அனைவருக்கும் விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் வணக் கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகின்ற ஈழத்தமிழர் ஆதரவு இணையத்தளங் களில் அல்லது ஏடுகளில்கூட, விடுதலைச் சிறுத்தைகளின் அறிக்கைகளையோ போராட்டங்களையோ முழுமையாகப் பதிவுசெய்வதில்லை. உலகம் முழு வதும் கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான நாடுகளுக்குச் சென்றிருக்கிறேன், அமெரிக்காவில் பேசியிருக்கிறேன், கனடாவில் பேசியிருக்கிறேன், ஆஸ் திரேலியாவில் பேசியிருக்கிறேன், ஐரோப்பிய நாடுகளில் பேசியிருக் கிறேன். மணிக்கணக்கில் உரையாற்றி யிருக்கிறேன், அத்துடன், எத்தனையோ மாநாடுகளை தமிழகத்திலே நடத்திக் காட்டியிருக்கிறோம். ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகின்ற இணையத்தளங் களில்கூட இந்தச் செய்திகள் 50 விழுக்காடு அளவுகூட பதிவான தில்லை. இதை நான் ஒரு குற்றச் சாட்டாகச் சொல்லவில்லை. ஊடகங் களில் வரும் செய்திகளை மட்டுமே வைத்து நாம் ஒரு முடிவுக்கு வரக்கூடாது. ஊடகங்களில் இருட்டடிப்பு செய்யப் படுகின்ற செய்திகள் ஏராளம். இன் றைக்கு இராஜபக்சே சொல்லு கின்ற செய்திகள் மட்டும்தான் உலக அளவிலே பதிவாகிக் கொண்டிருக்கிறது. நம் முடைய தரப்புச் செய்திகளை பதிவு செய்ய ஊடகங்கள் தயாராக இல்லை.
ஆக, இராஜபக்சே சொல்லுகின்ற செய்திகளை மட்டுமே நாம் நம்பினால் நம்மால் எழுந்திருக்க முடியாது. நம்மால் தொடர்ந்து போராடமுடியாது, நம்முடைய எதிர்காலம் இருண்டுபோகும். மறுபடியும் அடிமைத்தனத்தில்தான் உழலவேண்டியிருக்கும். எனவே, கூடியிருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழ்ச்சொந்தங்களுக்கு, உங்களில் ஒருவன், உங்கள் உணர்வு களைப் பிரதிபலிக்கிறவன், உங்கள் குடும்பத்தைச் சார்ந்த ஒருவன் என்கிற உணர்வோடு சில செய்திகளைச் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஏராளமான தோழர்கள் என்னிடம் கேட்கின்ற கேள்விகளுக் கெல்லாம் மொத்தமாக பதில்சொல்ல நான் கடமைப் பட்டிருக்கிறேன். அண்ணன் கணேசலிங்கம் அவர்கள் தொடர்ச்சியாக என்னைத் தொடர்பு கொண்டு தமிழக நிலவரங்களைக் கேட்டுக்கொண் டிருந்தார். அதனடிப்படையில் விடுதலைச்சிறுத்தை கள் எடுத்த முடிவுகளையும், திருமாவளவன் மேற் கொண்ட முயற்சிகளையும் அவ்வப்போது தொலைபேசி வழியாகப் பாராட்டி வந்திருக்கிறார். அப்படி எல்லோரையும் தொடர்புகொள்வதற்கான வாய்ப் பில்லை, நாங்கள் நடத்துகின்ற ‘VCK.in’ என்கிற இணையத்தளத்தைக்கூடப் பலர் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை.
ஆகவே தமிழக அரசியல் சூழல், இந்திய அரசியல் சூழல் எந்த அளவிற்குப் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே போய்ச்சேர்ந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான், ஈழத்தை நேசிக்கிறவன், ஈழத்திற்காக ஆயுதம் ஏந்தாத ஒரு விடுதலைப் புலியைப்போல் செயல்படுகிறவன் என்கிற உணர்வு எனக்கு உண்டு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னையில் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்கள் தங்கியிருந்தபோது நேரில் சந்தித்தவன். நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் என்னுடைய பொது வாழ்வு ஈழத்தமிழர்களுக்கான ஆதரவு என்கிற அடிப்படையில்தான் தொடங்கியது. நான் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில் மாணவர்களைத் திரட்டி 1983ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலையைக் கண்டித்து பேரணிகளை, ஆர்ப்பாட்டங்களை நடத்தியவன். ‘விடுதலைப்புலி’ என்கிற பெயரிலே கையெழுத்து ஏடு ஒன்றை நடத்தியவன். அப்படிப்பட்ட அந்தக்காலத்தில் பெரியார் திடலில் மாணவர்களைத் திரட்டி ஈழ விடுதலை ஆதரவு மாநாட்டை என்னுடைய தலைமையிலே நடத்தியவன். அப்படித்தான் என்னுடைய பொதுவாழ்க்கை தொடங்கியது. நான் சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில், அண்ணன் பிரபாகரன் அவர்கள் அடையாறில் தங்கியிருந்தார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உதகையிலே மலர் கண்காட்சி திறந்து வைக்கச் சென்றிருந்தபோது, அன்றைக்கு ஐ.ஜி.யாக இருந்த மோகன்தாசு, அண்ணன் பிரபாகரனிடம் இருந்த ‘வயர்லஸ்’ கருவிகளையெல்லாம் திடீரென்று கையகப்படுத்திகொண்டார். அதை எதிர்த்து அண்ணன் பிரபாகரன் அவர்கள் உண்ணாநிலை அறப்போரை நடத்தினார்.
அந்த நேரத்தில் மாணவர்களாய் இருந்த நாங்கள் சுமார் 20 பேர் திரண்டுபோய் அவர் தங்கியிருந்த வாசலிலே நின்று உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினோம். அப்போது எங்களிடையே அண்ணன் அவர்கள் ஆற்றிய உரை இப்போதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது. “நாங்கள் ஆயுதங்களை ஏந்தியிருப்பது சிங்கள இனவெறிக்கு எதிராகத் தானே தவிர இந்தியாவுக்கு எதிராக இல்லை. இந்தியாவை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால், எங்கள் கைகளிலே இருக்கின்ற ‘வயர்லஸ்’ கருவிகளை இன்றைக்கு தமிழகக் காவல்துறை பறிமுதல் செய் திருக்கிறது. அவற்றை ஒப்படைக்கும்வரை நான் இந்த அறப்போரைக் கைவிடமாட்டேன்” என்று எங்களிடத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எம்.ஜி.ஆரிடத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. வீட்டின் உள்ளே சென்றுவிட்டு மறுபடியும் வெளியே வந்தார். முதல்வர் அவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்கச்சொல்லி ஆணையிட்டுவிட்டார். எனவே, உண்ணாவிரதத்தைக் கைவிடுகிறேன் என்று அவர் அங்கே அறிவிப்புச் செய்தார். திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அப்போது உடனிருந்தார். அவர்தான் அன்றைக்குப் பழச்சாறு கொடுத்து உண்ணா விர தத்தை முடித்துவைத்தார். அப்படி அண்ணன் பிரபா கரன் அவர்களோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அண்ணன் கிட்டு அவர்கள் அங்கே தங்கியிருந்த காலத்தில் அவரை சந்தித்திருக்கிறேன். இவ்வாறு எனக்கு புலிகள் இயக்கத்தோடு அறிமுகம் ஏற்பட்டது.
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக, ஈழத்தமிழர் களின் உரிமைகளுக்காக, ஈழத்தமிழர்களின் வாழ்வுக் காகப் போராடுகிற இயக்கமாக, விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தை முழுமையாக வழிநடத்திவருகிறேன்.
கடந்த 2002ஆம் ஆண்டும் ஈழத்தில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்தச் சமாதான ஒப்பந்தக் காலத்தில் 2002ஆண்டு ‘மானுடத்தின் தமிழ்க் கூடல்’ நிகழ்ச்சி யாழ்ப்பாணத்தில் நடந்தது. அதில் கலந்துகொள்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அண்ணன் பிரபாகரன் அவர்கள் திருமாவளவனை அழையுங்கள் என்று ஆணையிட்டதின் பேரில் எனக்கு அழைப்பு வந்தது. நான் வளர்ந்த பெரிய தலைவர் அல்ல; புகழ்பெற்ற தலைவர் அல்ல; வளர்ந்துவருகின்ற ஒரு சின்னஞ்சிறிய கட்சியின் தலைவரான என்னை அடையாளம் கண்டு அழைத் தவர் மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்கள். ‘மானு டத்தின் தமிழ்க்கூடல்’ மாநாட்டிலே பங்கேற்ற பிறகு தனியே என்னை வரவழைத்து ஒரு மணி நேரம் என்னுடன் உரையாடினார். அவரோடு நெருங்கியிருந்து ஒரு மணிநேரம் பேசக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். முதல் நாள் எல்லோருடனும் சேர்ந்து அமர்ந்து உணவு அருந்தக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அடுத்த நாள் என்னை மட்டும் தனியாக வரவழைத்து ஒருமணிநேரம் என்னோடு உரையாடினார். என் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வு அது.
தமிழ்நாட்டு அரசியல் சூழல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலை போன்றவற்றை மிகக்கூர்மையாக தமிழ்நாட்டு ஏடுகளைப் படித்துத் தெரிந்துவைத் திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளைப் பற்றியெல்லாம் என்னுடன் கலந்துரையாடியபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என் தாய் எப்போதோ ஆனந்தவிகடன் ஏட்டிலே கொடுத்த பேட்டியைப் படித்துவிட்டு, அதை நினைவிலே வைத்திருந்து என்னை கேட்டார். அப்படியெல்லாம் அண்ணன் அவர்களோடு ஏற்பட்ட நெருக்கம், எனக்குள் நானும் ஓர் தமிழீழ விடுதலைப்போராளி என்கிற உணர்வை ஏற்படுத்தியது. ஈழத்து மண்ணிலே ஆயுதம் ஏந்தி என்னால் போராட முடியவில்லையே தவிர தமிழகத்திலே இலட்சக்கான இளைஞர்களை ஈழவிடுதலை போராளி களாக அணிதிரட்டுகின்ற கடமையை ஆற்றிவருகிறேன்.
“இன்றைக்கு தமிழகத்திலே இளைஞர்களை அணிதிரட்டுகின்ற வலிமை உங்களிடம்தான் இருக் கிறது. இதை நீங்கள் சரியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்காக இங்கே ஒரு அண்ணன் இருக் கிறான் என்ற நம்பிக்கையோடு நீங்கள் போராடுங் கள்” என்று மார்போடு என்னைக் கட்டியணைத்து விடை கொடுத்தவர் அண்ணன் பிரபாகரன் அவர்கள். இட்டுக் கட்டி எதையும் நான் சொல்லவில்லை, அந்தத் தேவை எனக்கில்லை. இதுவரை எங்கும் சொல்லாத செய்திகளை நான் இந்த மேடையில் சொல்லுகிறேன். யாரிடத்திலும் சொல்லாத செய்திகளை இந்த மேடையில் நான் சொல்லு கிறேன். அவரோடு நான் எடுத்துக்கொண்ட புகைப் படங்களையெல்லாம், “இங்கேயே வைத்துவிட்டுச் செல்லுங்கள்; தம்பிகள் அதனைப் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள்; ஈழம் விடுதலைப் பெற்ற பின்னர் நீங்கள் இங்கே வரத்தான் போகிறீர்கள்; அப்போது அந்தப் புகைப்படங்களை உங்களிடம் ஒப்படைக்கச் சொல்கிறேன்” என்று அப்போது சொன்னார் அண்ணன் பிரபாகரன் அவர்கள்.
மறுபடியும் 2004ஆம் ஆண்டு அவரைச் சந்திக் கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 11 நாள் அங்கே தங்கியிருந்தேன். அண்ணன் தமிழ்ச்செல்வன் அவர் களோடு சேர்ந்து தமிழ் ஊடக அறிவியல் கல்லூரி அடிக்கல்நாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். மாவீரர் நாளில் ‘விசுவமடு மாவீரர்கள் துயிலும் இல்லத்தில்’ கலந்துகொண்டேன். அப்படிப்பட்ட இந்த உறவு களெல்லாம் எனக்குள் உரமேற்றியது; என் உணர்வு களைக் கூர்மைப்படுத்தியது. என்னை ஈழவிடுதலைப் போராளியாகவே வளர்த்தெடுத்தது. இந்த உணர்வுகள் தான் என்னுடைய செயல் திட்டங்களுக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது.
தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஈழ விடுதலை குறித்த சிந்தனையை வளர்த்தெடுத்ததில் பெரும்பங்கு விடுதலைச்சிறுத்தை களுக்கு உண்டு என்பதை நான் மார்தட்டிச் சொல்லு கிறேன். விடுதலைச்சிறுத்தைகள்தான் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு முன்னெடுப்பு ஆற்றலாக இருந்த வர்கள். ‘பொடா’ சட்டம் வந்தபோது, நான் ஈழத்திலே இருந்தேன். ‘பொடா’ எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி விட்டுத்தான் நான் ஈழத்திற்கே போனேன். அந்த சட்டத்தை எதிர்த்து போராட வேண்டும் என்கிற உணர்வை இளைஞர்களிடத்தில் வளர்த்தேன்.
அக்காலகட்டத்தில் ஈழம் என்பதைப் பற்றிப் பேச முடியாது அப்போது ஜெயலலிதா அம்மையார் ஆட்சியில் இருந்தார். ஈழம் என்கிற சொல்லோ விடுதலைப்புலி களைப்புலிகள் என்ற சொல்லோ பயன்படுத்தப்பட்டால் அவர்களின் மீது வழக்குப் போட்டு உள்ளே தள்ளுகிற கொடுமை தலைவிரித்தாடிய நேரம். ‘புலிகள் என்றால் ஈழம் ஈழம் என்றால் புலிகள்’ இரண்டையும் பிரிக்கமுடியாது என்று மேடைகளில் முழங்கியவன் திருமாவளவன். ‘பொடா’ நடைமுறையில் இருந்த நேரம். நாங்கள் புலிகளை ஆதரிக்க மாட்டோம்; ஈழத்தைத்தான் ஆதரிக்கிறோம் என்று பலரும் சொல்லிக் கொண்டிருந்த போது, நாங்கள் ஈழத் தமிழர்களைத்தான் ஆதரிக்கிறோம்; விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை என்று எல்லோரும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தபோது, ‘ஈழம் என்றால் புலிகள்; புலிகள் என்றால் ஈழம்’ என்ற தலைப்பிலேயே, என்னுடைய உரையைத் தொகுத்து சிறு நூலாக வெளியிட்டோம்.
இவ்வாறு தொடர்ச்சியாக ஈழத்தைப் பற்றியும் புலிகளைப் பற்றியும் வெளிப்படையாகப் பேசி தமிழகத்தில் நிலவிய இறுக்கத்தை உடைத்தெறிந்த இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் என்பதைச் சொல்ல நான் கடமைப் பட்டுள்ளேன். புலிகளைப் பற்றிப் பேசவே கூடாது என்ற போதுதான், பேசுவதற்கு எங்களுக்கு கருத்துரிமை இருக்கிறது என்று புல்லாரெட்டி அவென்யூ அமைந்த கரையில் ‘கருத்துரிமை மாநாடு’ நடத்தினோம். அந்த மாநாட்டிற்குத் தடை விதிக்கச் சொல்லி காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் சட்ட மன்றத்திலேயே பேசினார்கள். திருமாவளவனை கைது செய்யுங்கள் என்று சட்டமன்றத்திலேயே பேசினார்கள். காங்கிரசுக் கட்சிக்காரர்கள் மட்டுமல்ல ஜெயலலிதா அம்மையார்கூட பேசினார். “புலிகளைத் தீவிரமாக ஆதரிக் கிறான். ஈழத்தை தீவிரமாக ஆதரிக்கிறான். ஏன் திருமா வளவனை கைது செய்யவில்லை, கைது செய்யுங்கள்” என்று திரும்பத் திரும்ப அறிக்கை வெளியிட்டவர் ஜெயலலிதா அம்மையார். அதன் பிறகு 2007லே சமாதான ஒப்பந்தம் முடிவடைந்தது. அதற்கு முன்பே ஒப்பந்தத்தை மீறி சிங் களவன் பல்வேறு அத்துமீறல்களைச் செய்கிறான். இவற்றை யெல்லாம் அவ்வப்போது அம்பலப்படுத்துகிற நடவடிக்கை களிலே விடுதலைச் சிறுத்தைகள் தமிழகத்திலே மேற் கொண்டது. மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் வரையில் தொடர்ச்சியாக நமக்குப் பின்னடைவு ஏற்படுகிறது. அதாவது, ஒப்பந்தகாலம் முடிந்த பிறகு மாவிலாறிலே தொடங்கிய யுத்தத்தில் நாம் பின் வாங்கினோம். அடுத் தடுத்து முள்ளி வாய்க்கால் வரையில் நாம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தக்காலகட்டத்தில் அடுக்கடுக்காக, தொடர்ச்சியாகப் போராட்டங்களையும் மாநாடு களையும் நடத்திய ஒரே கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. இவை எந்த ஏட்டிலும் பதிவாக வில்லை. இணையத் தளங்களில் பதிவாகவில்லை. ஈழத் தமிழர்கள் நடத்துகிற இணையத்தளங்களில் கூட பதிவாகவில்லை. 1965க்குப் பிறகு தமிழ கத்தில் எழுச்சிமிக்க ஒரு போராட்டம் நடந்ததென்று சொன்னால் அது ஈழத்தில் நடைபெற்றுக் கொண் டிருக்கிற கொடுமைகளை தடுத்து நிறுத்துங்கள் என்று சொல்லி விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய இரயில் மறியல் போராட்டம். அக்டோபர், நவம்பர், திசம்பர் மாதங்களில் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய போராட்டங்கள்தான் தமிழக அரசியலில் ஒரு வெப்பத்தை உருவாக்கியது. அரசியல் காரணங்களுக்காக சில பேர் ஈழ அரசியலை நோக்கி நகர்ந்து வந்தார்கள். குற்றச்சாட்டாகவோ அல்லது வாய்புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிற வகையிலோ நான் இதைச் சொல்லவில்லை. உண்மையை புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்.
80 வயது முதியவர் ஒருவர் என்னை கட்டிப் பிடித்து, “தம்பி 1965க்குப் பிறகு தமிழகத்திலே எழுச்சி மிகுந்த ஒரு போராட்டம் நடைபெற்றது என்றால், அது நீங்கள் நடத்திய இரயில் மறியல் போராட்டம்தான், உங்களைப் பாராட்டுகிறேன்” என்று சொன்னார். தமிழ்நாடு முழுக்க அனைத்து இரயில் நிலையங்களிலும் விடுதலைச் சிறுத்தைகள் இரயில்களை மறித்தனர். நான் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் ஒன்றரை மணிநேரம் ஆயிரக் கணக்கான தோழர்களோடு ரயிலை மறித்து நின்றேன். இரயில் மறியல் போராட்டத்திற்குப் பிறகு தொழிலாளர் அணியினரின் போராட்டம்; மகளிர் அணியினரின் போராட்டம்; மாணவர்களின் சார்பிலே போராட்டம்; அதன் தொடர்ச்சியாக தமிழீழத்தை அங்கீகரிப்போம் என்று வலியுறுத்தி, ‘தமிழீழ அங்கீகார மாநாடு’ ஆகியவற்றை நடத்தினோம். அந்த மாநாட்டுக்குத் தடை விதிக்கும்படி காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்தவர்கள் சட்டசபையிலே கூச்சல் போட்டார்கள். மறுபடியும் மறுபடியும் ஜெயலலிதா அம்மையார் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.
தமிழீழ அங்கீகார மாநாட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னார். காவல்துறை தடை விதித்தது. நான் முதல்வர் வரை போய் பேசினேன். “இந்த மாநாடு தமிழீழத்தை அங்கீகரிக்கிற மாநாடு தானே. தமிழீழத்தில் உங்களுக்கும் உடன்பாடு உண்டுதானே. காவல்துறை தடை விதிப்பது ஏன்” என்று கேட்டேன். உடனே அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, “இந்த மாநாட்டிற்கு எதற்காகத் தடை விதிக்கிறீர்கள், அனுமதி தாருங்கள்” என்று சொன்னார். அப்படி அனுமதிபெற்று அந்த மாநாட்டை நடத்தினோம். இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகள் அந்த மாநாட்டில் பங்கேற்றார்கள். இதற்குப் பிறகு சனவரி 2ஆம் தேதி கிளிநொச்சியைக் கைப்பற்றிய செய்தியைக் கேட்டு திடுக்கிட்ட நான், அதிர்ச்சியடைந்த நான் மிகுந்த மன அழுத் தத்துக்கு ஆளானேன்.
ஜனவரி 4ஆம் தேதி திருச்சிராப்பள்ளியிலே பெரியவர் வே. ஆனைமுத்து அவர்களின் தலைமை யிலே நடைபெற்ற மார்க்சிய பெரியாரிய பொதுவு டைமைக் கட்சியின் மாநாட்டிலே கலந்துகொண்டு நான் பேசியபோது, “தமிழகத்துத் தலைவர்களே, தமிழ் உணர்வாளர்களே, தமிழ்த் தேசிய சிந்தனை யாளர்களே, கட்சி அரசியலைத் தூக்கி ஓரம் வைப்போம். நம் ஈழத்தின் தலைநகரான கிளி நொச்சியை சிங்கள இனவெறியர்கள் கைப்பற்றி விட்டதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நேரத்தில் இப்போதாவது நாம் ஒன்றுபட்டு நிற்போம். உங்களை யெல்லாம் நான் நேரில் வந்து சந்திக்கப் போகிறேன். அரசியல் கட்சி மாச்சரியங்களைக் கடந்து உங்களை நேரில் சந்திக்கப் போகிறேன். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம் வாருங்கள்” என்று அந்த மாநாட்டில் அறைகூவல் விடுத்தேன். 5ஆம் தேதி நான் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்களைச் சந்தித்தேன். அவரும் நானும் கலந்து பேசினோம். இனி நாம் அமைதி காக்கக் கூடாது; தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் உயிருக்கு ஆபத்துச் சூழ்ந்துள்ளது; இந்த நிலையில் நாம் ஒன்றுபட வேண்டிய தேவை இருக்கிறது என்று இருவரும் கலந்து பேசினோம். பின்னர், இருவரும் சேர்ந்து பெரியார் திடலுக்குப் போனோம். அங்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்துப் பேசினோம். பின்னர், மூன்று பேரும் சேர்ந்து, சனவரி 10ஆம் தேதி ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டுவது என்றும் அதற்கு அனைவரையும் அழைப்பது என்றும் முடிவுசெய்தோம். பெரியார் திடல் என்பது பொதுவான இடம். ஆசிரியர் வீரமணி ஒருங்கிணைத்தால் இது வெற்றிகரமாக அமையும் என்று பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் சொன்னார். அதனடிப்படையிலே ஆசிரியர் வீரமணி அவர்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் எல்லோருக்கும் அனுப்பப்பட்டது. திரு. பழ. நெடுமாறன், அண்ணன் வைகோ, தோழர் தா. பாண்டியன், தோழர் வரதராசன் இப்படி எல்லோ ருக்கும் அனுப்பப்பட்டது. தி.மு.க. தலைவருக்கும் அனுப்பப்பட்டது. தொலைபேசி வாயிலாகப் பேசியபோது சரி என்று ஒப்புக்கொண்டிருந்தும், திடீரென்று 10ஆம் தேதி கூட்டம் ரத்து என்று அறிவிக் கப்பட்டது. யார் அறிவித்ததென்றால் ஈழத் தமிழர்களுக் காகவே தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கக்கூடிய மதிப்புக்குரிய பழ. நெடுமாறன் அவர்கள்தான் அறிவித்தார். அதைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். பின்னர், மருத்துவர் இராமதாசு அவர்களைப் போய்ப் பார்த்தேன். ‘அய்யா நெடுமாறன், இப்படி அறிவித்து விட்டாரே, ஈழத்தில் கொடுமைகள் நடந்துகொண் டிருக்கிற சூழலில் நாம் உடனடியாகக் கூடி பேசியாக வேண்டுமே, ஏன் ரத்து செய்தார்’ என்று கேட்டேன். “பெரியார் திடலில் நடைபெற்றால் வைகோ வரமாட் டாராம்; தா. பாண்டியன் வரமாட்டாராம். ஏனென்றால் அவர்கள் அதிமுக கூட்டணியில் இருக்கிறார்கள்” என்ற செய்தியை அறிந்து நான் அதிர்ச்சியடைந்தேன்.
அதே நேரத்தில் அந்தக் கூட்டம் 12ஆம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டது. இடம் பின்னர் அறிவிக்கப் படும் என்றும் பழ.நெடுமாறன் சொல்லுகிறார். இந்தச் சூழலில், ஆசிரியர் வீரமணி அவர்கள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக மருத்துவர் இராமதாசு அவர்களும் நானும் சேர்ந்து பெரியார் திடலுக்குப் போனோம். பெரியார் திடலில் ஆசிரியர் வீரமணி அவர்களைச் சந்தித்து வருத்தம் தெரிவித்தோம். நமக்குப் பிரச்சனைதான் முக்கியம். எந்த இடம் என்பது முக்கியமல்ல. 12ஆம் தேதி நடக்கிற அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வோம். இந்தக் கூட்டம் ரத்தானதைப் பற்றி நீங்கள் கவலைப்படவேண்டாம் என்று அவரைச் சமாதானப்படுத்தி, அந்தக் கூட்டத்திற்கு நீங்கள் வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அதற்கு அவர், காங்கிரஸ் கட்சியோடு நட்புறவோடு இருப்பது தி.மு.க.தான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான் மத்திய அரசாங்கத்தோடு பேசக்கூடிய நிலையில் இருக்கிறார். அவரைப் பகைத்துக்கொண்டு ஒரு கூட்டம் போடுவது போல் அமையக்கூடாது. எனவே தகவலை அவருக்குச் சொல்லுவோம் என்று ஒரு ஆலோசனையைச் சொன்னார். அதற்கு பா.ம.க. நிறுவனரும் ஒப்புக்கொண்டார். அதன்படி பா.ம.க. தலைவர் கோ.க. மணி அவர்கள் தி.மு.க. தலைவரிடத்திலே சந்திப்புக்கு ஒப்புதல் வாங்கினார். தமிழகத்தில் நடைபெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவு 12ஆம் தேதி வெளியானது. தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. அதனால் கலைஞர் அவர்களின் வீட்டில் ஏராளமான கூட்டம். அதற்கிடையில் நானும் பாமக நிறுவனர் இராமதாஸ் அவர்களும், ஆசிரியர் கி. வீரமணி அவர்களும், பா.ம.க. தலைவர் கோ.க. மணி அவர்களும் சேர்ந்து முதல்வர் அவர்களைச் சந்தித்து ஈழத்தமிழர் விவகாரம் குறித்து பேசினோம். ‘அய்க்கிய முற்போக்குக் கூட்டணி’யின் குறைந்தப் பட்ச செயல் திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் சோனியாகாந்தி அம்மையாரிடத்தில் சொல்லி, உடனடியாகப் போரை நிறுத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று கூறிய போது, முதல்வர் அவர்கள் எடுத்த முயற்சிகளை யெல்லாம் சொன்னார்.
“என்னென்னவோ செய்தும் மத்திய அரசு செவிமடுக் கவில்லை. அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினோம்; போரை நிறுத்துங்கள் என்று தீர்மானம் போட்டோம்; சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டோம், மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம் எதையுமே மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. இனி என்னதான் செய்வது” என்று முதல்வர் கேட்டார். நான் வேண்டுமானால் உண்ணா விரதம் இருக்கட்டுமா என்று கேட்டார், உடனடியாக மறுதலித்து, “உங்கள் உடல்நிலைக்கு நீங்கள் உண்ணா விரதம் இருப்பது சரியில்லை” என்று மருத்துவர் இராம தாசும், ஆசிரியர் வீரமணியும் சொன்னார்கள். நான் வெளியே வந்து அவர்களிடத்தில் கேட்டேன், “அவரே உண்ணா விரதத்திற்கு ஒத்துக்கொள்கிறபோது நீங்கள் ஏன் மறுக்கிறீர்கள். அவர் ஒரு மணி நேரம் உட்கார்ந்தால்கூட, இந்திய அரசின் கவனத்தை ஈர்த்திருக்கலாமே, ஏன் நீங்கள் இருவரும் மறுதலித்தீர்கள்” என்று கேட்டேன்.
நாம் அனைவரும் சேர்ந்து வேறு போராட்டம் நடத்தலாம் என்று சொன்னார்கள். 12ஆம் தேதி முதல்வர் அவர் களைச் சந்தித்துவிட்டு வெளியே வந்ததும் ஒரு செய்தி வந்தது. 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் ரத்து என்று மறுபடியும் செய்தி வந்தது. 12ஆம் தேதி கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றதும் எனக்கு மீண்டும் அதிர்ச்சியேற் பட்டது. அன்று மாலையே நான் மீண்டும் மருத்துவர் இராமதாசு அவர்களைச் சந்தித்தேன். என்ன இது? இனம் அழிந்துகொண்டிருக்கிற வேளையில். ஏன் கூட்டம் மறுபடியும் இரத்து என்று கேட்டேன். நாம் மூன்று பேரும் முதல்வரைச் சந்தித்ததில் பழ. நெடுமாறன் அவர்களுக்கு உடன்பாடில்லை. அதனால் கூட்டம் ரத்து. நாம் முதல்வரைச் சந்தித்ததால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மதிமுகவும் சிபிஎம்மும் வராது. அந்தம்மா கோபித்துக்கொள்வார். இதுதான் காரணம் என்று தெரியவந்தது. 12ம் தேதியின் கூட்டம் ரத்து ஆனதற்கு “இனிமேல் அனைவரோடும் சேர்ந்து என்னால் பணியாற்ற முடியாது. நான் தனித்து சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்.
ஏற்கனவே ரயில் மறியல் போராட்டம் நடத்தினோம். மகளிர் விடுதலை முன்னணியின் சார்பில் உண்ணா விரதம் நடத்தினோம். தொழிலாளர் விடுதலை முன்னணியின் சார்பில் ஒரு நாள் முழுக்க தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினோம். மாணவர் அணியின் சார்பில் பேரணியும் பொதுக்கூட்டமும் நடத்தினோம். ‘தமிழீழ அங்கீகார மாநாடு’ நடத் தினோம். இனிமேல் ஒரே வழிதான். நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். நீங்கள் ஒத்துழைப்பதாக இருந்தால் நீங்கள் வரவேண்டாம். உங்கள் கட்சித் தலைவர் கோ.க. மணி அவர்கள் என்னோடு உட்காரட்டும்” என்று நான் சொன்னேன். சற்று யோசித்து விட்டு சரி மணியும் நீங்களும் உண்ணா நிலை அறப்போராட்டத்தில் உட்காருங்கள்; என்றைக்கு உட்கார்வது என்று கேட்டார். அதற்கு, 14ஆம் தேதியே உட்காருவோம் என்று சொன்னேன். பொங்கலன்று வேண்டாம் என்று மருத்துவர் சொன்னார். இரண்டே பேர்தான் உட்காரப் போகிறோம்; வேறு யாரும் தேவையில்லை. எனவே 14ஆம் தேதியே பொங்க லன்றே உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங் கலாம் என்று சொன்னேன். அதற்கு மீண்டும் அவர் சொன்னார், ‘பொங்கலன்று வேண்டாம்; பொங்கல் முடிந்து தொடங்கலாம்’ என்றார். பின்னர், சனவரி 17ம் தேதி போராட்டத்தைத் தொடங்குவது என்று முடிவானது. நானும் திரு.கோ.க.மணியும் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவெடுத்துவிட்டு வீட்டிற்குத் திரும்பினேன். அன்று மாலை 7 மணியளவிலே தொலைபேசியில் என்னோடு தொடர்புகொண்ட மருத்துவர் இராமதாசு அவர்கள், தம்பி, அந்தப் போராட்டம் வேண்டாம்; அதெல்லாம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரே ஒரு மணி நேரம், முதல்வர் உண்ணாவிரதம் இருந்தால் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்க முடியும். எனவே, நீங்கள் நேரடியாக முதல்வரைச் சந்தித்து முறையிடுங்கள். இல்லையென்றால், முதல்வருக்கு நெருக்கமாயிருக்கிற திட்டக் குழுத் தலைவர் நாகநாதன் அவர்களைச் சந்தித்து முறையிடுங்கள். முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதுதான் நல்லது என்று சொன்னார். உடனே நானும் தோழர் இரவிக்குமார் அவர்களும் நாகநாதன் அவர்களைச் சந்தித்து இரண்டரை மணி நேரம் அவருடன் பேசி எப்படியாவது கலைஞரை இதற்கு ஒப்புக்கொள்ள வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்தோம். அடுத்த நாள் 13ஆம் தேதி நான் நாகநாதனைத் தொடர்புகொண்டால், முதல்வரை இன்னும் சந்திக்க இயலவில்லை; அதைப்பற்றி ஏதும் சொல்லவில்லை என்று சொன்னார்.
அப்போது தான் நானே ஒரு முடிவுக்கு வந்தேன். இனி யாரோடும் நம்மால் இணைந்து வேலை செய்ய முடியாது. திட்ட மிட்டபடி உண்ணாநிலை அறப்போரைத் தொடங்கு வோம் என்று என்னுடன் இருந்த தம்பிகளை அழைத்து போராட்டத்திற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டேன். 14ந்தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி தாருங்கள் என்ற காவல்துறைக்கு கடிதம் கொடுத்தோம். அதற்கு அவர்கள் முதன்முறையாக 14ந்தேதி தமிழ் வருடப்பிறப்பு அறிவித்திருக் கிறார்கள். எனவே நீங்கள் 15ந்தேதிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். சரி என்று நாங்கள் ஒத்துக்கொண்டு 15ந்தேதிக்கு அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினோம். அனுமதி வழங்கினார்கள். ஆனால், அதில் அவர்கள் என்ன எழுதினார்களென்றால், “நீங்கள் சாகும்வரை உண்ணா விரதம் இருக்கப் போவதாக எங்களுக்குத் தகவல்கள் வருகின்றன. எனவே காலையில் 8 மணிக்குத் தொடங்கி, மாலை 5 மணிக்கு முடித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அப்புறப்படுத்தப் படுவீர்கள்” என்று எங்களுக்கு அனுமதி தந்தார். காவல்துறை இப்படிச் செய்வார்கள் என்று தெரிந்து நான் வேறு ஒரு தனியார் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன்.
தாம்பரம் தாண்டி, காட்டாங்கொளத்தூர் அருகே மறைமலை நகர் என்னுமிடத்தில் பரந்தவெளியாய் ஒரு காலியிடம் இருந்தது. இரவு இரண்டரை மணியளவில் அந்த இடத்தைத் தேர்வு செய்தோம். உடனிருந்த தம்பிகளிடத்தில் சொன்னேன். இந்த இடத்திற்கு நான் காலை 6 மணிக்கு வருவேன். ஒரு பந்தலை போடுங்கள். காவல்துறை கேட்டால் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. திருமாவளவன் கலந்துகொள்கிறார் என்று சொல்லுங்கள். வேறு எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு நான்கு மணிக்கு வீட்டுக்கு வந்து, ஏழு மணிக்கெல்லாம் பந்தலுக்குச் சென்று அமர்ந்தேன். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை அப்படித்தான் நான் தொடங்கினேன். உடனடியாக ஆசிரியர் கி.வீரமணி வந்தார். கலைஞர் சார்பாக ஆர்க்காடு வீராசாமி வந்தார். என்னிடத்திலே வந்து, நீங்கள் கூட்டணியிலே இருந்துகொண்டே இத்தகைய போராட்டங்களை நடத்துவது சரியா? உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு விட்டு தலைவரை வந்து பாருங்கள் என்று சொன்னார். சாகும்வரை உண்ணாவிரதமிருப்பது என்று முடிவெடுத்து விட்டேன்; என் போராட்டத்தைத் தொடரப்போகிறேன். கைது செய்தால் கைது செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.
அடுத்த நாள் பா.ம.க. நிறுவனர் இராமதாசு அவர்கள் வந்தார். அவரிடமும் நான் அப்படிச் சொல்லி அனுப்பி விட்டேன். ஏராளமான தலைவர்கள் வந்து வாழ்த்தி விட்டுச் சென்றார்கள். நான்கு நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடந்தது. இந்நிலையில், தமிழ்நாடு முழு வதிலும் விடுதலைச் சிறுத்தைகள் கைது செய்யப் பட்டனர். ஊடகங்களில் இயக்குநர் சீமான் கைது, கொளத்தூர் மணி கைது என்றுதான் செய்தி வந்தது. ஆனால் நான்கு நாள் உண்ணாநிலை அறப்போராட்டத்தில் விடுதலைச்சிறுத்தைகள் 316 பேர் கைதானார்கள். ‘பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. 10 பேருந்துகள் கொளுத்தப்பட்டன. திருமாவளவனின் சாகும்வரை உண்ணாவிரதத்தால் இளைஞர்கள் ஆங்காங்கே வன் முறையில் ஈடுபடுகிறார்கள் என்கிற செய்தி ஏடுகளில் வருகின்றன. காவல்துறையும் அமைச்சர்களும் கடுமையாக என்மீது கோபித்துக் கொண்டார்கள். இக்கட்டான ஒரு சூழலில் என்னை சமாதானப்படுத்த முயற்சித்தார்கள். நான் ஒப்புக்கொள்ளவில்லை.
கடைசியில் நான் யாருக்காக ஒப்புக்கொண்டேனென்றால், நான்காவது நாள் மருத்துவர் இராமதாசு அவர்கள் மேடைக்கு வந்தார். என்னுடன் இருந்த தோழர்கள், எல்லா தலைவர்களையும் தொலைபேசியில் அழைத்து, திருமாவளவன் நாங்கள் சொன்னால் கேட்க மறுக்கிறார்; நீங்கள் வந்து நேரிலே சொல்லுங்கள் என்று மருத்துவர் இராமதாசு அவர்களிடமும் பேசி அவரை வரவழைத்தார்கள். வன்முறை பெருகுகிறது. எல்லா இடங்களிலும் தோழர்கள் கைதாகிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருக்கிறபோது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தோழர்கள் 26 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறை கைது செய்கிறது. இன்றைக்கும் 6 பேர் உள்ளே இருக்கிறார்கள். நீதிமன்றத்திலே வாதாடி அந்த வழக்கை உடைத்து 20 பேரை வெளியே கொண்டு வந்துள்ளோம். கூட்டணிக் கட்சி என்பதற்காக எந்தச் சலுகையும் எனக்குக் காட்டப்படவில்லை. உண்ணாவிரதப் பந்தலிலேயே என்னைக் கைது செய்ய வேண்டும் என்பதற்கான எல்லா முஸ்தீபுகளும் நடந்து கொண்டிருந்தன. அந்த நேரத்திலே விடுதலைச்சிறுத்தைகள் பா.ம.க. நிறுவனரைத் தொடர்புகொண்டு அழைத்தனர். அவரும் மேடைக்கு வந்து எனக்கு ஒரு உத்தரவாதம் தந்தார். “தம்பி, நீங்கள் மட்டும் தனியாக போராட்டம் நடத்துவதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது. சேர்ந்து நடத்துவோம். பத்து நாள் தொடர் போராட்டம் நடத்துவோம். பால் வண்டியைத் தவிர, மருத்துவ வண்டியைத் தவிர, வேறு எந்த வண்டியும் இங்கே ஓடாது என்கிற நிலையை உருவாக்கு வோம். போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று மேடையிலே சொன்னார்.
பா.ம.க.வும், மதிமுகவும், சி.பி.ஐயும், நெடுமாறன் அவர்கள் தலைமையிலான தமிழர் தேசிய இயக்கமும் இன்னும் பல்வேறு தமிழ் இயக்கங்களெல்லாம் அடுத்த கட்டப் போராட்டத்திற்கு வருவார்கள் என்கிற நம்பிக்கை யிலே அந்த நேரத்தில் நான் உண்ணா விரதத்தை 18ந்தேதி இரவு 8 மணிக்கு நிறைவு செய்தேன். அப்படி நிறைவு செய்கிற போது ஒன்றரை மணி நேரம் நான் பேசினேன். அந்தப் பேச்சில்நான் சொன்னேன். “தமிழர்களுக்கு எதிராகச் செயல்படுகிற காங்கிரஸ் பேரியக்கத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் நாம் கெல்லி எறிய வேண்டும்” என்று சொன்னேன். எந்த நம்பிக்கையிலே...? இந்தக் கட்சிகளெல்லாம், ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்களெல்லாம் நம்மோடு சேர்ந்து களமாடும் என்ற நம்பிக்கையிலே நான் பேசினேன். குற்றம் சாட்டுகிறேன் என்று யாரும் எண்ணி விடக் கூடாது.
அடுத்த நாள் பா.ம.க. நடத்திய ஆர்ப்பாட்டம் ‘சென்ட்ரல்’ அருகே நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மருத்துவர் இராமதாசு அவர்கள், ‘என்னை வைத்துக் கொண்டு திருமாவளவன், காங்கிரசைக் கண்டித்துப் பேசியது கண்டனத்துக்குரியது, அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று பேசி அன்றைய மாலை ஏடுகளில் வந்துள்ளது. கடைசிவரை அவர்கள் காங்கிரஸ் அமைச் சரவையிலே இருந்து வெளியே வரவில்லை. கடைசி வரையில் மதிமுக உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்யவில்லை. தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜினாமா செய்ய முன்வந்தபோது, பா.ம.க. முன்வரவில்லை, மதிமுக முன்வரவில்லை, அதிமுக முன்வரவில்லை, கம்யூனிஸ்ட்கள் முன்வரவில்லை. தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கும் நிலையில் இங்கே இரண்டு உறுப் பினர்கள் இருந்து என்ன செய்யப் போகிறோம் என்று மதிமுக இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி வந்திருக்கிறோம். ஐந்து உறுப்பினர்களை வைத்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று பா.ம.க. இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். அதிமுகவின் மாநிலங்களவை உறுப் பினர்கள் இராஜினாமா செய்திருந்தால் தி.மு.க.வுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கும். கடைசி வரை யாரும் அதற்குத் தயாராக இல்லை.
விடுதலைச்சிறுத்தைகளின் சாகும் வரை உண்ணாநிலை அறப்போர் 4ஆம் நாளில் முடிந்தது. 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்தப் பட்டார்கள். ஓராண்டு காலத்திற்கு யாரும் வெளியில் வரமுடியாது. யாரும் பொங்கல் கொண்டாடவில்லை. 316 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலே கிடக் கிறார்கள். இந்த நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்து விட்டு அடுத்தக் கட்டப் போராட்டமாக என்ன செய்வது என்று நான் இவர்களையெல்லாம் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அந்தச் சூழலில், ‘பொங்கு தமிழ் அறக்கட்டளை’ அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசு அவர்களை தா. பாண்டியன் சந்திக்கிறார் என்று தகவல் கிடைக்கிறது. நானே மருத்துவர் அவர் களைத் தொடர்பு கொண்டு, “என்ன ஆலோசனைக் கூட்டம்? எங்களுக்கு ஏன் அழைப்பு இல்லை” என்று கேட்டேன். நீங்களும் வாருங்கள் பரவாயில்லை என்று என்னை அழைத்தார்.
நானாக வலிந்து போனேன். மதிமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் 2006ல் அதிமுக அணியில் சேர்ந்தது. அன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் 2 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், மதிமுக அதிமுக கூட்டணிக்கு வந்தது. எங்களை சேர்த்துக் கொள்ள முடியாது என்று தி.மு.க. சொல்லிவிட்ட காரணத்தினால் அதிமுக எங்களை வலிய அழைத்து சேர்த்துக் கொண்டது. 2006லே அதிமுகவோடு சேர்வதற்கு நாதியே இல்லை. கம்யூனிஸ்ட் இரண்டும் தி.மு.க. அணியில் இருந்தன. பா.ம.க. தி.மு.க. அணியில். மதிமுகவும் தி.மு.க. அணியில்பேசிக் கொண்டிருந்தது. காங்கிரஸ் தி.மு.க. அணியில் இருக்கிறது. யாருமே இல்லாத நிலையில் அதிமுக அணியில் எங்களை வலிய அழைத்துச் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா அம்மையார். பிறகு உள்ளாட்சித் தேர்தலில் எங்களை ஓரங்கட்டினார். ஒதுக்கினார். மிகப் பெரிய கொடுமை களைச் செய்தார். இழிவு செய்தார். அவமதித்தார். அதனால் நாங்கள் வெளியேறினோம்.
அதன் பிறகு தி.மு.க. அணியில் இணைந்தோம். தி.மு.க. அணியில் இணைந்த பிறகு மதிமுக அங்கே இருக்கிறது நாங்கள் இங்கே இருக்கிறோம். பா.ம.க., தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டது. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டதனால் பா.ம.க. அதிமுக அணிக்குப் போகிறது. மதிமுக ஏற்கனவே திமுக கூட்டணியில் 2 சட்டமன்ற இடங்கள் கிடைக்காத காரணத்தினால், அதிமுக அணிக்குப் போனது. கம்யூனிஸ்ட்கள் ஏன் அணி மாறினார்கள். அணுசக்தி ஒப்புந்தத்திலே மன்மோகன் கையெழுத்துப் போட்டதனால் அதனை எதிர்த்து தேசிய அளவிலே முரண்பாடு ஏற்பட்டு அதனால், காங்கிரசு ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்று, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதிலே வெற்றி பெற முடியாமல் தோல்வி கண்டு வேறு வழியில்லாமல் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தார்கள். அப்படித்தான் மாயாவதியைப் போய்ப் பார்த்தார்கள். விஜயகாந்தைப் பார்த்தார்கள். விஜயகாந்த் ஒத்துக் கொள்ளாத காரணத்தால் அம்மா ஜெயலலிதாவைப் போய்ப் பார்த்தார்கள். சி.பி.எம்.மும் சி.பி.ஐயும் ஈழத் தமிழர்களுக்காக அதிமுக அணிக்குப் போகவில்லை. அதிலும் ஓர் உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். தோழர்களே ஒரு குற்றச்சாட்டாக நான் இதைச் சொல்ல வில்லை. சி.பி.ஐ.யும் சிஎம்மும் இந்தக் காலகட்டம் வரையில் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்கள் இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள். சிங்கள ஆட்சியின் கீழ், ஒற்றை ஆட்சியின் கீழ் தமிழர் களுக்கு உரிமை வழங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்களின் நிலைப்பாடு. இதுதான் ஜெய லலிதா நிலைப்பாடு. இதுதான் வரதராஜன் நிலைப்பாடு. இதுதான் தா. பாண்டியன் நிலைப்பாடு. இதுதான் ராஜபக்சேயின் நிலைப்பாடு.
ஆனால் தனித் தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்ற கருத்துடையவன் நான். அந்தக் கருத்தை உடைய மதிமுக, அந்தக் கருத்தையுடைய பா.ம.க. ஆகிய இந்த மூன்று கட்சிகளாவது ஒன்று சேர வேண்டும். அந்தக் கருத்திலே உடன்பாடுள்ள அய்யா நெடுமாறன், அந்தக் கருத்திலே உடன்பாடுள்ள ஆசிரியர் வீரமணி நாங்களெல்லாம் ஒன்று சேர வேண்டும் என்று திரும்பத் திரும்பச் சொன்னவன் திருமாவளவன்தான். நான் முயற்சி எடுத்தேன். அதிமுக கூட்டணியில் இருக்கிற கட்சிகளோடு நான் சேர்ந்து பயணப்படு கிறேன்; தி.மு.க. எங்களை வெளியேற்றினாலும் பரவாயில்லை; என்னை கைது செய்தாலும் பரவா யில்லை; எங்களை ‘அம்போ’ என்று நடுத்தெருவில் விட்டாலும் பரவாயில்லை; என்ன பாதிப்பு ஏற்பட்டா லும் பரவாயில்லை; என்ன இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை; நட்டத்தைச் சந்திக்கத் தயார். எம் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அளவில் அடுக்கடுக்கான போராட்டங்களை நடத்திய ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம்.
இதுதான் அங்கே போராட்ட வெப்பத்தை உருவாக்கியது. திருமாவளவன் நடத்திய உண்ணா விரதத்தில் பங்கேற்றவன்தான் முத்துக்குமார். அந்தத் தாக்கத்தில்தான் அவன் தீக்குளிக்கிறான். யாரும் இதை மறுக்க முடியாது. பின்னர், 10க்கும் மேற்பட்டவர்கள் தீக்குளித்தார்கள். முத்துக்குமார் சாகிற நேரத்தில்கூட மருத்துவமனையில் மருத்து வர்கள் கேட்கிறார்கள். அப்போது அவன் சொன்ன வார்த்தை, திருமாவளவனுக்கும் தலைவர் பிரபா கரனுக்கும் என் சாவைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுச் செத்துப் போனான். அந்த பத்துப் பேரில் விடுதலைச் சிறுத்தைகள் மூன்று பேர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தோழர்களே, தி.மு.க. அணியிலே தொடர்ந்ததனால், ஈழத்தமிழர் விவகாரத்தை நான் கை விட்டுவிட்டேன் என்று பலர் கருதுகிற காரணத்தால் நான் இவற்றை யெல்லாம் சொல்கிறேன். தமிழ்நாட்டு அரசியலுக் குள்ளே என்னன்ன நிலைமைகள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று சொன்னவர் ஜெயலலிதா. நான்தான் தடை விதிக்கச் சொன்னேன் என்று தம்பட்டம் அடித்தவர் ஜெயலலிதா அம்மையார். அண்ணன் மேதகு பிரபாகரன் சர்வதேச ஊடகவியலாளர்களைச் சந்தித்த போது, தேவையேயில்லாமல், பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், தூக்கிலேற்ற வேண்டும் என்று சொன்னவர் ஜெயலலிதா. ஈழத்தைப் பற்றியும் விடுதலைப் புலிகளைப் பற்றியும் பேசியதற்காக அண்ணன் வைகோ அவர்களை 18 மாதங்கள் ‘பொடா’ வில் சிறைப்படுத்தியவர் ஜெயலலிதா. அய்யா பழ. நெடுமாறன் அவர்களை ‘பொடா’வில் உள்ளே தள்ளி யவர் ஜெயலலிதா. அண்மை நாள் வரையில்கூட திருமா வளவனை கைது செய் என்று சொன்னவர் ஜெயலலிதா.
ஈழம் பற்றி பேசக் கூடாது என்பது ராஜபக்சேவின் கருத்து. அதுவேதான் ஜெயலலிதாவின் கருத்து. அதனால் தான் நான் சொன்னேன், அதிமுக வேண்டாம்; திமுக அணி வேண்டாம்; பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை யிலே ஒரு தனி அணி கட்டுவோம் என்று சொன்னேன். ஈழத் தமிழர்களுக்காக ஒரு அணி. பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடர் கழகம், தமிழர் தேசிய இயக்கம் ஒன்று சேர்ந்து போராடுவோம், குரல் கொடுப்போம், தேர்தலைச் சந்திப்போம் என்று வற்புறுத் தினேன். ஜெயலலிதா எப்படி ஈழத் தமிழருக்கு ஆதரவானவராக இருக்க முடியும்? போராட்டம் நடத்தியிருக்கிறாரா? அறிக்கை வெளியிட்டிருக்கிறாரா? பிரதமரைச் சந்திக்க வந்தாரா? சட்டமன்றத் தீர்மானங்களை ஆதரித்து ஒரு நாளாவது பேசினாரா? என்றைக்காவது ஈழத்தை ஆதரித்துப் பேசியிருக் கிறாரா? இவ்வளவு துயரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன உலக கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒரே ஒரு போராட் டத்தையாவது அறிவிக்க முன்வந்தாரா? எதுவும் இல்லை.
ஆக, ஜெயலலிதாவும் சரியில்லை என்று முடிவு செய்து, நான் தோற்றால் பரவாயில்லை எனறு தனித்து நிற்க முடிவு செய்தோம். 2006லிருந்து திமுக கூட்டணியில் இருந்தோம். நான் இவர்களோடு சேர்ந்து விட்டதனால் திமுக கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா? இல்லையா? என்கிற தோற்றம் உருவானது. அப்போதுதான் நாங்கள் இருக்கிறோம் என்று தி.மு.க. தலைவர் அறிவித்தார். தமிழக அரசியலில் நான் ஒடுக்கப்பட்ட மக்களை, ஏழை எளிய மக்களை அணி திரட்டிப் போராடிக் கொண்டிருக் கிறேன். எனக்கு எந்தப் பின்புலமும் இல்லை. பெரிய முதலாளி களின் ஆதரவு கிடையாது. நிலச்சுவான்தார்களின் ஆதரவு கிடையாது. ஊடகங்களின் ஆதரவு கிடையாது. எந்த அரசியல் கட்சியும் என் வளர்ச்சியை விரும்பாது. இந்த நிலையிலே நான் தனித்து 1999ல் போட்டியிட்டுத் தோற்றேன். 2004லே போட்டியிட்டுத் தோற்றேன். இப்போது 2009லும் போட்டியிட்டுத் தோற்றுப் போனால் நாடாளு மன்றத்திலே பேசுவதற்கான வாய்ப்பு ஏற்படாது. இந்தச் சூழ்நிலையில் அவர்களின் அழைப்பை மறுதலிக்கக் கூடாது என்று நானும் கட்சியின் முன்னணி தலைவர் களெல்லாம் சேர்ந்து முடிவெடுத்துத்தான் தி.மு.க. அணியிலேயே தொடர்ந்தோம். அந்த நேரத்தில் எல்லோரும் அதிக நாட்கள் பிரச்சாரம் செய்தார்கள். நான் ஒரு வாரமே பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.
ஒரு நாள் கலைஞரிடத்திலே நான் சென்று, ஈழத்திலே நடந்து கொண்டிருக்கிற கொடுமைகளைப் பார்த்துக் கொண்டு, இங்கே என்னால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்த போதே எனக்கு அழுகை வந்துவிட்டது. கலைஞர் அவர்கள் என்னை தோளிலே தட்டிகொடுத்து ஆறுதல் சொன்னார், “விடுதலைப் புலிகள் என்றைக்குமே வீரமான வர்கள். அவர்கள் போராட்டம் சாதாரணமானதல்ல. இன்றைக்குப் பின்னடைவைச் சந்தித்து விட்டது என் பதற்காக நீங்கள் சோர்வடைந்து விடவேண்டாம். தேர்தலைச் சந்தியுங்கள். பார்ப்போம்” என்று அவர் என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். சோனியா காந்தி கலந்து கொண்ட கூட்டத்தில்கூட முதலில் நான் கலந்து கொள்வதில்லை என்பதுதான் முடிவு. பிறகு நான் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில்கூட ஈழத் தமிழர் களை நீங்கள் காப்பாற்ற வேண்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுத்தேன். ஈழத்தைப் பற்றி நான் பேசவே கூடாது என்றுதான் தடுத்தார்கள். ஆனால் நான் மீறி பேசினேன்.
அதன் பிறகு தேர்தலில் என்னை தோற்கடிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சியும் அதிமுகவும் இணைந்து செய்தது. நான் கேட்டேன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி யிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் பொன்னு சாமி வெற்றி பெற்றால் ஈழத்தைப் பற்றிப் பேசுவாரா? திருமாவளவன் வெற்றி பெற்றால் ஈழத்தைப் பற்றிப் பேசுவானா? யார் உங்களுக்குத் தேவை என்று சிந்தித்து வாக்களியுங்கள் என்றுதான் நான் கேட்டேன். தேர்தலில் வெற்றி பெற்றேன்.
ஜெயலலிதாவுடன் சேர்ந்து இந்த தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பது எப்படி ஞாயமானது என்றுதான் இன்றைக்கும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா ஈழ விடு தலைக்கு எதிரானவர்; விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர்; விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கச் சொன்னவர்; பிரபாகரனைக் கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்று சொன்ன வர்; புலிகளை வன்முறையாளர்கள், பயங்கரவாதிகள் என்று சொன்னவர்; அப்படிப்பட்டவருடன் ஈழத்தை முன்னிறுத்தி சேர முடியாது என்று அழுத்தமாக கூறிவிட்டேன்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்துக்கு ‘ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்று பெயர் வைக்கலாமென்று சொன்னேன். ஆனால் ‘இலங் கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்று பெயரிடப் பட்டது. ஏனென்றால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ‘ஈழம்’ என்ற சொல்லில் உடன்பாடு இல்லை. ஈழத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் வைத்தால் தோழர் தா. பாண்டியன் வரமாட்டார் எனக் கருதி ‘இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்’ என்று பெயர் வைத்தார்கள். இப்படிப்பட்ட முரண் பாடுகளுக்கிடையிலேதான் நாங்கள் தனித்து விடப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தி.மு.க. அணியில் தொடர்வதென முடிவெடுத்தோம்.
எந்த நிலையிலும் விடுதலைச் சிறுத்தைகளோ திருமாவளவனோ ஈழத் தமிழர்களுக்கு விடுதலை வேண்டும் என்கிற நிலையிலிருந்து மாறமாட்டோம். கடந்த சூன் 8ந்தேதி என் முதல் பேச்சிலேயே இந்திய அரசு மாபெரும் துரோகத்தைச் செய்துவிட்டது என்று குறிப்பிட்டேன். நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத் திருக்கிறார் வழக்கறிஞர் உருத்திரகுமாரன். தாயகம், தமிழ்த்தேசியம், தன்னாட்சியுடன் கூடிய ஒரு நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டி ருந்தார். இதனையெல்லாம் படித்துப் பார்க்கிறபோது ஒரே ஒரு செய்தியை மட்டும் இங்கே சொல்லி விட்டு விடைபெறலாம் என்று நினைக்கிறேன்.
தொடக்கத்திலேயே நான் ஒன்றை சொன்னேன். இந்தியா எந்தச் சூழ்நிலையிலும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்தியா என்பதைவிட இந்திய அரசு என்று நான் சொல்லுகிறேன். வாஜ்பாயா, சோனியா காந்தியா என்று நான்சொல்லவில்லை. வாஜ்பாய், பாரதிய ஜனதா இந்த நாட்டை ஆண்ட போது ஈழத்தமிழர்ச் சிக்கல் இருந்தது. வாஜ்பாய் இந்துக்களைப் பாதுகாக்கக் கூடிய கட்சியை நடத்துகிறார். தமிழீழத்திலே கொல்லப்படுகிறவர்கள் யார்? கிறித்தவர்களா? முஸ்லிம்களா? தமிழீழத்திலே கொல்லப்படுகிறவர்கள் இந்துக்கள்தானே. ஆகவே, அவர் ஆட்சியிலே இருந்தபோது என், இந்துச் சமூகம் அழிக்கப்படுகிறதே என்று உதவ முன் வந்தாரா? தனிஈழத்தை ஆதரித்தாரா? ஈழத்தில் இடிக் கப்படுகின்ற கோவில் இந்துக் கோவில்தானே.
இந்தியாவில் ஒரு கோவில் இடிக்கப்பட்டால் எல்லோரும் போராட்டம் நடத்துகிறார்களே. ஈழத் திலே எத்தனை கோவில்கள் இடிந்தன. குண்டுகள் போடப்பட்டன. என்றைக்காவது பாரதிய ஜனதா கட்சிக்காரன் வந்து ஏன் இடிக்கிறாய்? என்று கண்டித்ததுண்டா? இல்லை, பாரதிய ஜனதாவாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி இந்திய அரசின் கொள்கை தமிழீழம் கூடாது என்பதுதான். ஏனென்றால் தென்கிழக்காசிய நாடு களின் கூட்டமைப்பிலே ஓர் அங்கம், சிங்களவர் களும் இந்தியர்களும் அதனடிப்படையிலே நண் பர்கள். அவர்களுக்கிடையிலே ஒப்பந்தம். அவர் களிடத்திலே உறவு. அவர்களிடத்திலே உள்ள நட்புறவை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டமைப்பு தான் ‘சார்க்’. ‘சார்க்’ நாடுகளின் கூட்டமைப்பிலே இவர்கள் நண்பர்களாயிருக்கிறார்கள். இரண்டாவது பனிப்போர்.
தெற்காசியப் பிராந்தியத்திலே வல்லரசு எது? சீனாவா, இந்தியாவா? இன்றைக்கு சீனா, பாகிஸ் தானுக்கு உதவுவதன் மூலம் மேற்கே காலூன்றி விட்டான். நேபாளத்துக்கு உதவுவதன் மூலம் வடக்கே காலூன்றி விட்டான். பங்களாதேசுக்கு உதவுகிறான். மியான்மருக்கு உதவுவதன் மூலம் அங்கே காலூன்றியிருக்கிறான். இன்றைக்கு திருகோணமலைக்குப் பக்கத்திலே இடத்தை வாங்கிப் போட்டிருக்கிறான். அங்கே இராணுவத் தளத்தை அமைக்கப் போகிறான். ஒட்டு மொத் தத்திலே இந்தியாவைச் சுற்றி வளைத்திருக்கிறது சீனா. சீனாவின் தாக்குதலிலிருந்து இந்தியாவை பாதுகாக்க வேண்டுமானால் பாகிஸ்தானோடு நட்றவு கொள்ள முடியாது. பங்களாதேசோடு நட்புறவு கொள்ள முடி யாது. நண்பனாக இருக்கிற ஒரே நாடு இன்றைக்கு சிங்கள நாடுதான். இதனைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. இது இந்தியாவின் நோக்கம். அவன் வேண்டாம் என்றாலும் இவன் வலிந்து போய் உதவுகிறான். அவன் தேவையில்லை என்றாலும் இவன் போய் உதவியைத் திணிக் கிறான். ஏனென்றால் அவன் நட்பு அவனுக்குத் தேவை. பாகிஸ்தான் உதவுகிறது, சீனா உதவுகிறது, இஸ்ரேல் விமானம் தருகிறது, பல்வேறு நாடுகள் உதவுகின்றன. இப்படிப்பட்ட உதவிகளெல்லாம் இருக்கிற போது, இந்தியாவின் உதவி அவனுக்குத் தேவை யில்லை. ஆனால் இந்தியா உதவுகிறது. ஏனென்றால் தெற்கே சீனா காலூன்ற அனுமதிக்கப் போவதில்லை. இதுதான் இந்திய அரசின் வெளியுறவு. இந்தியாவின் பிரதமராக வாஜ்பாய் இருந்தாலும் இதுதான், சோனியா இருந்தாலும் இதுதான். நாளைக்கு ராகுல்காந்தி வந்தாலும் இதுதான். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின்படி தமிழீழம் அமையக் கூடாது என்பதேயாகும்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னாள் ஒரு கூட்டத்திலே சொன்னேன், விடுதலைப் புலிகள் போரிலே வென்று தமிழீழத்தை வென்றால் கூட, விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடத்தி அந்தத் தமிழீழத்தைப்பிடுங்கி சிங்கள வனிடம் ஒப்படைக்கும் இந்தியா. ஈழவிடுதலையை அனுமதிக்காது. ஏனென்றால் இந்திய அரசின் வெளி யுறவுக் கொள்கைப்படி இலங்கையை தன்னுடைய கட்டுப் பாட்டிலே வைத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பாகிஸ்தானை எதிர்த்து இந்தியாவுக்கு ஆதரவாக ஐ.நா. பேரவையில் நடந்த ஒரு கூட்டத்தில் சிங்களவன் ஆதரவுக் கருத்துச் சொன்னதனால் கச்சத் தீவு அவனுக்கு அளிக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றுத்தான் கச்சத் தீவைக் கொடுத்திருக்க வேண்டும். இப்போது நான் நாடாளுமன்றக் கூட்டத் திலேயே சொன்னேன். பண்டிட் ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, அணிசேராக் கொள்கை கடைப் பிடிக்கப்பட்டது. இந்தியா திருமாவளவன் போராடினாலும் மசியாது, புலம்பெயர்ந்த தமிழர்கள் போராடினாலும் மசியாது; யார் பேச்சைக் கேட்கும் என்றால், அமெரிக்கா பேச்சைக் கேட்கும். அமெரிக்கா பேச்சைக் கேட்டால் இந்தியா இறங்கி வரும். அமெரிக்காவும் இந்தியாவும் அப்படிப்பட்ட நெருக்கமனவர்களாக மாறிவிட்டார்கள். ப்ரோ ரஷ்யா என்பது மாறிவிட்டது. ப்ரோ அமெரிக்கா என்பது வலுப்பெற்று விட்டது. இந்த நிலையிலே அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, எல்லா வகையான உறவுகளும் அமெரிக்காவோடு ஏற்படும். பொருளாதார உறவுகள், அரசியல் உறவுகள், சமூக உறவுகள்... ஆகவேதான் ‘அல்-கொய்தா’ இயக்கத்தை பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலிலே சேர்த்த அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத் தையும் சேர்த்தது. அன்றைக்கே புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் எழுச்சி பெற்று அந்தத் தடையை நீக்கச் செய்திருக்க வேண்டும். பெரும் போராட்டத்தினால் அதனை நீக்க வேண்டும். ‘அல்கொய்தா’ மக்கள் இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் இயக்கம். ‘அல்கொய்தா’ ஒரு விடுதலை இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு விடுதலை இயக்கம். ‘அல்கொய்தா’ ஒரு இராணுவ இயக்கமா? விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு அரசாங்கத்தையை நடத்திக் கொண்டிருந்த, தமிழீழ அரசு நடத்திக் கொண்டிருந்த ஒரு இயக்கம். அல்கொய்தா சேர்த்த பயங்கரவாதிகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் சேர்த்து விட்டார்கள் சிங்களவர்கள். அதற்கு இந்தியா போன்ற நாடுகளும் துணை போயின. இரட்டை கோபுரம் அமெரிக் காவிலே இடிக்கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்வதேசச் சூழல் பயங்கரவாத இயக்கங்களை ஒடுக்க வேண்டுமென்று ஆதரவு நாடுகளையெல்லாம் திரட்டி ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர்.
உலகத்தில் இன்றைக்கு இரண்டே இரண்டு பேர்தான் அமெரிக்காவின் பார்வையில் பயங்கரவாதிகள். ஒருவர் முஸ்லிம், மற்றொருவர் ஈழத் தமிழன். முஸ்லிமும் ஈழத் தமிழனும் உலகில் எந்த ஒரு விமான நிலையத்திலும் எளிதான முறையில் வெளியேறிவிட முடியாது. அமெரிக் காவின் பார்வையில் முஸ்லிம் பயங்கரவாதி. அமெரிக்கா வின் பார்வையில் ஈழத்தமிழன் பயங்கரவாதி. ஒவ்வொரு ஈழத் தமிழனும் விடுதலைப்புலி. எனவே பயங்கரவாத எதிர்ப்பு என்கிற அடிப்படையில் விடுதலைப் புலி களுக்கு எதிராக காய் நகர்த்துகிறார்கள். அதிலே சிங்களவன் வெற்றி பெற்று இன்றைக்கு நம்முடைய இராணுவ பலத்தை பலவீனம் செய்திருக்கிறான்.
இந்த நிலையில்தான் சர்வதேச அளவிலான இந்த அரசியலை கணக்கில் கொண்டு அண்ணன் உருத்திர குமாரன் போன்றவர்கள் இந்த முயற்சியிலே ஈடுபடு கிறார்கள். அதைத்தான் என்னால் உணர்ந்துகொள்ள முடிகிறது. சர்வதேச அரசியல் சூழலை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது. இராஜபக்சே மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை. அல்லது இந்தியா ஆதரவு தெரிவித்ததனால் மட்டுமே இராஜபக்சே வெற்றி பெற்றுவிடவில்லை. சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று வெற்றிபெற்றுள்ளான்.
அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் இடிக் கப்பட்ட பிறகு ஏற்பட்ட சர்வதேசச் சூழல் நமக்கு எதிராக அமைந்துவிட்டது. சர்வதேச பயங்கர வாதத்திற்கு எதிரான நிலையை அமெரிக்கன் கையிலெடுத்தான். இந்நிலையில், சிங்களவர்கள் சாதுர்யமாக விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதி களின் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். இது வரையில் நாம் சர்வதேச அளவிலே பயங்கர வாதிகள் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகளை நீக்க வேண்டும் என்று வலுத்த குரலை எழுப் பவில்லை. உரத்த குரலை எழுப்பவில்லை. இப் போராட்டம் இனி அப்படித்தான் இருக்க வேண்டும். ஈழப் போர் இன்னும் முற்றுப்பெறவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளால்தான் ஈழப் போரில் வெற்றி பெற முடியும். நான்காம் கட்டப் போர் முடிந்து விட்டது.
இனி ஐந்தாம்கட்டப் போர் வெடிக்கும். அது ஆயுதமேந்திய போரா? அல்லது ஆயுதமில்லாத போரா என்பது வேறு. அதைத்தான் நாம் மக்களிடத்தில் சொல்ல வேண்டும். புலம்பெயர்ந்த தமிழ் மக்களை அதற்கு ஏற்ப நாம் தயார் படுத்த வேண்டும். இயக்கம் அழிந்து விட்டது என்று யாரும் சோர்ந்து விடக்கூடாது. விடுதலை இயக்கம் வரலாற்றில் நிலைக்கும். எத்தனையோ இயக்கங்கள் அழிக்கப்பட்டன. இதே இந்தியா ஜே.வி.பி.யை அழிப்பதற்கு இராணுவத்தை அனுப்பியதா இல்லையா? முற்றிலும் அழித்துவிட்டோம் என்று இந்திய இராணுவம் வெளியே வந்தது. இன்றைக்கும் ஜே.வி.பி. உள்ளது. ஆனால் அது ஒரு இனவெறி அமைப்பு. இன்றைக்கு நாடாளுமன்ற ஜனநாய கத்திற்கு மாறிவிட்டது வேறு.
சிங்களவன் ஒரு அரசாக இருக்கிற காரணத் தினால், அவனிடம் அதிகாரம் இருக்கிற காரணத் தினால் மற்ற அரசுகளை ஆட்சியாளர்களை எளிதாகச் சந்தித்து அவனுடைய கருத்துகளை மட்டுமே சொல்லி ஆதரவு திரட்ட முடிந்தது. நம்மால் முடியவில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போவதற்கே நாம் படாதபாடு பட வேண்டியிருக்கிறது. நம்மால் எப்படி ஜெர் மனியின் குடியரசுத் தலைவரைப் பார்க்க முடியும்? நம்மால் எப்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் தலை வரைப் பார்க்க முடியும்? அந்த இரட்டைக்கோபுரம் இடிக்கப்பட்ட பிறகு அமெரிக்கா உலக நாடுகளை யெல்லாம் ஒருங்கிணைத்து பயங்கரவாதத்திற்கு எதிராக நடத்திய அந்தச் சூழல் சிங்களவர்களுக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. அவனுக்குச் சாத கமாகப் பல நாடுகளைப் பேச வைத்துவிட்டான்.
இதைப் பற்றி மனித உரிமை அமைப்புகளில் கூட பேசவே கூடாது என்று ‘வீட்டோ பவரை’ப் பயன்படுத்தி திரும்பத் திரும்பத் தடை பெற்று விட்டான். எல்லாம் முடிந்து விட்டது என்று ராஜபக்சே சொன்ன பிறகுதான் பான் கீ மூன் போனார். ஏன் மனிதநேய அடிப்படையில் ஜனவரிமாதம் போயிருக்கலாமே, மே அல்லது ஏப்ரல் மாதமாவது போயிருக்கலாமே. இந்தி யாவுக்குத்தான் மனிதநேயம் இல்லை, தாயுள்ளம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஏன் இல்லாமல் போனது. நார்வே நாடு ஏன் தலையிடாமல் போனது. ஏன் அமெரிக்காவேடிக்கை பார்த்தது. ஏன் ஐ.நா. பேரவை வேடிக்கை பார்த்தது. தயவுகூர்ந்து இதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்கு இது ஒரு சவால். சர்வதேச அளவில் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு விடுதலை இயக்கம். அந்த இயக்கத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். அதன் மீதான தடையை நீக்க வேண்டும். எமக்கான தீர்வு தமிழ் ஈழம்தான்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் உரிமை பெறுவதல்ல. தமிழீழம்தான் தீர்வு என்கிற கருத்தினை முன்னெடுத்துச் செல்லுகிற முயற்சியில் புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகம் ஈடுபட வேண்டும். ஈழப்போர் முற்றுப்பெறவில்லை. ஈழம் சிதைந்துவிட வில்லை. நாம் உறைந்து கிடக்கிறோம். சிதைந்துவிட வில்லை. விடுதலைப் போரிலே மக்கள் பலியாவதும், போராளிகள் பலியாவது, தளபதிகள் பலியாவதும் இயல்பான ஒன்றுதான். தவிர்க்க முடியாது. சாவை எதிர்பார்த்துதான் களமாடுகிறார்கள் போராளிகள். சாவு வந்துவிடுமே என்று அஞ்சியிருந்தால் சனவரி 2ஆம் தேதியே வீட்டிற்கு ஓடியிருப்பார்கள். உலகத்தில் இப்படியொரு மாவீரன் இனி பிறக்க மாட்டான். வரலாற்றில் பிறக்கவில்லை.
அண்ணன் பிரபாகரன் அவர்கள்தான் இன்றைக்கு ஒப்பிட முடியாத, ஈடில்லாத மகத்தான மாவீரன். உலக நாடுகளே படையினைத் திரட்டி வா, உன்னுடன் நான் மோதத் தயார் என்று ஆறு மாத காலம் தொடர்ந்து போராடிய பெரும் வீரன். மாவீரன் தலைவர் மேதகு பிரபாகரன். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இருக்கிறது. அழியவில்லை. ஈழ விடுதலைப் போர் தொடரும். முற்றுப்பெறவில்லை. அதற்கான களப்பணிகளை முழுமூச்சாகத் தொடங்குவோம். அந்தப் பணிகளை முன்னெடுப்போம். ஈழம்வெல்லும் அதனைக் காலம் சொல்லும் என்று கூறி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்.