கைவழிக் குறிப்புகள்

- யாழன் ஆதி

எரிதழலை புதைக்க முடியுமா?

- டாக்டர் ச. சவகர்லால்

கடைசி சாசனம்
- பாவலர் சுடர் முருகையா

கைவழிக் குறிப்புகள்

வழித்துணையற்ற போரின் மீதியை
விழித்துணைக் கொண்டு நடத்துகிறாய்
திசைகளில் திரளும் தோள்களை
விசையின் கைகளால் அசைக்கிறாய்

அசையும் காற்றின் பக்கங்களில்
கசியும் நெருப்பு உன் மொழியில்
விடுதலைச் சமரின் பெரும்படை
கெடுதலைத் தீர்க்கும் உன்நடை

நடையற்ற மக்களின் வாழ்வுக்கு
தடையற்ற விடுதலை வெள்ளம்
விடையற்ற கேள்விகளை பலவற்றுக்கும்
மடையற்ற வீரம் பதில் சொல்லும்

சொல்லில் தீயைக் கொளுத்தும்
வில்லின் வேகம் உனக்கு
விளிம்பின் விடுதலை வென்றிடும்
வெளிச்சம் திருமா வழி யது.

- யாழன் ஆதி

 

-

எரிதழலை புதைக்க முடியுமா?

- டாக்டர் ச. சவகர்லால்

எரிகதிரைச் சிமிழுக்குள் அடைத்தோ மென்றே
எக்களிப்போர் முழுமூடர் நாக்கை நீட்டி
எரிநெருப்பைப் பஞ்சுக்குள் மறைத்தோ மென்றே
கொக்கரிப்போர் சிறுக்கர்கள் இனப்போ ராட்ட
எரிதழலை யார்புதைக்க முடியும்? அந்த
எரிநாக்குக்கு யார் தப்ப முடியும் ஆடும்
கருங்காலி இனஅழிப்பு வீர ரெல்லாம்
கட்டாயம் இறுதியிலே சாம்ப லாவார்
கொடிகட்டி ஆண்டிட்ட சேரி னந்தான்
கொத்தோடே அழிந்திடுமா? யுகத்தின் எந்த
இடிபாடும் அழித்திடவே இயலாக் கூட்டம்
இழிந்தோர்கள் செயலாலா அழிந்து போகும்
கொடுத்ததெல்லாம் வட்டியுடன் பெறுவார்; அந்தக்
கோபத்தின் சூட்டினிலே தப்பு தற்கே
நொடிகூட எவராலும் கூடா திந்தச்
சிங்களவன் எந்தமாட்டாம்; ஒழிந்தே போவான்.
தானாடா விட்டாலும் சதைதான் ஆடும்
சரித்திரமே அதுதானே; ஆனால் இங்கே
தானாக ஆடாத கதையைக் கொஞ்சம்
சூடேற்றி ஆடவைக்க மிகமு னைப்பாய்
மேனியுடன் இரத்தமெல்லாம் கொதிக்கப் பேசி
வினைமுடிக்க ஊக்கமூட்டும் செயல்களெல்லாம்
வீணாகப் போய்விட்டால் தமிழி னந்தான்
வெற்றிடமாய்ப் போய்விடவே மாட்டா தாயின்
புதைக்கவில்லை எரிக்கவில்லை; இலங்கை மண்ணில்
பொங்கியெழும் தமிழீழ வெறியின் வித்தை
விதைத்துவிட்டார்; அவைவிரைவில் தலையை நீட்டி
வேகமுடன் எழுந்து பாயும்; அதிலே அங்கே
விதைத்தவிதை புயலாக மாறும்; ஆடும்
வீணரினை மொத்தமாக அழிக்கும்; இந்தக்
கதைபுதிய கதையில்லை; தமிழீ ழம்தான்
கட்டாயம் தலைநிமிர்ந்தே எழவே காண்போம். 

l

 

கடைசி சாசனம்
- பாவலர் சுடர் முருகையா

‘உலகப் பெரு பாலைநிலம்!’
ஒய்யாரக் கொண்டை மட்டும்!
புல் முளைக்க இடமில்லை;
பூ மலர வழியில்லை.
அருகில் இருந்த
ஆதிக்க ஸ்பெயினுக்கு அரிப்பு
‘சகாரா....’
அடிமை ஆனது.
‘வெறும் மண் தானே’
மண்ணின் மைந்தர் உறங்கவில்லை
பத்து ஆண்டுக் கொரில்லாப் போர்!
வல்லரசைக் கருப்பர் வென்றனர்.
“மண்ணைக் காக்க
மண்ணின் மைந்தரால் முடியும்”
சரித்திரத்தின் பக்கங்கள்
சொல்கின்றன.
‘இழந்த உரிமையை
இழந்த இடத்தில்தான்
மீட்டெடுக்க முடியும்’
இது வரலாற்றுக் கட்டாயம்.
அரபு இனம் - தன்
தேசிய உரிமையை
இழந்த இடம்
ஜோர்டான் நதிக்கரை.
1914ஆம் ஆண்டு
அன்னை நிலத்தை
(ஷரீப்) அப்துல்லா மீட்ட இடமும்
அதே இடம்தான்.
இது...
‘வரலாறு தரும் பாடம்’!
ஆதவனை மறைக்க
எழுகின்ற கைகள்
கருகிப் போகும்!
விடியலை மூட
வருகின்ற போர்வை
சாம்பல் ஆகும்!
ஆண்ட வரலாற்றை
அடியோடு மறைக்க
கை கொடுக்கும் கபடத்தின்
திரை கிழிப்போம்!
“இதுவே கடைசிப் போர்”
கொக்கரிக்கும் காடையரின்
வேரறுப்போம்!
இதுவே...
அவர்களுக்கான
“கடைசிச் சாசனம்”.
எழுந்தனர்!
தமிழ் ஈழம் மலர்ந்தது!
இதுவே...
‘தமிழனின் வரலாற்று ஆவணம்!’

 

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann