தீட்சா பூமியில் சிறுத்தைகளுடன் எழுச்சித்தமிழர்

-    கௌதமசன்னா

 

oட்டுமொத்த இந்தியாவே தொடர்ந்து விதிர்த்து நின்ற நாள் 14.10.1956. 1937இல் நடந்த இயோலா மாநாட்டில், “நான் இந்துவாகப் பிறந்தது என் கையில் இல்லை; ஆனால், நான் ஓர் இந்து வாக இறக்கமாட்டேன்!” என்று புரட்சியாளர் அம்பேத்கர் அறி வித்த பிறகு நீண்ட இடை வெளியில் நடந்த பல்வேறு கருத்து மோதல்கள், சமூகக் கொந்தளிப்பு களின் ஊடே தன்னுடைய சபதத்தை நிறைவேற்ற அம்பேத்கர் தேர்ந் தெடுத்த இடம்-நாக்பூர். தேர்ந் தெடுத்த நாள்-14.10.1956. இந்து எனும் அவலத்திலிருந்து விடுதலை பெறத் தேர்ந்தெடுத்த மதம்-பௌத்தம்.

புரட்சியாளர் அம்பேத்கர் எதைத் தேர்ந்தெடுத்தாலும் அதற்கு அழுத்தமான வரலாற்று, அரசியல், பண்பாட்டுக் காரணங்கள் இருக்கும். அதனால்தான் அந்த நாளை இந்தியச் சமூகம் மிகுந்த உன்னிப் போடு கவனித்தது. 14.10.1956 அன்று பௌத்தம் ஏற்க விருப்பம் உள்ளவர்கள் சேரலாம் என பொது வான அழைப்பு மட்டுமே விடுக்கப் பட்டது. புரட்சியாளர் அம்பேத் கரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு சுமார் 5,00,000 பேர் பௌத்தம் ஏற்றனர். மூன்று நாட்கள் நடை பெற்ற அந்த நிகழ்ச்சியைக் கண்டு இந்தியா மட்டுமல்லாமல் உலகமே அதிசயத்துப் போனது.

எத்தனையோ நூற்றாண்டுகளாக வேரோடிப் போய், புரையோடிப்போயிருந்த இந்து மதத்தை விட்டு தூக்கி எறிந்து ஐந்து இலட்சம் பேர் புரட்சி யாளர் அம்பேத்கரின் வார்த்தையின் மீது  நம்பிக்கைக் கொண்டு   தங்களை புதுவித மனிதர் களாக்கிக் கொண்டது  எளிமையான விஷய மல்ல. அதை அம்பேத்கரின் வார்த்தை சாதித்தது. அதனால்தான் அவரின் வார்த்தைகளைக் கண்டு இந்து சமூகம் அஞ்சியது. எனினும் அம்பேத்கரின் செயல்பாடுகள் அதன் அச்சத்தை அதிக மாக்கியதே தவிர குறைக்கவில்லை. பௌத்தம் மீண்டும் உறுதியாக நிலைநாட்டப்பட்டுவிட்டது.

நாகபுரி, இந்தியாவின் மையமான பகுதி. ஆர்.எஸ்.எஸ். தலைமையகம் உள்ள இடம் என்பதற்காக மட்டுமல்ல, நாகபுரி என்பது பண்டைய காலத்தில் நாகர்கள் அடர்த்தியாக வாழ்ந்த பகுதி, பௌத்தம் செழிப்பாக இருந்த பகுதி, நாகர்கள் பூர்வீகத்தில் தமிழர்கள் என்ற வரலாற்றுப் பின் புலத்தை நிலைநிறுத்திய பகுதி, இந்துத்துவத்தை என்றைக்கும் எதிர்க்க மையமான பகுதி என்பதை அம்பேத்கர் அறிந்து அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்.

அதேபோல, 14.10.1956 விஜயதசமி நாளை தேர்ந்தெடுத்ததற்குக் காரணம். விஜயதசமி என்பது சாம்ராட் அசோகன் ஆயுதம் துறந்து பௌத்தம் ஏற்றுக்கொண்ட வரலாற்றுப் பெருமை மிக்க  நாள். அதனால்தான் அந்நாள், ‘அசோக விஜயதசமி’ என்று அழைக்கப்படுகிறது. எனவே, அந்நாளை அவர் தேர்வு செய்தார்.  அம்பேத்கர் ஏன் பௌத்தம் ஏற்றார் என்ற இந்த  வரலாற்றுப் பின்னணி புரிந்துக்கொள்ளக்கூடியதே.

எனினும், அம்பேத்கர் பௌத்தம் ஏற்று 53வது நாளில் பரிநிர்வாணம் அடைந்த பிறகு அவர் கொடுத்த அழைப்பின் வீரியம் குறைந்து விடும் என்று இந்து சமூகம் எதிர்பார்த்தது. ஆனால், அதன் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை,  ஒவ்வோர் ஆண்டும் அம்பேத்கர் தீட்சை ஏற்ற இடத்தில் கூடும் மக்களின் எண்ணிக்கை நிரூபித்து வருகிறது. அது ‘தீட்சா பூமி’ என்று அழைக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.
இந்தப் பின்னணியில், கடந்த மாதம் செப்டம்பர் 27ஆம் நாள் ‘தீட்சா பூமி’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வருடமும் நடக்கும் மூன்று நாட்கள் நிகழ்ச்சிகளில் சுமார் ஒரு கோடி பேர் கலந்துகொண்டு அம்பேத்கரின் வார்த் தைக்கு  உயிர் கொடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு செப்டம்பர் 26ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடங்கின.
இந்தியாவின் எல்லா திசைகளிலிருந்தும் தலித் மக்கள், பௌத்தர்கள் சாரை சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். வழியெல்லாம் அன்பர்கள் இரவு பகலாக அன்னதானமும், குடிநீர் விநியோகமும் செய்த வண்ணம் இருந்தனர். இலட்சக் கணக்கில் வரும் மக்களுக்குப் பாதுகாப்பாகச் சில நூறு காவலர்கள் மட்டுமே  நிறுத்தப் பட்டிருந்தனர். எனினும், மக் களின் ஒழுங்கான நடத்தை யினால் காவலர்கள் ஓய்வா கவே நின்றுகொண்டிருந்தனர்.
தீட்சா பூமியில் உள்ள மைய மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ள அம்பேத்கரின் அஸ் திக்கும், புத்தரின் சிலைக்கும் மக்கள் தங்களுடைய மரியா தையைச் செலுத்தியபடி சென்றனர். எங்கும் நிறைவான ஒழுக்கம், எந்தவித அசம்பா விதமோ, தள்ளுமுள்ளோ இன்றி மக்கள் தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்ட விதமே அலதியானது. வேறு எங்கும் காணமுடியாதது.
இதன் உச்ச நிகழ்வு, 27.9.2009 அன்று தொடங்கியது. அதில் கலந்துகொள்ளும் சிறப்பு அழைப்பாளர்களுள் ஒருவராக  எழுச்சித்தமிழர் தொல். திருமா வளவன் தீட்சா பூமி குழுவால் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த எழுச்சித்தமிழரை, விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் அகில இந்திய பௌத்த சங்கங் களின் பொறுப்பாளர்களும் வரவேற்றனர்.
பின்பு விமான நிலை யத்தில் உள்ள அம்பேத்கரின் மாபெரும் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, சிஞ்சோலி பகுதியில் புரட்சியாளர் அம் பேத்கர் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப் பட்டுள்ள அருங்காட்சியத் திற்குப் புறப்பட்டார்.
அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற நாளில் தங்கி இளைப் பாறிய பகுதி சிஞ்சோலி. சிறு குன்றிற்குக் கீழே அமைந்த அந்த இடத்தில் புரட்சியாள ருக்கு நினைவு அருங்காட் சியம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்பேத்கர் பயன்படுத் திய பொருட்கள், வெளியிட்ட அறிக்கைகள், அவரின் அஸ்தி என அரிய பொக்கிஷங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அதன் அருகில், ஒரு புத்த விகார், புரட்சியாளர் அம்பேத் கரின் உதவியாளர் ரட்டுவின் நினைவிடம், மக்கள் சமத்துவப் படையின் பயிற்சித் தளம் என பரந்துவிரிந்த அந்த நிலப்பகுதி ஒரு தலித்தல்லாத பெண்மணி யால் தானமாகக் கொடுக்கப் பட்டதாகும். புரட்சியாளர் அம்பேத் கரின் அர்ப்பணிப்பை மதித்து அந்தப் பெண்மணி தனக்கான பங்கைச் செலுத்தியிருந்தார். அந்த இடத்தில் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு சிறப்பான வர வேற்பு அளிக்கப்பட்டது.

அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டபோது ஓர் உணர்ச்சி மயமான சூழல் நிலவியது. மாபெரும் புரட்சியாளரின் நினைவுகள் நிழலாட ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டப் பின்னர், மதிய உணவு அங்கேயே நிகழ்ச்சிப் பொறுப்பாளர் களால் அளிக்கப்பட்டது. பௌத்த சங்க பிரதிநிதிகள் எழுச்சித்தமிழரை உபசரித்து ‘தீட்சா பூமி’ பகுதிக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர் நாகராஜ் இதற்கு முழு ஏற்பாடு களையும் செய்திருந்தார்.

உச்ச நிகழ்வான ‘தீட்சா பூமி’ மாநாடு தொடங்கியது. சுமார் மூன்று இலட்சம் பேர் மாநாட்டுத் திடலில் கூடியிருந்தனர். எந்தவிதமான இரைச்சலோ, கூச்சலோ இல்லை. அமைதியா கவும் ஒழுக்கத்துடனும் மக்கள் அமர்ந்திருந்த காட்சி அற்புதமானது.

பஞ்சசீலத்துப் பாடலுடன் மாநாடு தொடங் கியது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந் திருந்த பௌத்தத் தலைவர்கள் மேடையிலிருந் தனர். அவர்களில் நடு நாயகமாக எழுச்சித்தமிழர் அமர்ந்திருந்தார். உடன் தமிழக பிக்கு மௌரியா மெத்தபால் இருந்தார். தொடர்ந்து பாடல்கள், உரையாடல்களுக்குப் பிறகு எழுச்சித்தமிழர் உரையாற்ற அழைக்கப்பட்டார்.

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்த எழுச்சித்தமிழர் அவர்கள் மக்களின் ஒருங்கமைவு குறித்து பெருமித மாகப் பேசினார். பின்பு பஞ்சசீலத்தைப் பற்றி பேசினார்.

‘‘புத்தர் மாபெரும் புரட்சியாளர். அவர் கடவுள் அல்ல; அவர் மக்களுக்குச் சரியான வழியைக் காட்டிய மாபெரும் மனிதர்; அவர் வழியில் பஞ்ச சீலம் உலகில் அமைதியையும், சகோதர உணர்வையும் வளர்க்க உதவியதோடு சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை அகற்றி சமத்துவத்தைப் பேண உதவும்'' என்பதை வலியுறுத்திப் பேசினார்.

மாபெரும் மாநாட்டில் தமிழகத்திலிருந்து எழுச்சித்தமிழர் அவர்கள் கலந்துகொண்டது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி. இந்த நிகழ்ச் சியைத் தொடர்ந்து மறுநாள் நாகபுரியில் உள்ள பல்வேறு பௌத்த இடங்களுக்குச் சென்று பார்வையிட்டார். எழுச்சித்தமிழருடன் விடுதலைச்சிறுத்தைகளின் நிர்வாகிகள் ஏ.சி.பாவரசு, கு.பாவலன், கவுதமசன்னா, அறிவமுதன், பாலசிங்கம், நீலவானத்து நிலவன், வை. ஜெயராமன், திராவிடமணி, இராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

எனினும், வரலாற்றுச் சிறப்புவாய்ந்த இந் நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ஒரு கோடிக்கும் அதிகமாகத் திரளும் மக்கள் தங்களைக் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டாலும், சமூக அரசியல் விடுதலை நோக்கில் திரட்டப்படாமல் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. அந்த மக்கள் ஓர் அரசியல் சக்தியாகத் திரளும்பட்சத்தில் பண்பாட்டுரீதியாகவும் மாபெரும் சமூகமாற்றத் தைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. இந்த ஆதங் கத்தை எழுச்சித்தமிழர் தம்முடன் இருந்த தோழர் களுடன் பகிர்ந்துகொண்டார். அடுத்த ஆண்டிலிருந்து தீட்சா பூமி நிகழ்ச்சியில் விடுதலைச்சிறுத் தைகள் சார்பில் தகுந்த ஒருங்கிணைந்த  பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இதை வரவேற்றதுடன் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகத் தோழர்கள் உறுதியேற்றனர்.

எனவே, அடுத்த ஆண்டில் தீட்சாபூமியில் விடுதலைச்சிறுத்தைகளின் பங்கு குறிப்பிடத்தக் கதாக அமையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.     

 

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann