ஆகத்து 17: தமிழர் எழுச்சி நாள்

தலைவர்கள் - தொண்டர்கள் வாழ்த்து!

 

ஆகத்து 17 என்றாலே விடுதலைச்சிறுத்தைகள் சென்னையை நோக்கி பயணிப்பார்கள். தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்த நாள் மட்டுமல்ல; தலித்து களை தலைநிமிரவைத்து தமிழர்களாக அரசியலில் உயர்த்திய நாள். ஆகவேதான் ஆகத்து 17ஆம் நாளை தமிழர் எழுச்சி நாளாக  விடுதலைச்சிறுத்தைகள் தன்னெழுச்சியாக சேரி சேரியாகக் கொண்டாடி வருகின்றனர். இவ்வாண்டு பிறந்த நாள் இல்லையென்றாலும் சிறுத்தைகள் ஆங்காங்கே  வெடிவெடித்தும் இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர். இந்தக்  கொண்டாட்டம் முதல் நாள் இரவிலிருந்தே தொடங்கியது.

எழுச்சித்தமிழரின் வாழ்க்கையை விவரிக்கும்  பாடலான ‘கால் மொளச்ச நெருப்பு’ ஒலி நாடாவில் இடம் பெற்ற “ஆதிப்பரம்பரை சாதி சனங்களே சொந்தக்கதை கேளுங்க” என்கிற பாடலை காட்சி வடிவமாக, குறும் படமாக தயாரிக்கப்பட்டது. இயக்குநர் முகிலன் இயக்கத்தில் குடந்தை அரசன் தயாரிப்பு உதவியில், தாயாரிக்கப்பட்ட அந்த ஒளி-ஒலிப் படத்திற்கு ‘புரட்சி நெருப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி ஆகத்து 16 நள்ளிரவு 12 மணிக்கு ஏ.வி.எம். படப்பிடிப்புத் தளத்திலுள்ள திரையரங்கில் திரையிட ஒழுங் குபடுத்தியிருந்தனர் திரைப்படத் தயாரிப்புக் குழுவினர். எழுச்சித்தமிழர் வந்ததும் திரைப் படக் குழுவினர் கொண்டு வந்திருந்த ‘கேக்’கை  வெட்டி ‘எழுச்சித் தமிழர் வாழ்க’ என்று முழக்கமிட்டுப்  பிறந்த நாளைக் கொண் டாடினர். பின்னர் சேலம் சட்டக்கல்லூரி மாணவர்கள் பார்த்திபன், மகேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்திருந்த 48 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டி மாணவர் களுக்கு ஊட்டினார் எழுச்சித்தமிழர். மாணவர் களின் ‘வாழ்க முழக்கம்’ திரையரங்கையே அதிர வைத்தது.

பின்னர் ‘புரட்சி நெருப்பு’ ஒளிபரப்பப் பட்டது. சுமார் 35 நிமிடம் ஓடிய  அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் முகிலன் சிறப்பாகப் படமாக்கியிருந்தார்.

முன்னதாக ஆவணக்காப்பகத்தின் மாநிலத் துணைச்செயலாளர் தமிழ்ஒளி, தியாகராயர் நகர் பகுதிச் செயலாளர் ஆதிவெற்றிச் செல்வன், குட்டி ஆகியோர் ஒருங்கிணைப்பில் இரவு 10 மணியளவில் புதூரில் நடைபெற்ற கபாடி போட்டி நிகழ்வுக்கு எழுச்சித்தமிழர் வந்து கலந்து கொண்டார். போட்டியில் வெற்றிபெற்ற  அணிகளுக்கு எழுச்சித்தமிழர் பரிசுகள் வழங்கினார். பின்னர், எழுச்சித் தமிழரின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக கேக் வெட்டியும் இணைப்புகள் கொடுத்தும் சிறுத்தைகள் கொண்டாடினர்.

ஆகத்து 17 காலை 8 மணிக்கெல்லாம் வேளச்சேரி அலுவலகத்தில் தாங்கள்  கொண்டு வந்த கேக்கை எழுச்சித்தமிழரை வெட்டச் செய்து பிறந்த நாள் விழாவை சிறுத்தைகள் கொண்டாடினர். வந்திருந்த தோழர்கள் மாலை அணிவித்தும் பொன்னாடைகள் போர்த்தியும், பூங்கொத்துகளைக் கொடுத்தும் வாழ்த்தினர்.

பின்னர், தென்சென்னை மாவட்டத்தின் சார்பாக மாவட்டத்துணைசெயலாளர்கள் ஆ.விடுதலைச்செல்வன், து.கா.பகலவன், சாரநாத் ஆகியோர் சாந்தோம் ஆதரவற்றோர் பள்ளியில் ஆதரவற்ற மாணவ, மாணவி களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்வை  ஒருங்கிணைத்திருந்தனர்.

கடும் மழையில் எழுச்சித்தமிழர் சாந்தோம் பள்ளிக்கு வந்திறங்கினார். அங்கு காலை உணவை ஆதரவற்ற மாணவ, மாணவி களுக்கு வழங்கி, அவர்களுடனே தானும் சாப்பிட்டார். பின்னர் அங்கிருந்து அடையாறு புற்றுநோய் நிறுவனத்திற்குச் சென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.

இதையடுத்து புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்திற்குச் சென்று புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர், அண்ணாசாலையில் உள்ள பெருந் தலைவர் காமராசர் சிலைக்கும், பெரியார் திடலில் உள்ள பகுத்தறிவுப் பகலவன் பெரியார் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சித் தமிழருக்கு பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறினார். இதையடுத்து முதல்வர் கலைஞர் அவர்களை மாலை 5 மணியளவில் சந்தித்துப் பிறந்த நாள் வாழ்த்துப் பெற்றார்.

சமூக விடுதலைக்கான போராட்டத்தில் கால் நூற்றாண்டைக் கடக்கும் எழுச்சித்தமிழர் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கியிருக்கிறார் என்றால் அதை யாரும் மறுப்பதற் கில்லை. அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகம் அரசியல் - சமூக, பொருளாதாரத் தளத்தில் வீறுகொண்டு எழுந்திருக்கிறது என்றால் ‘தொல்.திருமாவளவன்’ என்கிற ஒற்றைப் போராளியால்தான். அப்போராளியின் களப்போராட்டம் தொடரும்! தமிழர்கள் விடுதலை மலரும்!                

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann