கடந்த 12-09-2009 அன்று, சென்னை -இம்பீரியல் விடுதியில் விடுதலைச்சிறுத்தைகள் ஒருங்கிணைத்த இசுலாமியர்களுக்கான நோன்பு திறப்பு நிகழ்ச்சி கட்சியின் பொதுச்செயலாளர் கா. கலைக்கோட்டுதயம் முன்னிலை வகிக்க கட்சியின் பொருளார் மு. முகமதுயூசுப் தலைமை தாங்கி நடத்தினார். இதில் பல்லாயிரக்கணக்கான இசுலாமிய பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டனர்.
இது விடுதலைச்சிறுத்தைகள் ஒருங்கிணைத்த 6ஆம் ஆண்டு இப்தர் விருந்தாகும். கடந்த ஆண்டுகளைவிட மிக விமரிசையாக இவ்விழா கொண்டாடப்பட்டது. எழுச்சித் தமிழர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்நிகழ்ச்சிக்குமுன் மூன்று நாட்கள் இசுலாமியர்களைப் போல் காலை 4.00 மணிக்கு முன் சஹர் எனும் (நோன்பு ஏற்பு) நிகழ்வை ஏற்று சாப்பிட்டு விட்டு இடையில் எந்த உணவும் தண்ணீரும் இல்லாமல் மாலை 6 மணிக்கு நோன்பு திறந்தார். எழுச்சித் தமிழருடன் பொருளாளர் முகமது யூசுப், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநிலத் துணைச்செயலாளர் வெற்றிச் செல்வன், செய்தித் தொடர்பாளர் ஆர்வலன் ஆகியோர் நோன்பு இருந்தனர்.
முதல் நாள் 10-9-2009 அதிகாலை 4 மணி அளவில் சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பள்ளி வாசலில் உள்ள இசுலாமிய மார்க்க அறிஞர்களுடன் நோன்பு ஏற்பை ஏற்று அன்று மாலை 6.30 மணிக்கு இசுலாமிய ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்திய நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்தார். மறுநாள் 11.09.2009 அதிகாலை இசுலாமிய தொழில் அதிபர்களுடன் சென்னை ‘பிரசிடெண்ட்’ விடுதியில் அதிகாலை 4 மணிக்கு நோன்பு ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாலை 6.30 மணிக்கு வடசென்னை மாவட்டச் செயலாளர் கபிலன் தலைமையில் ஆதரவற்ற குழந்தை கள் மற்றும் பெண்கள் இல்லம் நடத்திய நோன்பு திறப்பு நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு ஆதரவற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆடைகள் வழங்கி நோன்பை முடித்தார்,
இறுதிநாளான 12-09-2009 அன்று கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் வீட்டில் அதிகாலை 4.30 மணிக்கு நோன்பு ஏற்பு ஏற்றுக் கொண்டு மாலை 6.30 மணிக்கு இம்பீரியல் விடுதியில் பல்லாயிரக் கணக்கான இசுலாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நோன்பு திறந்து மகிழ்ந்தார்.
விருந்துக்குப் பிறகு எழுச்சித் தமிழர் உரையாற்றும்போது, “இசுலாம் ஒரு சனநாயகக் கருத்தை கொண்ட மார்க்கம், ஏற்றத் தாழ்வுக்கு இடம் கொடுக்காத, ஆண்டான் அடிமையில்லா மார்க்கம் என்பதை எடுத்துரைத்து இசுலாமி யர்களை காங்கிரசு வஞ்சிக்கிறது. பாரதிய ஜனதா விற்கு இசுலாமியர்கள் ஓட்டுபோட மாட்டார்கள் என்ற மதிப்பில் அவர்களின் உரிமைச் சின்னமான பாபர் மசூதியை இடித்து 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் கட்டித் தராமல் வஞ்சிக்கிறது.
ஆகவே, இசுலாமியர்கள் அரசியல் அணியாக திரளாமல் இதை சாதிக்க முடியாது. இசுலாமி யர்களும், ஒடுக்கப்பட்ட மக்களும் இணைந்தால் பாபர் மசூதியை கட்டித்தா என்று கேட்டுக் கொண்டிராமல் நாமே கட்டுவோம். அதாவது ‘மக்களைத் தட்டி உசுப்புவோம், பாபர் மசூதியை கட்டி எழுப்புவோம்’ என்ற முழக்கத்தோடு வரும் டிசம்பர் 6 அன்று அயோத்தி புறப்படுவோம்” என முழங்கினார். இந்த ஆண்டு பல்வேறு கட்சிகள் நடத்திய இப்தார் விருந்தைவிட மிகப் பெரிய அளவில் இசுலாமியர்கள் கலந்து கொண்டார்கள் என பத்திரிகைகளும் மக்களும் கூறினார்கள்.
இது இசுலாமிய மக்கள் எழுச்சித் தமிழர்களின் மீது வைத்துள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கும் வண்ணமாக இருந்தது. முன்னதாக கட்சியின் பொருளாதார விழிப்புணர்வு இயக்கத்தின் துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் வரவேற்பு நிகழ்த்த, தமிழ்நாடு வக்ப்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துல்ரஹ்மான், தேசிய லீக்கின் தலைவர் முகமது பஷீர், மனித நீதிப் பாசறை பொதுச் செயலாளர் பக்ரூதின் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியை இசுலாமிய சனநாயகப் பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஜலால் முகம்மது, முன்னாகான், சர்தார்பாசா, இபுராஹிம் மற்றும் முத்துமகம்மது ஆகியோரின் ஒத்துழைப் புடன் சிறப்பாக நடந்து முடிந்தது. விடுதலைச் சிறுத்தைகளின் மாநில, மாவட்ட, பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.