சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து மீட்பு’ என்றும் ‘சென்னையில் விடுதலைச்சிறுத்தைகள் நில ஆக்கிரமிப்பு’ என்றும் ‘தினமலர்’, ‘தினமணி’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஏடுகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
கேட்பாரற்றுக் கிடந்த ஒரு காலிமனையை யாருக்கும் தெரியாமல் திடீரென விடுதலைச்சிறுத்தைகள் ஆக்கிரமித்துக் கொண்டதைப் போல, விடுதலைச்சிறுத்தைகள் மீது ‘ஆக்கிர மிப்பு மற்றும் மோசடி’ கும்பல் என முத்திரைக்குத்தி, களங்க மேற்படுத்த வேண்டுமென்பதில் அத்தகைய ஏடுகளும் ‘ஜெயா’ மற்றும் ‘சன்’ உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி ஊடகங்களும் திரும்பத் திரும்ப அவதூறுகளைப் பரப்பி வருகின்றன.
குக்கிராமத்தில் எங்கோ மூலையில் ஊருக்குப் பொதுவான அரசுக்குச் சொந்தமான ஒரு புறம்போக்கு இடத்தில், சேரிவாழ் மக்கள் குடிசை போடவோ அல்லது ஒரு கொடிக்கம்பத்தை நட்டு வைத்துக் கொடியேற்றவோ அவ்வளவு எளிதில் சாதிய-ஆதிக்கச் சக்திகள் அனுமதித்ததுண்டா? எத்தனை இடங்களில் வெட்டு, குத்து, கொலை என்கிற அளவுக்கு, இன்றைக்கும் சாதிய வன்கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன என்பது நாடறிந்த உண்மை.
1995இல், கடலூர் மாவட்டம், மங்களூர் தொகுதியில் ஆவெட்டி, நாவலூர் ஆகிய கிராமங்களில், தைப்பொங்கலின் போது, அனைத்துக் கட்சியினரும் கொடியேற்றியுள்ள பொது இடத்தில் அம்பேத்கர் கொடியென ஒரு நீலக்கொடியை ஏற்றினர் என்பதற்காக, தலித் மக்கள்மீது எத்தகைய வன்கொடுமை களைக் கட்டவிழ்த்துவிட்டனர் என்பதும், அதனை எதிர்த்துப் போராடிய விடுதலைச்சிறுத்தைகள் மீது காவல்துறையினர் எப்படிப்பட்ட அடக்குமுறைகளை ஏவினர் என்பதும் தமிழ கத்தையே உலுக்கிய கொடுமைகளுள் ஒன்றாகும். ஊருக்குப் பொதுவான இடமென்றால், அது சாதி இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமென்று கருதுகிற மனநிலைதான் சமூகத்தில் இன்னும் நிலவுகிறது. ஆவெட்டியிலும், நாவலூரிலும் கொடியேற்ற அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, திட்டக்குடி என்னும் நகரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட, விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக சாதி இந்துக்களும் காவல்துறையினரும் கூட்டுச் சேர்ந்து மிகக் கொடூரமான வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். பட்டப்பகலில் திட்டக்குடி சண்முகம், தொளார் ரமேஷ் ஆகிய தலித் இளைஞர்களை அடித்தே கொன்றனர். மேலும், வெறியடங்காமல், வதிட்டபுரம் என்னும் சேரிமக்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து காவல்துறையினரும் சாதிவெறியர்களும் கொலை வெறியாட்டத்தில் இறங்கினர்.
விடுதலைச்சிறுத்தைகள் எதிர்த்து நின்று அவர்களை விரட்டியடித்தனர். அதனால், ஆத்திரமடைந்த காவல்துறை-சாதிவெறிக் கும்பல் கொல்லைப்புற வழியாக சேரிக்குள் நுழைய முயற்சித்தனர். அதனையும் விடுதலைச் சிறுத்தைகள் முறியடித்ததினால், புதர்களில் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு நடத்தி, காக்கிச் சட்டைக் கும்பல் வெறியாட்டம் போட்டதில், சோதி, மகேந்திரன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இத்தகைய வெறியாட்டமெல்லாம் ஏன் நடந்தன என்றால், புறம்போக்கு இடத்தில், கையளவு நிலத்தில் ஒரு கொடிக்கம்பத்தை நடுவதற்கு தலித்துகள் முயற்சித்தனர் என்கிற ஒரே காரணம்தான். இதுபோல தமிழ்நாடெங்கும் ஏராளமான நிகழ்வுகளைச் சான்றாக எழுதலாம். இம்மண்ணின் மைந்தர்களான தலித்துகள், காலம் காலமாகக் குடியிருந்து வரும் குடிமனைகளுக்கேகூட இதுநாள்வரையில் ‘பட்டா’ வழங்குவதற்கு மனமில்லாத நிலைதான் தொடர்கிறது.
இத்தகைய சாதிய-ஆதிக்க வெறிகொண்ட சமூகக் கட்டமைப்பில், நம்மைப் போன்றவர்கள் சென்னை போன்ற பெருநகரங்களில், அதுவும் தலைநகரத்தில், ஒரு நிலத்தை ஆக்கிரமிப்புச் செய்துவிட முடியுமா?
நில ஆக்கிரமிப்புக் குண்டர்களும், கட்டப்பஞ்சாயத்துக் கும்பலும், இத்தகைய முதன்மையான இடத்தில் அமைந்துள்ள ஒரு காலிமனையை, விடுதலைச்சிறுத்தைகள் கைப்பற்றிக் கொள்ளட்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருப்பார்களா?
சென்னை அசோக்நகர், நூறடிச்சாலையில் முதன்மையான பகுதியில் அமைந்துள்ள ‘3.840 கிரவுண்ட்’ பரப்பளவுள்ள காலி மனையைத்தான் விடுதலைச்சிறுத்தைகள் ஆக்கிரமித்துக் கொண்டதாக உண்மையை மூடிமறைத்து அவதூறு பரப்புகின்றனர். அதிகாரவர்க்கமும் ஊடகங்களும் இவ்வாறுதான் நடந்துகொள்ளுமென்று நாம் எதிர்பார்த்ததுதான்!
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அந்த மனை காலியாகவே கிடந்தது. அது ஒரு தலித்துக்குச் சொந்தமானது என விடுதலைச் சிறுத்தைகளின் பார்வைக்கு வந்தது. கடந்த 2003-2004ஆம் ஆண்டுவாக்கில், இது தொடர்பாக பேசியவர்கள், பாலகிருஷ்ணன் என்கிற தலித்துக்குச் சொந்தமான இடத்தை, அவர்களால் மீட்க முடியாமல் அல்லல்படுகின்றனர் என்றும், விடுதலைச்சிறுத்தைகளின் கட்சி அலுவலகத்திற்கென விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தனர்.
பாலகிருஷ்ணன் என்பவர், தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சுமிதேவி என்கிற விதவையை திருமணம் செய்து கொண்டார் என்றும், லட்சுமிதேவி 1966இல், தமிழ்நாடு வீட்டுவசதிவாரியத்திடமிருந்து சுமார் 14 ஆயிரம் ரூபாய்க்கு அம்மனையை விலைக்கு வாங்கினார் என்றும், கணவர் என்ற முறையில் அச்சொத்துக்கு பாலகிருஷ்ணன்தான் உரிமையாளரென்றும் தெரியவந்தது. பாலகிருஷ்ணன் மற்றும் லட்சுமிதேவிக்கு குழந்தைகள் இல்லை. முதல் கணவர் சத்தியநாராயணாவுக்கும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், லட்சுமிதேவியோடு வாழ்ந்தவர், அவரை அடக்கம் செய்தவர் என்கிற அடிப் படையில் பாலகிருஷ்ணன்தான் சட்டப்படியான வாரிசுதாரர் என்று சான்றிதழ் பெற்றிருக்கிறார். அதனடிப்படையில் 1990லிருந்து அம்மனைக்கு சொத்துவரி செலுத்திவந்திருக்கிறார். இதனடிப்படையில் தான், பாலகிருஷ்ணனின் இன்னொரு மனைவியான மீனாட்சி மற்றும் அவரது பிள்ளைகளிடமிருந்து அம்மனையை விலைக்கு வாங்குவதெனத் தீர்மானித்து 2005இல் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர், 9-6-2006இல் பத்திரப்பதிவுத்துறையில் விற்பனைப் பத்திரம் பதிவு செய்யப்பட்டது.
இந்தச் சொத்துக்கு உரிமைகோரி, லட்சுமிதேவியின் ஓட்டுநர் என்கிற முறையில் தன்னை ஒரு வளர்ப்பு மகனாக அறிவித்துக் கொண்டு, கணேசன் என்பவர், அம்மனையைக் கைப்பற்ற முயற்சித்தார். கணேசனின் ‘பவர் ஏஜென்ட்’ என்னும் பெயரில் ‘பந்தா பாண்டியன்’ தலைமையிலான ஒரு கும்பல், பால கிருஷ்ணனையும், அவரது தம்பி மற்றும் குடும்பத்தினரையும், பல்வேறு தொல்லைகளுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கினர். அதனை எதிர் கொண்டு வழக்காடி அவர்களின் முயற்சியை முறியடித்து பாலகிருஷ்ணன் அம்மனையைக் காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில் ஆந்திராவைச் சார்ந்த திட்டக்கவி ஆனந்தபத்மநாப மூர்த்தி, கந்துக்குரி சாய்பாபா, கந்துக்குரி இராமசுப்ரமணியன் ஆகியோரின் பெயரில் சிவராமபிரசாத் என்பவர், அவர்களின் பவர் ஏஜெண்ட் எனச் சொல்லிக் கொண்டு இதில் தலையிட்டிருக்கிறார். லட்சுமிதேவி அந்த மூவருக்கும் ‘உயில்’ எழுதியிருப்பதாகச் சொல்லி, வருவாய்த்துறையிலிருந்து தங்களின் பெயர்களுக்கு 1989இல் ‘பட்டா’ வாங்கியுள்ளனர். இதையறிந்த பாலகிருஷ்ணன் புகார் செய்ய, அதனடிப்படையில் வட்டாட்சியர் இராம்சிங் என்பவர் விசாரணை செய்தார். அவரது விசாரணையில், அந்த மூவருக்கும் வழங்கப்பட்டுள்ள ‘பட்டா’ முறைகேடானது. அதனை ரத்து செய்ய வேண்டுமென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார். அதன்படி அவர்கள் பெயரில் வழங்கப்பட்ட ‘பட்டா’ ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதிலிருந்து அம்மனைக்கு உரிமையுடையவர்கள் யார் என்பது தொடர்பாக வழக்கு நடந்து வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தில் செலவு செய்து வழக்கு நடத்து மளவுக்குப் பொருளாதார வலிமையில்லாத காரணத்தால், பாலகிருஷ்ணன் முறையாகவும், வலுவாகவும் வழக்கை நடத்தவில்லையெனத் தெரிகிறது. பாலகிருஷ்ணன் தரப்பில் வாதாடுவதற்கு வழக்கறிஞர் ஒருவரை நியமிக்க முடியாத நிலையிலேயே, சிவராமபிரசாத்துக்கு ஆதரவாக 23-1-2004இல் ‘சிட்டிசிவில்’ நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் 22-1-2004இல் மறைந்துவிட்டநிலையில், அத்தீர்ப்பை எதிர்த்து அவரது மனைவி திருமதி மீனாட்சி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்குத் தொடுத்துள்ளார். 2006இல் விடுதலைச்சிறுத்தைகள் அவ்விடத்தை மீனாட்சி யிடமிருந்து விலைக்கு வாங்கியுள்ளதன் அடிப்படையில் அங்கே கட்சியின் தலைமை அலுவலகத்தை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். சொத்துவரி செலுத்துவதோடு, மின்இணைப்பு மற்றும் தொலைபேசி இணைப்பையும் பெற்றுள்ளோம். இந்நிலையில்தான் நாம் சரியான நபரிடமிருந்து மனையை வாங்கவில்லையெனவும் அவ்விடத்தைக் காலி செய்ய வேண்டுமெனவும் நீதிபதி ஜெயபால் என்பவர் தீர்ப்பளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சடடத்தின் 145ஆவது பிரிவின்படி, 2007, பிப்ரவரியில் கிண்டி-மாம்பலம் வட்டாட்சியர் கோபால் விசாரணை நடத்தியதில், அம்மனை யாருடைய பயன்பாட்டிலுள்ளது என்று அறிவிப்பதற்கு மாறாக, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த வேதாஅருண் நாகராசன் என்கிற அடமானதாரருக்கு உரிமையுடையது என்று அறிக்கையளித்துவிட்டார். யாருடைய பயன்பாட்டில் உள்ளது என்று மட்டுமே சொல்ல அதிகாரம் படைத்த வட்டாட்சியர் அம்மனையின் ‘மூல உரிமை’ பற்றி தீர்ப்பளித்தது தவறு என்று எதிர்த்தரப்பினர் தொடுத்த வழக்கில்தான், நீதிபதி ஜெயபால், தம்முடைய அதிகார வரம்பையும் மீறி, அவ்விடத்திலிருந்து விடுதலைச்சிறுத்தைகளை வெளியேற்றும்படியான ஆணையைப் பிறப்பித்துவிட்டார். வட்டாட்சியரின் விசாரணையும் தீர்ப்பும் சரியில்லையென்றால் மறுவிசாரணைக்கு அனுப்ப வேண்டுமென்பதுதான் உயர்நீதிமன்றத்திற்குள்ள அதிகாரமென்று சட்டவிதிகள் கூறுகின்றன. அல்லது வட்டாட்சியரின் தீர்ப்பு செல்லாது என்று அறிவிக்க உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரமுள்ளது என்று சட்டவல்லுநர்கள் கூறுகின்றனர். ‘சிவில்’, வழக்கு மூலஉரிமை தொடர்பாக இன்னும் நிலுவையிலிருக்கும் போது, ‘கிரிமினல்’விவகாரம் தொடர்பான வழக்கில், நிலத்தைப் பயன்படுத்திவரும் ஒருவரின் உரிமைக்கெதிராக தீர்ப்பளிக்க முடியாது என்றும் சட்டவல்லுநர்கள் மிக அழுத்தமாகக் கருத்துக் கூறுகின்றனர். ஆனால், சிவராமபிரசாத் என்பவருக்கு ஆதரவாக அத்தீர்ப்பு அமைந்துவிட்டதால், அவ்விடத்திலிருந்து நம்மை அப்புறப்படுத்துவதில் காவல்துறை மிகவும் தீவிரம் காட்டியது.
சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை உருவாகிவிடக்கூடாது என்பதாலும், விடுதலைச்சிறுத்தைகளால், இந்நிலம் தொடர்பாக திமுக அரசுக்கு எந்தச் சங்கடமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதாலும், நீதிமன்றத்தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதாலும் கடந்த 1-9-2009 அன்று, அலுவலகத்தைக் காலிசெய்து, கதவைப்பூட்டிவிட்டு சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் நேரில் சென்று சாவியை ஒப்படைத்தோம். கடந்த 1979லிருந்து 2006 வரை பாலகிருஷ்ணனும் அவரது மனைவி மீனாட்சியும் பாதுகாத்து, பயன்படுத்தி வந்த அந்த இடத்தை 2006லிருந்து இதுநாள் வரையில் விடுதலைச்சிறுத்தைகள் பாதுகாத்தும் பயன்படுத்தியும் வருகிறோம். கடந்த முப்பதாண்டுகளில் ஒரேயொரு நாள்கூட அந்த மனையில் அடியெடுத்துவைக்காத சிவராமபிரசாத் தரப்பினருக்கு அந்த இடத்தைக் கைப்பற்றித்தர வேண்டுமென்பதில் காவல்துறை அவ்வளவு தீவிரம் காட்டுவது ஏனென்று விளங்கவில்லை. உயர்நீதிமன்றத் தீர்ப்பில், விடுதலைச் சிறுத்தைகளை வெளியேற்றும் வகையில்தான் சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, சிவராமபிரசாத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனச் சொல்லப்படவில்லை. ஆனால், அவரிடம் சாவியை ஒப்படைத்து, அவருக்குப் பாதுகாப்பு அளித்து 5-09-2009 அன்று காலை அந்த மனையைக் கைப்பற்ற முனைந்தது காவல்துறை. விடுதலைச்சிறுத்தைகள் உடனடியாக திரண்டுவந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் அம்முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக, உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து, அண்மையில் ஒரு தீர்ப்பு வெளியானது. மதுரை மாநகர் அருகே, வண்டியூர் - தீர்த்தக்காடு என்னுமிடத்தில் தலித்துகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வீட்டு மனைகளை ஆதிக்கச் சாதியினர் ஆக்கிரமித்துக் கொண்டது சட்டவிரோதம் என்றும் உடனடியாக அவர்களை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் இரண் டாண்டுகளுக்கு முன்பு இதே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பை மதித்து, ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி தலித்துகளுக்கு அவ்விடத்தை மீட்டு வழங்கிட, தமிழ்நாடு காவல்துறை ஒரு சிறிய முயற்சியாவது மேற்கொண்டிருக்கிறதா? அதுவும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புதானே! அதனை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்துவிட்ட காவல்துறையினர் - அதிகாரவர்க்கத்தினர், அசோக்நகரில் விடுதலைச்சிறுத்தைகளின் அலுவலகத்தைக் காலி செய்வதில் மட்டும் வரிந்துகட்டிக் கொண்டு செயல்படுவது ஏன்?
வண்டியூர் - தீர்த்தக்காட்டில் தலித்துகள் நிலம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை ‘ஆக்கிரமிப்பு’ என்று எழுதாத - சொல்லாத ஊடகங்கள் உரிய விலை கொடுத்து வாங்கிய விடுதலைச்சிறுத்தைகளை மட்டும் ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று எழுது வது ஏன்? ஆளும்வர்க்கத்தைச் சார்ந்த அதிகாரிகளின், ஊடகங்களின் மனநிலை இன்னும் ‘தலித் விரோத’ மனநிலையாகவே உள்ளது என்பதை அறியலாம்.
‘நிலம் யாருக்கு உரிமை’ என்கிற வழக்கு முடியாத நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் அந்த நிலத்தை வாங்கியது தவறுதான் என்றாலும், உரிய விலை கொடுத்து, சட்டப்படி பதிவு செய்து அவ்விடத்தை நாம் பயன்படுத்தும்போது காசே கொடுக்காமல், காலியாகக் கிடந்த மனையை ஆக்கிரமித்துக் கொண்டோம் என்கிற தோற்றத்தை உருவாக்கி களங்கத்தை ஏற்படுத்த இந்த ஆதிக்கச் சக்திகள் முயற்சிப்பது ஏன்?
முப்பதாண்டுகளாய் புதர் மண்டிக் கிடந்த அவ்விடத்தை பல இலட்சக்கணக் கான ரூபாய்கள் செலவு செய்து செம்மைப்படுத்தி, மா, வாழை, தேக்கு, வேம்பு, பூவரசு உள்ளிட்ட நிழல் தரும் மரங்களையெல்லாம் உருவாக்கி ஒரு தோட்டமாக அதனை அழகுபடுத்திப் பாதுகாத்துவந்த விடுதலைச்சிறுத்தைகளை வெளியேற்றிவிட்டு, போலியாய் ஒரு உயிலைத் தயார் செய்து, பாலகிருஷ்ணனால் வழக்காடமுடியாத நிலையில், சாதகமாக ஒரு தரப்புவாதத்தின் அடிப்படையில் ஒரு தீர்ப்பைப் பெற்றுவிட்ட ஒரு நபருக்கு, அதிலும் ஆந்திராவிலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு, அவ்விடத்தைக் கைப்பற்றித் தருவதற்கு அதிகாரவர்க்கம் துடியாய்த் துடிக்கிறது.
அரசியல் அடிப்படையில் எவ்வளவுதான் நாம் வளர்ந்திருந்தாலும், ஆளும் கட்சியோடு கூட்டணியிலிருந்தாலும், ‘தலித்’ என்கிற அளவில்தான் நம்மை அதிகார வர்க்கம் மதிப்பிடுகிறது என்பதை இந்தச் சூழலில் அறிந்துகொள்ள முடிகிறது.
சட்டத்தை மதிக்கிறோம்! தீர்ப்பை மதிக்கிறோம்! அதனால், உச்சநீதிமன்றம் வரையில் போராடிப் பார்த்தோம். தொடக்கக் காலத்தில் பாலகிருஷ்ணன் தரப்பில் வழக்கை முறையாக நடத்தாமல் போனதால், இன்றைய நிலையிலும் நம்மால் அதனை வெற்றிகரமாக நடத்திட இயலவில்லை. இந்நிலையில், தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து இடத்தைக் காலி செய்து கொடுத்திருக்கிறோம். அடாவடி செய்யவில்லை. “வெளியேற்ற முடிந்தால் செய்து பாருங்கள்” என்று காவல்துறைக்குச் சவால் விடவில்லை. நாகரிகமாக சட்டத்திற்கும் தீர்ப்புக்கும் மதிப்பளித்துள்ளோம். ஆனால், அதிகார வரம்பை மீறி, எதிர்த்தரப்புக்கு ஒப்படைக்க அதிகாரிகள் முயலுவதும், உரிய விலை கொடுத்து வாங்கிய உண்மையை மூடிமறைத்து நம்மை நில ஆக்கிரமிப்புக் குண்டர்களைப் போலச் சித்தரிப்பதற்கு ஊடகங்கள் முயலுவதும் ஏன் என்பதுதான் விடுதலைச்சிறுத்தைகளின் கேள்வி.
ஒரு குக்கிராமத்தில் கொடியேற்ற முனைந்தாலும், தலைநகரத்தில் ஒரு மனைவாங்க முனைந்தாலும், நாம் இத்தகைய எதிர்ப்புகளையும் இடர்களையும் எதிர்கொண்டே தீரவேண்டும் என்பது மீண்டும் உறுதிப்படுகிறது. இத்தகைய ஆதிக்க மனநிலைக்கு எதிராகவும் அவதூறுகளுக்கு எதிராகவும் நாம் போராடித்தானேயாக வேண்டும்.
எங்கே கொடியேற்ற முடியாது என்கிற நிலையுள்ளதோ அங்கே கொடியேற்றுவதும், எங்கே தலைமை அலுவலகத்தைக் கட்ட முடியாது என்கிற நிலையுள்ளதோ அங்கே கட்டுவதும்தான் நாம் தற்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழியாகும்!
தலைநகர் சென்னையில்
தலைமையகம் அமைப்போம்! - வரும்
தடைகளைத் தகர்த்து
தலைநிமிர்ந்து நடப்போம்!