போனீர்கள்? இல்லை. இன்றைக்குப் பா.ம.க., அதிமுக கூட்டணிக்குப் போயிருக்கிறது. ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவா? தமிழ் உணர்வாளர்களே! நீங்கள் நெஞ்சில் கை வைத்து நிதானமாக யோசித்து, சிந்தித்துச் சொல்லுங்கள்.
கடைசிவரையில் திமுகவோடு பேசிக் கொண்டிருந்தீர்கள். அதிமுகவோடும் பேசிக் கொண்டிருந்தீர்கள். அதிமுக அணிக்குப் போனதற்கு என்ன காரணம்? ஒரே ஒரு தொகுதி. ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதற்காகவா அதிமுகவுக்குப் போனீர்கள். இல்லை. தொகுதிகளைப் பெறுவதிலே ஏற்பட்ட சிக்கலால் ஒரே ஒரு இடத்திற்காக இடம் மாறி, அணி மாறி பா.ம.க. போயிருக்கிறது. இரண்டே இரண்டு இடங்களுக்காக அணி மாறி மதிமுக போயிருக்கிறது. ஆனால், இன்றைக்கு இதுதான் சர்ந்தப்பம் என்று சொல்லி ஈழத்தமிழர்களை பாதுகாப்பதற்கான அணி என்று அப்பட்டமாகப் பொய் சொல்லி, அவதூறைப் பரப்பி, வாக்குச் சேகரிக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பார்த்து கேட்கிறேன். தமிழ் உணர்வாளர்களைப் பார்த்து கேட்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களும் அல்லது அவரோடு இணைந் திருக்கிற விடுதலைச்சிறுத்தைகளும் ஈழத் தமிழர்களுக்காகப் போராடியதில்லையா? ஈழத் தமிழர்களை நேசிக்கவில்லையா? ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை உள்ளவர்கள் இல்லையா? எங்களுக்கு நடிக்கத் தெரியாது. தலைவர் கலைஞர் அவர்கள் ஓர் அரசைக் கையிலே வைத்துக்கொண்டு அந்த அரசின் மூலமாக இந்திய அரசுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்க முடியுமோ அவ்வளவு அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார். உடனிருந்து பார்க்கிறேன். தொலைவில் இருந்து பார்க்கவில்லை.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டச் சொன்னார்கள். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார் தலைவர் கலைஞர். அங்கே தீர்மானம் நிறைவேற்றினார். ஈழத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருந்திருக்குமேயானால் ஜெயலலிதா கலந்து கொண்டிருக்க வேண்டுமா இல்லையா? கலந்து கொண்டார்களா? கலந்து கொள்ளவில்லை. அதுதான் அவரது அக்கறை. சட்டப் பேவையிலே அவர் எதிர்க்கட்சித் தலைவர். தலைவர் கலைஞர் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஆனால், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய போது சட்டப் பேரவையில் ஜெயலலிதா இருந்தாரா? நானும் ஈழத்தமிழர்களை பாதுகாக்க உதவுகிறேன். போரை நிறுத்தச் சொல்லுங்கள் என்று அவர் எதிர்கட்சித் தலைவர் என்கின்ற முறையிலே அதில் பங்கேற்றாரா?
‘தமிழர் சங்கிலி’ என்ற மகத்தான ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டத்தை, கொட்டும் மழையிலே நடத்தினார் தலைவர் கலைஞர். அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். ஈழத் தமிழர்கள் மீது உண்மையான கரிசனம் இருந்திருந்தால் ஜெயலலிதா வந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்திலே கலந்து கொண்டிருக்க வேண்டுமா இல்லையா? கலந்து கொண்டாரா? அனைவருக்கும் மடல் எழுதி பிரதமரைச் சந்திப்பதற்காக அழைப்பு விடுத்தார். பிரதமரைச் சந்திக்க ஜெயலலிதா டெல்லிக்கு வந்தாரா?
கடைசிவரையில் இலவு காத்த கிளியாக காத்திருந்து காங்கிரசே வருக, வருக! சிவப்பு கம்பளம் விரித்து வைத்திருக்கிறேன். கூட்டணிக்கு வருக வருக என்று அழைப்பு விடுத்துப் பார்த்தார். காங்கிரசு இருக்கும் இடத்தில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று இடதுசாரிகள் சொல்லிவிட்டுப் பக்கத்திலே அமர்ந்திருக்கும் போது, அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் “இடதுசாரிகளே இருந்தால் இருங்கள், போனால் போங்கள். நீங்கள் எனக்கு ஒரு பொருட்டே இல்லை. உங்களை நான் தலைவர்களாக மதிக்கவில்லை” என்பதைப் போலத்தான் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். உடனடியாக வீரப்ப மொய்லி அவர்கள் திமுக கூட்டணியி லிருந்து காங்கிரசு ஒருபோதும் வெளியேறாது என்று சொன்னார். அப்படிச் சொன்ன பிறகுதான் வேறு வழியே இல்லாமல் ஒரு நாள் கூத்து, உண்ணாவிரதக் கூத்து. யாரை ஏமாற்ற? தமிழ் தேசிய உணர்வாளர்களே இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று துடிக்கிற இன உணர்வாளர்களே உங்களைப் பார்த்து நான் கேட்கிறேன். என்றைக்கு ஜெயலலிதா அம்மையாருக்கு அக்கறை வந்தது? எவ்வளவு நாட்களுக்கு இந்த அக்கறை? எத்தனை காலம் இந்த அக்கறை நீடிக்கும்?
இப்படி இனம் அழிந்து கொண்டிருக்கிற வேளையில் கண்ணீர் வடித்துக் கதறி அழுது தலைவர் கலைஞர் அவர்கள் எண்ணற்ற அறிக்கை விடுத்தார். சுப.தமிழ்ச் செல்வன் கொல்லப்படுகிறார். அவர் இறந்துபோனார் என்கிற செய்தியைக் கேட்டவுடன், தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பதைப் போல தலைவர் கலைஞர் அவர்களுக்கு இயல்பாக அந்த உணர்ச்சி பீறிட்டு எழுந்து வந்து தமிழ்ச் செல்வனுக்கு வீரவணக்கம் செலுத்தி கவிதை எழுதுகிறார். அந்த இயல்பான உணர்ச்சி ஜெயலலிதாவிடம் உண்டா? அதைக் கிண்டல் அடித்தவர் தானே? அந்தக் கவிதையைக் காட்டி ஆட்சியைக் கலைக்கச் சொன்னவர்தானே? “சுப.தமிழ்ச்செல்வனுக்காக வீரவணக்கக் கவிதை எழுதுகிறார் கலைஞர். அவர் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர். எனவே, அவரது ஆட்சியைக் கலையுங்கள்” என்று சொன்னவர்தானே. கடைசிவரை அப்படித்தானே பேசினார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சட்டப் பேரவையில் எவ்வளவு ஆவேசமாக முழங்கினார். அன்றைக்கு சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்து பிரபாகரன் பேட்டி கொடுத்தபோது உலகமே அவரை உற்று கவனித்துக் கொண்டிருந்தது. ராஜபக்சேவும் பார்த்திருப்பார். கணவனை இழந்து வாடிக் கொண்டிருக்கிற அன்னை சோனியாகாந்தி அம்மையாரும் பார்த்திருப்பார்கள். சோனியாகாந்தி அம்iயாருக்குக்கூட வராத எண்ணம் ஜெயலலிதாவுக்கு வந்தது. பிரபாகரனைப் பிடித்து வந்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்து இங்கே தூக்கிலிட வேண்டும் என்று தீர்மானம் போட்டவர்தான். இன்றைக்கும் அது சட்டப்பேரவைக் குறிப்பிலே இருக்கிறது.
என்றைக்காவது தடுமாறியாவது, தவறியாவது தலைவர் கலைஞர் அவர்கள் பிரபாகரனைத் தூக்கிலிட வேண்டும் அல்லது கைது செய்யவேண்டும் இந்தியாவிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னதுண்டா? மறந்தாவது அப்படிப் பேசியதுண்டா? ஆனால் ஜெயலலிதா பேசினார். ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு ராஜபக்சேவிடம் சரணடைய வேண்டும் என்று சொன்னவர்தானே ஜெயலலிதா அவர்கள்! நா தடுமாறியாவது தலைவர் கலைஞர் அவர்கள் அப்படிச் சொல்லியிருப்பாரா? “தனித்தமிழ் ஈழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்” என்றுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறார். அதை எப்படி வென்றெடுக்க வேண்டும் என்பதைப் பற்றி இங்கிருந்து நாம் சொல்லமுடியாது.
ஆக, ஈழத்தமிழர்களைப் பற்றி இவருக்கு என்ன திடீர்க் கரிசனம்? எப்படி திடீர் அக்கறை? அவர் ஈழம் என்ற சொல்லைக் கூட பயன்படுத்தக்கூடாது என்று சொன்னவர். ராஜபக்சேவின் குரலை அப்படியே எதிரொலிப்பவர். இடதுசாரிகள் தா.பாண்டியனாக இருந்தாலும், என். வரதராஜனாக இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவது எல்லாம் இந்திய இறையாண்மையை விட சிங்கள இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான். இடதுசாரிகள் ஈழத்தை விடுதலை செய்யவேண்டும் என்பதிலே உடன்பாடில்லாதவர்கள். ஜெயலலிதா ஈழத்திற்கு எதிரானவர்.
தனித் தமிழ் ஈழம் அமைப்போம் என்று சொல்கிற ஜெயலலிதா அவர்களே, விடுதலைப்புலிகள் பற்றி உங்கள் நிலை என்ன? அவர்கள் பயங்கரவாதிகளா? அல்லது போராளிகளா? விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என்று ராஜபக்சே சொல்கிறார். அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது ஓர் இனத்தின் விடுதலைப் போராளிகளா? அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள். சொல்லமுடியுமா உங்களால். ஆகவே, ஈழத்தமிழர்களைக் காட்டி திமுக கூட்டணியின் மீது சேறு வாரிப் பூசி இந்தக் கூட்டணிக்கு எதிராக அவதூறு பரப்பித் தோற்கடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா முயற்சிக்கிறார்.
இந்தத் தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் தம்முடைய ராஜதந்திரத்தைக் காட்டியிருக்கிறார். அவர் வெற்றி வெறுவாரேயானால், இந்தக் கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறுமேயானால், தலைவர் கலைஞர் அவர்கள், தனித் தமிழ் ஈழத்தை வென்றெடுப்பதற்கு, அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வார் என்கிற அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது. கொள்கை அடிப்படையிலே அந்த உணர்வுள்ளவன் என்கிற உணர்வோடு சொல்லுகிறேன்.
முக்கியமாக நான் இரண்டு சமூகத்திற்கு அழைப்பு விடுக்க, அறைகூவல் விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஒன்று, தமிழகம் எங்கும் பரவியிருக்கிற 234 தொகுதிகளிலும் கணிசமாக வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிற ஒடுக்கப்பட்ட சேரிவாழ் சமூகத்திற்கு, தலித் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கக் கடமைப் பட்டிருக்கிறேன். அரை நூற்றாண்டு கால அரசியல் வரலாற்றில் இதுவரை எந்தக் கூட்டணியிலும் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற கட்சிக்கு இரண்டு இடங்கள் அளித்ததில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் மனமுவந்து 2 இடங்களை வழங்கி விடுதலைச்சிறுத்தைகள் அங்கீகாரம் பெற வேண்டும் என்று ஆசிர்வதித்திருக்கிறார். ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகம், தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய வகையிலே ஒட்டு மொத்தமாக வலுப்படுத்த வேண்டும்.
சிறுபான்மைச் சமூகத்தை மதிக்கிற வகையிலே தலைவர் கலைஞர் அவர்கள் இசுலாமியர்களுக்கு 2 இடங்களைத் தந்தார். மனித நேய மக்கள் கட்சி ஒரு இடம் போதாது என்று போய்விட்டார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாரம்பரியம் மிக்க கட்சி. ஒரு இடம் கூட கேட்டார். ஒட்டுமொத்தமாக இசுலாமிய சமூகத்திற்கு இரண்டு இடங்கள். ஆனால், அதிமுக கூட்டணியிலே தலித்துகளுக்கு இடமுண்டா? ஓராயிரம் தலித் அமைப்புகள் போய் காலடியிலே விழுந்து கும்பிட்டார்கள். மதிப்பளித்தாரா? தலித்துகளுக்கு அங்கே மதிப்பில்லை. எனவே ஒட்டுமொத்த தலித் அமைப்புகளும் அதிமுகவை புறக்கணிக்க வேண்டும். இது என்னுடைய வேண்டுகோள்.
இசுலாமியர்கள் தேசிய லீக், இன்னும் சில முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தும்கூட அவர்களுக்கு உரிய மதிப்பில்லை. எனவே, இந்திய தேசிய லீக் உள்ளிட்ட கண்ணியவான் காயிதேமில்லத் அவர்களுடைய பேரன் தாவூத்மியான்கான் அவர்கள்கூட அங்கே ஆதரவு தெரிவித்தவர்தான். அவரும் இன்றைக்கு திமுக கூட்டணியை ஆதரிக்கிறார். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது. இந்திய தவ்ஹீத் ஜமாத் திமுக கூட்டணியை ஆதரிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏராளமான ஜமாத்கள் திமுக கூட்டணியை ஆதரிக்கின்றன. ஏனென்றால், முஸ்லீம்களுக்கு அந்த அணியில் இடமில்லை. ஏன் தலித்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினத்தவருக்கும் அந்த அணியில் இடம் இல்லை என்று சொன்னால் அதற்கு ஒரே ஒரு காரணம்தான். ஒரு சைகை காட்டியிருக்கிறார். என்ன சைகை என்றால் பாரதிய சனதா ஒருவேளை ஆட்சியைப் பிடிக்கும் நிலை வந்தால் என்னையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒரு துணைப் பிரதமர் பதவியாவது கொடுங்கள் என்று சைகை காட்டுகிற வகையில்தான் தேர்தல் அறிக்கையிலே ‘ராமர் பாலத்தை பாதுகாப்போம், சேதுக் கால்வாய்த் திட்டத்தை ரத்து செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார். இது எதற்காகச் சொல்லப்பட்ட சைகை என்றால், பாரதிய சனதாவே உன்னுடைய குரலை நான் அப்படியே எதிரொலித்திருக்கிறேன். எனவே, தேர்தலுக்குப் பின் நீயும் நானும் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்பதற்கான சைகை.
இசுலாமியப் பெருமக்களே, அந்த அணியில் உங்களுக்கு இடமில்லை என்பதும் பாரதிய சனதாவுக்கு வைத்திருக்கிற சைகை. அது ஒரு ‘சிக்னல்’. பார்த்தீர்களா முஸ்லீம்களை நான் ஊக்கப்படுத்தவில்லை. முஸ்லிம்களுக்கு நான் இடம் கொடுக்கவில்லை. கிறித்தவர்களையும் நான் மதிக்கவில்லை என்று சொல்வதன் மூலம் தேர்தலுக்குப் பின்னர் பாரதிய சனதாவோடு கூட்டணி வைத்துக்கொள்கிற முயற்சி. இந்த நிலையில் ஒட்டுமொத்தச் சிறுபான்மையின மக்களும், இசுலாமியர்களும், கிறித்தவர்களும் அதிமுக அணிக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நான் விடுக்கின்ற வேண்டுகோள். ஒரே ஒரு கையெழுத்தால் செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஒரு இலட்சத்து 72 ஆயிரம் அரசு ஊழியர்களை ‘எஸ்மா’, ‘டெஸ்மா’ சட்டங்களைக் காட்டி மிரட்டி வீட்டுக்கு அனுப்பினார். ஏராளமானவர்களைச் சிறைப்படுத்தினார். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன் அதை நீக்கம் செய்தார். அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் வேலைவாய்ப்புக் கொடுத்தார். எனவே, அரசு ஊழியர்களே, தொழிலாளர்களே, நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக கூட்டணிக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்.
திமுக தலைமையிலான இந்த அணி வெற்றிபெறுமேயானால் நாடாளுமன்றத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் உழைக்கும் வர்க்கத்திற்காகவும் சிறுபான்மை மக்களுக்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கும். எனவே, உதய சூரியன் சின்னத்திற்கும், நட்சத்திரச் சின்னத்திற்கும், கை சின்னத்திற்கும் வாக்களித்துப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்!
சனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திருச்சியில் மே 1ஆம் நாள் நடைபெற்ற
தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் ஆற்றிய உரை.
தலையங்கத்திற்காக...
|