2011 பொதுத் தேர்தல் வரை

திருமணம், காதுகுத்து, இல்லத் திறப்பு
மற்றும் மஞ்சள் நீராட்டு விழாக்களுக்கு

தலைவரை அழைக்க வேண்டாம்!

மையக்குழு வேண்டுகோள்

கடந்த 8.9.2009 அன்று வேளச்சேரி தாய்மண் அரங்கில்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்

கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைப்பெற்றது. அக்கூட்டத்தில் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. எதிர்வரும் 2011ஆம் ஆண்டு விடுதலைச்சிறுத்தைகள் ஆண்டு என கட்சியின் தலைமை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கான செயல் திட்டங்களை வரையறுக்கவும் அவற்றை தீவிரமாக நடை முறைப்படுத்தவும் கட்சியின் தலைமைக்கு ஒத்துழைக்கும் வகையில் 2011 சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரையிலும் கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் திருமண விழா, காதணி விழா, மஞ்சள் நீராட்டு விழா, இல்லத் திறப்பு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க கட்சித் தலைவரை அழைக்கும் முயற்சியை தவிர்க்க வேண்டுமென மாநில செயற்குழு தீர்மானிக்கிறது. பொதுச் செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மாநில செயலாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களைக் கொண்டு அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டுமாறு இச்செயற் குழு அனைத்துப் பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறது. 

2. கட்சியின் தலைமை அலுவலகத்திற்காக கடந்த 2006ம் ஆண்டு சென்னை  அசோக்நகர் நூறடிச் சாலையில் சுமார் 3. 1/4 கிரவுண்ட் பரப்பளவில் காலிமனையில் கடந்த 3 ஆண்டுகளாக கட்சித் தலைமை அலுவலகம் இயங்கி வந்தது. இந்நிலையில் அம்மனை தொடர்பாக  உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற வழக்கொன்றில் நமக்கு ஆதரவான தீர்ப்பு கிட்டவில்லை. இந்நிலையில், கடந்த 1.9.2009 அன்று அவ்விடத்திலிருந்து அலுவலகத்தை அப்புறப்படுத்த நேர்ந்துவிட்டது. எனினும் அத்தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்காடி வருகிறோம். ஆனால், குறிப்பிட்ட சில ஊடகங்கள் அவ்விடத்தை விடுதலைச்சிறுத்தைகள் ஆக்கிரமித்துள்ளதாக அவதூறு பரப்பி வருகின்றன. உண்மையை மூடிமறைத்தது. விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக அவதூறு பரப்பும் ஊடகங்களின் அத்தகையப் போக்கை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

3. அசோக் நூறடிச்சாலையில் அமைந்துள்ள அதே இடத்தை சட்டப்பூர்வமாக மீட்டு அங்கே கட்சியின் தலைமை அலுவலகத்தை அமைப்பதெனவும், அதற்கு போதிய அளவு நிதியை திரட்டுவதாகவும் அம்முயற்சிக்கு ஒவ்வொரு விடுதலைச்சிறுத்தையும் முழுமை யான - தீவிரமான பங்களிப்பை செலுத்த வேண்டுமெனவும் அது தொடர்பாக கட்சியின் தலைமை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும் இச்செயற் குழு கேட்டுக்கொள்கிறது. 

4. கட்சியின் மாவட்டச்செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் மீது கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் நிறைவு பெறாத நிலையில் எத்தகை ஒழுங்கு நடவடிக்கைகளாக  இருந் தாலும் கட்சியின் தலைவருக்கே பரிந்துரை செய்ய வேண்டும். மாறாக,  மாவட்டச் செயலாளர்களே நேரடியாக அத்தகைய ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என இச்செயற்குழு அறிவுறுத்துகிறது.    

5. சிங்கள படையினரின் வதை முகாம்களில் சொல்லமுடியாத கொடுமைக்குள்ளாக்கப்படும் சுமார் மூன்று இலட்சம் தமிழர்களையும் விடுதலைசெய்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இந்தியா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளையும் அய்.நா. பேரவையையும் விடுதலைச்சிறுத்தைகள் இம்மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் துணைநிலை அமைப்புகளாக தமிழ்த்தேசிய விடுதலைப்பேரவை, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை, மகளிர் விடுதலை இயக்கம் ஆகியவை நாடுதழுவிய அறப்போராட்டங்களை நடத்துவதென இச்செயற்குழு தீர்மானிக்கிறது.                                       

6. கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது  செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் வாடும் நூற்றுக்கும் மேற்பட்ட இசுலாமியர்களை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைச்செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7.அண்மையில் போராளி இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்துவதற்கான பணிகளை செய்துவந்த வீரம்பல் அறிவழகன் என்பவரை சாதிவெறியர்கள் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். இப்படு கொலையில் ஈடுபட்ட சாதிவெறியர்கள் அனைவரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அறிவழகன் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து இலட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டுமெனவும் அக்குடுத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டு மெனவும் தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.  அத்துடன் சாதிவெறியர்களின் இத்தகையப் போக்கை செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.    

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann