உங்கள் கட்சியின் நோக்கமாக வைத்திருப்பவை என்னென்ன?
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்னும் முழக்கத்தை முதன்மையான நோக்கமாக இலக்காக விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கொண்டு இயங்குகிறது. உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த அனைத்து தரப்பினரையும் அரசியல்படுத்தி, அமைப்பாக்கி, அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பதன் மூலம் மக்கள் விடுதலையை வென்றெடுக்க முடியும். அதன் அடிப்படையில் சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், பெண் விடுதலை, வர்க்க விடுதலை, வல்லரசிய எதிர்ப்பு போன்ற அடிப்படையிலான கொள்கையின் தளங்களில் மக்களை அணிதிரட்டி வருகிறோம். சாதி, மதம்,மொழி, இனம், வர்க்கம், பால் ஆகிய அடிப்படை முரண்பாடுகளைக் களைந்து அனைத்து சனநாயக சக்திகளையும் அதிகாரப்படுத்த வேண்டும். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமை, நலன் ஆகியவற்றிற்கும் களம் அமைத்துப் போராடிவருகிறோம். சாதி, வன்கொடுமை, பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை, ஈழத்தமிழர் நலம், புலம் பெயர்ந்த தமிழர் நலம், சமூகநீதி, தாய்மொழி வழியிலான கல்வி, பண்பாட்டு உரிமை மீட்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் போராடி வருகிறோம்.
‘நமது கல்வி முறையைப் பற்றி உங்களின் கருத்து? இந்தக்கல்வி முறை சரியான கல்விமுறையா?
இந்தியக் கல்வி முறை ஏராளமான முரண்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. வசதி படைத்தவர்களுக்கு ஒரு கல்வி, ஏழைகளுக்கு ஒரு கல்வி வழங்கப்படுகிறது. மொழி வழி அடிப்படையில் தமிழ் போன்ற பாரம்பரியமுள்ள மொழிகள் பயிற்று மொழியாக, பாடமொழியாக அங்கிகரிக்கப்படாத நிலை உள்ளது. தாய்மொழிக் கல்வியைவிட, பிற மொழிக்கல்வியே திணிக்கப்படுகிறது. இதனால், கல்வியில் சமத்துவமற்ற நிலை உள்ளது. வளரும் தலைமுறையினர் சமத்துவமற்ற முறையில் ஆளாக்கப்படுகின்றனர். வணிக அடிப்படையில் கல்வி உள்ளதை ஒழித்து முழுமையான இலவசக் கல்வி வழங்க அரசு முயல வேண்டும். வருங்கால சமூகத்துக்கு அடித்தளமாக அமையப் போவது கல்விதான். ஆகவே, சமத்துவக் கல்வி, சமத்துவ சமூகத்துக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து கல்வித்துறையில் புரட்சிகர மாற்றங்களை உருவாக்க வேண்டும்.
விளம்பர அரசியலை நீங்கள் அதிகமாகப் பயன்படுத்துவதாக விமர்சிக்கப்படுகிறதே?
நாளேடு, வார ஏடு, தொலைக்காட்சி, வானொலி பண்பலை, இணையம் போன்ற வணிக ஊடகத்தைப் பயன்படுத்தி மிகப்பெரும் அளவில் விளம்பரம் தேடும் தமிழக பணக்காரக் கட்சிகள் மத்தியில், சுவர், பேனர் விளம்பரங்களையே நாங்கள் செய்கிறோம். எம்மிடத்தில் ஊடக வலிமை ஏதுமே இல்லை. இது அரசியல் காழ்ப்புணர்வில், சிலருக்குக் கண்ணை உறுத்துவதால் வந்த குருட்டுப் பார்வை. எங்களின் கொள்கை, செயல் திட்டம் போன்றவற்றை வேறு எப்படி மக்களிடம் சேர்ப்பது? ‘சன்’, ‘ஜெயா’ போன்ற நிறுவனங்கள் 5 நொடியளவு கூட விளம்பரம் செய்ய எந்த நோக்கமும், காரணமும் இன்றி மறுக்கிறார்கள். ஏடுகளில் விளம்பரம் செய்ய ஏகப்பட்ட கெடுபிடிகள் உள்ளன. இது இப்படி இருக்க, எந்த மனநிலையில் இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது என்று எங்களுக்குப் புரியவில்லை.
இந்தியாவில் எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வே இல்லையே ஏன்? குறிப்பாக, சாதி கூடாது என்று பேசுகிறோம். ஆனால், இன்னும் சேரியும், ஊரும் இருக்கிறதே?
அடிப்படையில் இது ஒரு நல்ல கேள்வி. நாடாளுமன்ற அவையில் நான் பேசும்போது, இந்தியாவில் ஒவ்வொரு வாழிடமும் இரட்டை வாழிட முறையில் உள்ளது. இது ஒரு தேசிய அவமானம் என்றேன். பல்வேறு சாதியினர் ஒரு இடத்திலும், தலித்துகள் மட்டும் ஒரு இடத்திலும் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர். இதனை இந்தியா பெருமையாகக் கருதுகிறது. இந்துத்துவம் இதனை நியாயப்படுத்துகிறது. எல்லோரும் சமம் என்ற அடிப்படையான மானுட சமத்துவத்தைப் படைக்க இந்திய ஆளும் வர்க்கம் தயாராய் இல்லை. ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க மனோநிலைதான் இதற்குக் காரணம். மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு, கல்வி மேம்பாடு, பொருளதார மேம்பாடு கிடைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்.
நன்றி : ‘அரும்பு', அக்டோபர் 2009