மாவோவை மறந்தது சீனம்; சீனத்தால் விழுந்தது ஈழம்!

- தணிகைச்செல்வன்

 

உலகெங்கிலுமுள்ள உண்மையான மார்க்சியச் சிந்தனையாளர்கள் எந்த ஒரு கோட் பாட்டை லெனினியத்தின் இதயத்துடிப்பு என்று போற்றுகிறார்களோ அந்த ஒரு கோட்பாடு இந்தியப் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு எட்டிக் காயாக இருக்கிறது என்பது ஒரு நகை முரண். அந்தக் கோட்பாட்டின் பெயர்: சுய நிர்ணய உரிமை எனப்படும் தன்னுரிமை (Right to Self Determination)ஒடுக்குகிறப் பேரினத்தின் ஆதிக்கப்பிடியிலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனம் பெறுகிற விடுதலையின் பெயரே சுயநிர்ணயம். ஒடுக்கப்படும் ஒவ்வொரு தேசிய இனமும் சுயநிர்ணயம் கோருவது அதன் உரிமை; பெறுவது அதன் பிறப்புரிமை என்பதை முன்மொழிந்த சிந்தனைதான் லெனினியம். லெனினியம் என்பது மார்க்சியத்தின் ரஷ்ய வடிவம்; மாவோயிசம் என்பது மார்க்சியத்தின் சீன வடிவம்.

சுயநிர்ணய உரிமை பற்றி  சோவியத் அமைப்பின் தேசிய இனங்களுக்கு லெனின் வழங்கிய தீர்வும், ஜப்பானிய வல்லரசிடமிருந்து சீனத்தேசம் விடுதலை பெறுவதே புதிய சனநாயகப் புரட்சியின் முதற் குறிக்கோள் என்று மாவோ வகுத்தளித்த தீர்வும் வெவ்வேறல்ல. இரண்டுக்கும் விதை ஒன்றுதான் - எனவே விடையும் ஒன்றுதான்.

சீனப்புரட்சி 1949இல் வெற்றி பெற்றது. அதற்கு நான்காண்டுகளுக்கு முன்னால் 1945இல் நடந்த மத்தியக் குழுவில் சீனப் பொதுவுமைக் கட்சி கிட்டத்தட்ட வெற்றியை எட்டிவிட்ட நிலையில் நிறைவேற்றிய தீர்மானத்தில், புரட்சியின் இரண்டு குறிக்கோள்களை மாவோ தெளிவுபடுத்தினார். அவை: “(1931ஆம் ஆண்டுக்குப் பிறகு) சீன மக்கள் தங்களின், புதிய சனநாயகப் புரட்சிக்குக் காரணமாக அமைந்த தேசிய மற்றும் சமூக விடுதலையைப் பெறுவதில் பெரும் வெற்றியை ஈட்டியுள்ளனர்.”(மாசேதுங் தேர்வு நூல்கள் ஆங். பக்கம்: 320)

ஜப்பானிய தேசிய ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது சீனத்தின் தேசிய விடுதலை என்றும் சீனாவின் ஆதிக்க வர்க்கங்களிடமிருந்து பெறும் சுதந்திரமே சமூக விடுதலை என்றும் குறிப்பிடுகிறது மேற்படித் தீர்மானம். இந்த இரட்டைக் குறிக்கோள்கள் புதிய சனநாயகப் புரட்சியின் இரு கண்களாக இருந்தன என்பதை சீன மத்தியக் கமிட்டித் தீர்மானம் உலகத்துக்கு அறிவித்தது. இந்தத் தீர்மானத்தால் ஒளிகாட்டப்பட்டு விடுதலைக்கு வழிகாட்டப் பெற்றன வியட்நாம், கொரியா நாடுகளின் பொதுவுடைமைப் போர் முனைகள்.

ஆனால், இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தை வழிநடத்துவது மார்க்சியமன்று; காந்தியமே. எனவேதான் இங்குள்ள பொதுவு டைமைக் கட்சிகள் காந்தியின் தேசியத்தை இந்தியாவின் தேசியமாக ஏற்றன. பல மொழித் தேசியங்களாகவுள்ள இந்தியாவின் பல்தேச இனங்களின் பன்மைத் தேசங்கள் அடைக்கப் பட்டுள்ள சிறைச்சாலையே இந்தியா என்ற துணைக் கண்டம் என்பது மார்க்சியப் பார்வை. இந்தப் பார்வையே இந்தியக் கம்யூனிஸ்டு களுக்கு இல்லாமல் போயிற்று. எனவேதான், அடிப்படையில் அவை மார்க்சியக் கட்சிகளாக இல்லாமல் காந்தியக் கட்சிகளாகவே இயங்கு கின்றன. (1942இல் பாக்கிஸ்தான் பிரிவினையை ஞாயப்படுத்த சுயநிர்ணய உரிமையைத் தற்காலிகமாக ஏற்றதும் பிறகு தூக்கி எறிந்ததும் ஒரு நகைச்சுவைக் கதை) நடைமுறைச் சிக்கல்களில்தான் அவை காங்கிரஸ் கட்சியை எதிர்க்கின்றன. தேசியக் சிக்கலில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாரதிய ஜனதா, திராவிடக் கழகங்கள் ஆகியவை காந்திய அணியில்தான் நிற்கின்றன. ஏக இந்திய அணியில்தான் இயங்குகின்றன. ஈழ விடுதலையின் தலைமைச் சிக்கலே இந்திய தேசியச் சிக்கல்தான் என்றால் புதிராகத் தெரியும்; புரிந்தபின் புதிதாகத் தெரியும்.

“இந்தியாவில் இந்தியத் தேசியம் என்ற ஒற்றைத் தேசியத்தை ஒப்புக்கொண்டு இந்தியா ஒரே நாடு என்று கூறுகிற கட்சிகள் இலங்கையை இரண்டு நாடுகளாகப் பிரிப்பதை ஆதரிப்பதில் என்ன தார்மீக அடிப்படை இருக்கிறது?” என்று பொன்சேகா என்ற இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் எழுப்பிய  வினாவுக்குப் பதிலடி தரும் தத்துவத்திண்மை இங்கே யாருக்கும் இல்லை. புலிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதும் அதே மூச்சில் இந்திய ஒருமைப்பாட்டை அங்கீகரிப் பதுமான இரட்டைத்தன்மை இலங்கைத் தமிழர் பாதுகாப்புக்கான அமைப்புகளின் பொதுப் பண்பாக இருந்தமைதான், இந்திய அரசையும் இலங்கை அரசையும் எதிர்த்து உலக நாடுகளின் கவனத்தைக் கவரும் வகையிலும் இந்திய மக்களை ஈர்க்கும் வகையிலும் ஒருங்கிணைந்த ஒரு பெருந்தொடர் போர் முறை பூவாமைக்குக் காரணமாகும்.

ஈழச்சிக்கலில் தமிழ்நாட்டுக் கட்சிகளைத் தாக்கிய இந்திய நோயின் இன்னொரு வடிவம் தான் சீனக் கம்யூனிஸ்டுகளிடம் ஏற்பட்ட சிங்கள நோயாகும். தேசிய இனங்களுக்குத் தன்னுரிமை தரும் தேசியக் கோட்பாடுதான் சீனத்தேசிய விடுதலைக்கான மாவோயிஸ்ட் பாதை. சீன விடுதலைக்குப்பிறகு, திபேத் மட்டுமே தன்னுரிமை கோரக்கூடிய தேசிய இனத்தன்மையைப் பெற்றிருக்கிறது. ஆயினும் தன்னாட்சி உரிமை பெற்ற ஐந்து சுயாட்சிப் பிரதேசங்களில் ஒன்றாக மட்டுமே திபேத்தின் தேசிய உரிமை குறுக்கப்பட்டது. ஒரு தேசமாக அதை ஏற்கச் சீன அரசு தயங்கியது.

காரணம் என்ன? மதம்! 28 லட்சம் மக்கள் தொகை கொண்ட திபேத்தில் ஏறத்தாழ அதன் கால்பகுதி மக்கள் (7 லட்சம் பேர்) மடங்களிலும் மடாலயங்களிலும் துறவிகள் என்ற பெயரில் ‘லாமாக்கள்’ சோம்பேறி வாழ்க்கை நடத்தி திபேத்தின் உழவுப் பொருளாதாரத்தை உறிஞ்சினார்கள். திபேத்தின் மொழி, பண்பாடு, கல்வி, கலை ஆகிய துறைகளில் தேசிய இன உருவாக்கம் முதிர்ச்சி யுறாத நிலையில், மதம் சார்ந்த வாழ்வியலே அங்கு உச்சம் பெற்றிருந்தது. மத வேர்களை அறுத்தெரிந்து தேசிய தன்னுரிமைத் தகுதிக்குத் திபேத்தை வளர்த்து முதிரச் செய்யும் பொறுப்பை திபேத் கம்யூனிஸ்ட் கட்சியிடம் அளித்தார் மாவோ.

மதவழித் தேசியவாதத்தை வைத்து திபேத் மக்களைத் தம்பக்கம் வளைத்துக் கொண்டிருந்த லாமாக்களின் பிடியிலிருந்து அவர்களை மீட்டு, இனவழித் தேசியத்தின்பால் திபேத்தி யர்களைத் திரட்டித் தேசியத் தன்னுரிமைக்கு அவர்களைத் தக்கவர்களாக்கும் பொறுப்பை நிறைவேற்றாமல் திபேத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர்கள் தவறியதோடு, சீனப் பெருந்தேசிய ஆதிக்கச் சிந்தனையில் திபேத்தியரை இரண்டாம் குடிமக்களாக நடத்தும் முதலாளியப் போக்கிலே செயல் பட்டார்கள் என்பதைக் கண்டறிந்த மாவோ கலாச்சாரப் புரட்சியின் காலக்கட்டத்தில் தவறிழைத்த திபேத்தியத் தலைவர்களை யெல்லாம் கடுமையாகத் தண்டித்தார் என்பதை ஆவணங்கள் கூறுகின்றன.

மாவோவின் மறைவுக்குப்பிறகு மாவோயி சத்துக்கு முற்றிலும் எதிரான ‘சீனப்பெருந் தேசியம்’ என்ற வல்லரசுத்தனம் சீனாவின் பிற இனக் குழுக்களையும் பாதித்தது. 55 சிறுபான்மை இனக்குழுக்களைக் கொண்ட சீனச் சமூகத்தில், பெருமளவில் திட்டமிட்டு  அரசாங்கமே நடத்தும் சீனர்களின் குடியேற்றங் களால் சிறுபான்மை இனக்குழுக்களின் சூழலியலும் வாழ்வியலும் பெரிதும் பாதிக் கப்படுகின்றன என்று கவலை கொள்கின்றன அனைத்து நாடுகளின் மனித உரிமைக் குழுக்கள்.

‘மேற்கு நோக்கிப் போ’ (Go West) என்கிற சீன அரசின் புதிய முழக்கத்தின் பொருள் ‘மேற்குச் சீனாவுக்குப் புலம்பெயர்ந்து குடியேறவேண்டும் சீனமக்கள்’ என்பதே. சிறுபான்மை இனக் குழுக்கள் உள்ள மாநிலங் களில் பெருவாரியாகச் சீனமக்கள் சென்று குடியமர்வதன் மூலம் அங்கெல்லாம் இனக் குழு மக்களின் அடர்த்தியைக் கரைத்து, அவர்களிடமிருந்து தேசியத்தன்மைக்கான கோரிக்கைகள் - குறிப்பாகக் கல்வியில் சீனமொழிக்குப் பதில் தாய்மொழி - போன்ற கோரிக்கைகள் எழாதவாறு முளையிலேயே கிள்ளி எறிவதுதான் ‘மேற்கே போ’ என்ற முழக்கத்தின் உட்பொருள்.

‘இனக்குழுக்களின் தேசியத் தனித்தன்மை களும், அவற்றுக்கு ஆதாரமான அவற்றின் தாய்மொழிகளும் பாதுகாக்கப்படவேண்டும். அம்மக்களின் தேசிய உரிமைகளை உத்தர வாதப்படுத்தவேண்டும்’- என்ற விதியைச் சீன அரசமைப்புச் சட்டத்திலேயே இடம் பெறச்செய்த மாவோவின் மார்க்சிய உறுதிப் பாடும் - அதற்கு முற்றிலும் எதிரான இன்றைய சீன நிலைப்பாடும் - வெளிப்படுத்துவது ஒரு ஆழமான முரண்பாடு!

சீனத்தின் வல்லாதிக்க வெறிதான் திபேத்தில் ஏழுலட்சம் சீனர்களைக் குடியேற்றியிருக்கிறது. சீனர்களைப் பெருமளவில் இறக்குமதி செய்வதன் மூலம் அங்கே திபேத்தியர்களின் பெரும்பான்மையைக் குலைத்து, திபேத்தின் தேசிய அடர்த்தியை நீர்த்துப்போகச் செய்து, முடிவில் அதன் தன்னுரிமைக் கோரிக் கையையே தகர்த்துவிடுவது என்பதே சீன அரசின் குடியேற்றக்கொள்கையின் குறிக்கோள்.

அண்மையில் சீனத்தின் இரண்டாம் திபேத்தாக மாறியிருக்கிறது அதன் சின்ஜியாங் மாகாணம். அந்த மாநிலத்தின் பெரும் பான்மைக் குடிகள் துருக்கி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட உய்கூர் என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மதத்தால்  இஸ்லாமியர்கள். கடந்த பத்தாண்டுகளாக அவர்களுக்கு ஏற்பட்டு வரும் சோதனை திபேத்தி யர்களுக்கு ஏற்பட்டதைப் போன்றுதான். ஹான் (han) என்ற மரபைச் சேர்ந்த சீனர்களைப் பெரு வாரியாக சின்ஜியாங் மாநிலத்தில் குடியேற்றும் பணியில் சீன அரசு வேகம் காட்டி வருகிறது.

சீனக் குடியிருப்புகளைத் தங்கள் இனக்குடிகளின் மத்தியில்  இடைச்செருகல் செய்கிற பெய்ஜிங் பேரரசின் இனச்செருகல் போக்கை எதிர்த்துப் போராடத் தொடங்கிவிட்டார்கள் - சின்ஜி யாங்கின் உய்கூர் இனமக்கள். அரசின் அனைத்து மட்டங்களிலும் உய்கூர் இனத்தின் தாய்மொழி துருக்கி புறந்தள்ளப்பட்டு சீன மொழியின் ஆதிக்கம் மேலோங்கியது மட்டுமல்லாமல் வேலை வாய்ப்புகளிலும் உய்கூர்கள் புறக்கணிக் கப்படுகிறார்கள்.

இதுவரை அடங்கிக் கிடந்த சின்ஜியாங் எரிமலை வெடித்து வெளிப்பட்டது 2009 சூலை முதல் வாரத்தில். தலைநகர் உரும்கியிலிருந்து பல நகர்களுக்கும் பரவிய உய்கூர் தேசியச் சீற்றத்தை அடக்க சீன ராணுவம் ஏவப்பட்டது. 156 பேர் பலியானார்கள்; ஆயிரம்பேர் படுகாயமுற்றார்கள்; 1500 பேர் சிறைப்படுத்தப்பட்டார்கள்.

உலக உய்கூர் பேரவை (World Vighur congress) என்ற பெயரில் இயங்கும் அமைப்புதான் கலவரத் துக்குக் காரணம் என்கிறது சீன அரசு. புலம் பெயர்ந்து சென்று வாஷிங்டனிலிருந்து உய்கூர் பேரவையை நடத்திவரும் ரெபியா - காதிர் என்ற புரட்சிக்காரியின் அறைகூவல் இதுதான்; “துருக்கி மொழி சார்ந்த தேசிய இனமாகிய உய்கூர் இன மக்களின் பூர்வீக பூமியாகிய உய்கூர் தேசத்துக்குத் தன்னுரிமை கிட்டும் வரை சின்ஜியாங் மாநிலத்தில் எங்கள் போராட்டம் ஓயாது”.

குடியிருப்புகளில் சீனா ஊடுருவலையும், குடி மக்கள் மீது சீன ஆதிக்கத்தையும் சுமத்தும் சீனப் பெருந்தேசிய வெறிதான், இலங்கையில் சிங்களப் பேரின வெறியர்களுக்கு வழிகாட்டும் நெறியாக அமைந்தது. திபேத்திலும் சின்ஜியாங்கிலும் சீன அரசு மேற்கொண்ட அதே இன ஒடுக்குமுறை, அதே இன ஊடுருவல் முறை ஆகியவற்றின் மறு பதிப்பைத்தான் தமிழீழத்தில் சிங்கள அரசு நடைமுறைப்படுத்தியது. சீனம் இலங்கையைத் தன் செல்லப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டமைக்கான அரசியல் அடிப்படை இங்கேதான் ஆரம்பமாகிறது.

தமிழீழப் பகுதியில் மொழி உரிமை, குடி உரிமை, தொழில் உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்புரிமை போன்ற சனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் மிதித்து நசுக்கிய அதே வேளையில், தமிழீழத்தின் கிழக்குப்பகுதியில் ஏராளமான சிங்களக் குடும்பங்களை தமிழ்ப் புலங்களில் குடியமர்த்தும் இனத் திணிப்பு நடவடிக்கை களில் இடையறாமல் ஈடுபட்டது இலங்கை அரசு. ‘அண்ணன் காட்டிய வழியம்மா’ என்ற பாடல் வரியைப் பழைய திரைப்படத்தில் கேட்டிருக்கிறோம். சீன அண்ணன் காட்டிய தீய வழியில் சிங்களத்தம்பி நடைபோட்டார்.

ஈழத்தின் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசு நடத்திய தேர்தலில் இலங்கையின் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றமைக்குக் காரணம், அங்கே பெருவாரியாகக் குடியேற்றப் பட்ட சிங்கள இனத்தின் வாக்குகள் ஈழமக்களின் வாக்குகளைவிட எண்ணிக் கையில் மிகுந்திருந்தன என்பதே.

தேசிய இன ஒடுக்குமுறையை வெற்றி கரமாகக் களப்படுத்த மூன்று வழிகள் உள்ளன. ஒன்று: அரசியல் வழியில் அந்த இனத்தின் அடிப்படை உரிமைகளைப் பறித்து வருவது, இரண்டு: வன்முறை வழியில் இராணுவப்படை மூலமோ ரவுடிப்படை மூலமோ இனக் கொலைகள் புரிந்து அந்த இனத்தின் சனத் தொகையை குறைப்பது, மூன்று: மென்முறை வழியில் ஆளும் பேரினத்தின் மக்களைப் பெருமளவில் குடியமர்த்தி ஆளப்படும் இனத்தின் பெரும்பான்மையைக் குறைப்பது. இந்த மூன்று வழிகள் மூலம் பாதிக்கப்பட்ட இனம், தேசிய இனத்தகுதியைப்பெற முடியாத படி அதன் தேசிய அடித்தளத்தையே சிதைத்து விடுவதுதான் பெருந்தேசிய வெறியின் பாதை.

இந்தச் சீனப் பாதைதான் சிங்களப் பாதைக்குக் குருபீடம்; ஈழம் அதன் பலிபீடம். சிங்கள உத்திகளைச் சீனப்படுத்தியதால்தான் உலக நாடுகளையே ஊதாசீனப்படுத்தும் துணிச்சல் ராஜபக்சேவுக்கு வந்தது. மூன்று முறைகளில் சீனம் இலங்கை அரசின்மீது செல்வாக்கு செலுத்தியது. 12,000 கோடி ரூபாய்க்கு ஆயுத உதவி, பயிற்சி உதவி, பயிற்சிப்படை உதவி, 5000 கோடி நிதி உதவி, சர்வதேச அரங்கங்களில், குறிப்பாக ஐ.நா. அவையில் இலங்கையைப் போர்க் குற்றவாளியாக்காமல் தடுத்தாட் கொண்டது. பாதுகாப்புக் கவுன்சில் ஐ.நா. அவையின் நிரந்தர உறுப்பினர் என்ற சிறப்புத் தகுதியை வைத்துள்ள சீனம் எந்த நாடும் இலங்கையை நோக்கி விரல் நீட்டாதபடியும் குரல் எழுப்பாதபடியும் தடுத்துவருகிறது. இலங்கையின் பௌத்தம் சீனத்தின் சகோதரக் கலாச்சாரமாகப் பாவிக்கப்படுவது அதன் கூடுதல் சிறப்பு அதன் மூன்றாம் தகுதி இது.

பகுத்தறிவுப் பார்வையும் சமூக நீதித் தீர்வையும் அடித்தளமாகக் கொண்ட பண்டைய பௌத்தத்தைத்தான் அம்பேத்கரும், மாவோவும் போற்றினார்கள். இன்றைய பௌத்தம் அதுவன்று. சடங்குகள், சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், மடங்கள், மடாலயங்கள், சிலை வழிபாடுகள் ஆகிய பழமைவாதங் களை உள்ளடக்கியிருப்பதால் அதன் தோல் தான் பவுத்தம்; சுளை இந்துத்துவம் எனத் திரிந்துவிட்டது. எனவேதான் பவுத்தப் பழமை வாதங்களைத் தகர்த்தெரியும்படி எழுபது களில் கலாச்சாரப் புரட்சியாளர்களுக்குக் கட்டளையிட்டார் மாவோ.
அவரது கட்டளைகள் மீறப்பட்டு முப்ப தாண்டுகள் கடந்துவிட்டன. எனவேதான் சீனமும் இலங்கையும் புத்த நாடுகளாக இல்லை. யுத்த நாடுகளாகிவிட்டன. ‘ரத்தம் சரணம் கச்சாமி’ என்பதே இராஜபக்சேவின் பஜனை. திருப்பதி சென்று ஏழுமலையான் என்ற இந்துத்தெய்வத்தை இராஜபக்சே வழி படுகிறார் என்பதிலிருந்து தெரிகிறது பக்சேவின் பவுத்தம் போலியானது என்ற உண்மை.

இந்தப் பின்னணியில்தான் இலங்கை - சீன உறவுகள் இந்திய செல்வாக்கையும் விஞ்சி நிற்பவை என்ற பட்டறிவை இந்தியா பெற்றது. அதனால் இலங்கையுடன் மேலும் நெருங்கி மென்மேலும் பண உதவி, படை உதவி, படைக்கல உதவி என்ற தப்பான பாதையில் நடந்து பார்த்தது இந்தியா, பயனில்லை.  சீன நலன்களுக்கு உட்பட்டவையாகச் சிங்கள நலன்களைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் சீனத்தின் மேலாண்மை என்பது, ஈழத்தைக் காட்டி அச்சுறுத்தி இலங்கையை வசப்படுத்தும் ஒருவகை யுத்த தந்திரச் சுரண்டல் முறை (strategical exploitation)  சொந்த நாட்டில் மீள முடியாத தேசியச் சிக்கலில் சீனா மாட்டிக் கொள்ளும் நாள் வரும்வரை,  சிங்களத்தின் மீது சீனப் பாதையைத் திணிக்கும் அதன் திருப்பணி தொடரும். திபேத் சின்ஜியாங்  தேசங்களில் இன அழிப்பு, இனச்செருகல் என்ற இரட்டை முறைகளால் மண்ணின் மக்கள் பெரும் பான்மையை இழக்கச்செய்யும் சீனப்பெருந் தேசியப் பாதை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சிங்களப் பேரினத்துக்குத் தற்காலிக வெற்றியைத் தந்தது உண்மை. ஆனால், சின்ஜியாங்கிலும் திபேத்திலும் சீறிஎழும் தேசிய இனப் போர்கள் முற்றி வெடிக்கும் காலம் விரைந்து கொண்டிருக் கிறது என்பதைச் சீனம் அறியும். அந்த எரிமலைகள் வெடிக்கும்போது பெருந்தேசிய வெறியில் எரிமலை உச்சியில் வீற்றிருக்கும் பெய்ஜிங் பேரரசின் சிம்மாசனமே சிதறிப்போகும். சொந்த மண்ணிலேயே சிதறுண்டுபோகும் பெருந்தேசியப் போர் உத்தியை ஈழமண்ணில் கட்டிக்காக்கும் பொறுப்பைச் சீனா கைகழுவுவதைத்தவிர அதன் தற்காப்புக்கு வேறு பாதை இல்லை.

ஈழப்புலிகள் தோற்றிருந்தாலும், சீனச் சிக்கலில் சிங்கள வெற்றியின் அடித்தளம் ஆடத்துவங்கியிருக் கிறது. அது ஈழச்சிக்கலின் தீர்வை எளிதாக்கியிருக் கிறது. இந்தத்தருணத்தில் இந்திய அரசு தன் பழைய அயலுறவுக் கொள்கையைத் தூக்கி எறிந்து விட்டு மூன்று காரியங்களில் ஈடுபடவேண்டும்.

சீன - சிங்களக் கலாச்சார உறவுகளை விட ஈழத்துடனுள்ள இந்தியக் தமிழுறவு பழமை யானது; வலிமையானது என்பதால் இந்திய அயலுறவு நலன்கள் இலங்கையுடனல்ல - ஈழத்துடன்தான் பிணைந்துள்ளன என்பதை இந்திய அரசு கசடறக் கற்று, ஈழவிடுதலையைச் சாத்தியப்படுத்தும் போர் உத்தியை வகுத்தெடுக்க வேண்டும். வங்க தேச விடுதலையால் பெற்றதைவிட ஈழவிடுதலையால் இந்தியா பெறக்கூடிய புவிசார் அரசியல் பலன்கள் அதிகமாக இருக்கும்.

அயல் மண்ணில் தமிழீழ அரசு அமைவதற்கான அனைத்து உதவிகளையும் இந்திய அரசு செய்ய வேண்டும். அந்த அரசு அமையும் தகுதிபெற்ற அயல்மண்ணாகத் தமிழகத்தை அனுமதிக்க வேண்டும். சர்வதேச அழுத்தங்கள் மூலம் தமிழீழத் தன்னுரிமைக்கான ஒப்பந்தத்தை ஏற்குமாறு இலங்கை அரசை இணங்குவிக்க வேண்டும். தனது கடந்தகால வரலாற்றுக் தவறுகளைத் திருத்திக்கொள்ளும் பேராண்மை இந்தியாவுக்கு ஏற்படுமானால் மேற்காணும் அரசியல் இலக்கு என்பது எட்டமுடியாத துருவநட்சித்திரமன்று என்பதை எதிர்காலம் மெய்ப்பிக்கும்.      

 

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann