இந்திய-சிங்களப் பேராதிக்கவாதிகளை அதிரவைத்த

சிறுத்தைகளின்

‘எழும் தமிழ் ஈழம்’ மாநாடு

விடுதலை ஒன்றையே உயிர் மூச்சாகவும் செயல் வடிவமாகவும் கொண்டு களமாடி வரும் எழுச்சித்தமிழரின் பிறந்தநாளை விடுதலைச்சிறுத்தைகள் ஆண்டுதோறும் தமிழர் எழுச்சி நாளாக எழுச்சியோடு கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டும் ‘தமிழர் எழுச்சி நாள்’ விழாவைக் கொண்டாட சிறுத்தைகள் தயாராகிக்கொண்டிருக்கும்போதுதான், ஈழத்து நெருப்பு எழுச்சித்தமிழரைப் பொசுக்கியது. “எம் மக்கள் படும் துயரங்களுக்கிடையில் எனக்குப் பிறந்த நாள் கொண்டாட்டமா?” என்று பிறந்த நாளைப் புறக்கணித்துவிட்டு ‘எழும் தமிழ் ஈழம்’ எனும் இன விடுதலை அரசியல் மாநாட்டை அறிவித்தார்.

2007ஆம் ஆண்டு சிங்கள வெறியர்கள் நடத்திய வான் தாக்குதலில் செஞ்சோலைச் சிறுமிகள் கொல்லப்பட்டபோதும், தனது பிறந்த நாளைக் கொண்டாடாமல் உண்ணா நிலையை மேற்கொண்டு தன்னையே வருத்திக்கொண்டார். அந்த உணர்வையே இந்த 2009ஆம் ஆண்டும் எழுச்சித்தமிழர் வெளிப்படுத்தினார். சிங்களக் காடையர் களின் காட்டுமிராண் டித்தனமான செயல் பாடுகளை உலக நாடுகள் கண்டிக்க முன்வராத சூழலில், தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகளை சிங்களப் பேரினவாதத் திற்கு எதிராக போருக்குத் தயார்படுத்தி வருகிறார் எழுச்சித்தமிழர். அந்த வகையில் தான் ‘எழும் தமிழ் ஈழம்’ மாநாடு.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ‘எழும் தமிழ் ஈழம்’ மாநாட்டு விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், பரப்புரைகள் என தமிழகத்தையே விடுதலைச்சிறுத்தைகள் கலக்கினர். மாநாட்டு நாள் நெருங்க நெருங்க பாதாகைகளும் அதிகமாகிக் கொண்டிருந்தன. அந்தப் பாதாகைகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் படங்களும் எழுச்சித்தமிழர் படங்களும் அதிகமாகிக் கொண்டிருந்தன. இவை பெரு நகரங்களிலிருந்து குக்கிராமங்கள் வரை காணப்பட்டன.

நான்காம் கட்ட ஈழப் போரை நயவஞ்சகமாக இந்திய - இலங்கைப் படைகள் முடிவுக்குக் கொண்டு வந்த பிறகு தமிழகத்தில் நடக்கும் முதல் மாநாடு சிறுத்தைகளின் மாநாடுதான். ஆகத்து 16ஆம் நாளே தமிழகத்தின் கடைக்கோடியிலிருந்து சிறுத்தைகள் மாநாட்டுக்கு வந்த வண்ணம் இருந்தனர். மழை விழுந்து கொண்டிருந்த போதிலும் மாநாட்டுக்கான பயணத்தை யாரும் நிறுத்தவில்லை. ஆனால், வழக்கம்போல் உளவுத்துறையும் காவல்துறையும் மாநாட்டுக்கு இடைஞ்சல் செய்ய ஆரம்பித்தன.

சென்னை இராதாகிருஷ்ணன் சாலையில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சுவர் விளம்பரங்கள் அழிக்கப் பட்டன. சென்னை முழுக்க ‘எழும் தமிழ் ஈழம்’ என்று விளம்பரம் செய்யப்பட்ட பாதாகைகளில் ‘ஈழம்’ என்கிற வார்த்தையை அழிக்கச் சொல்லி போலீசார் நிர்ப்பந்தம் செய்தனர். மேதகு பிரபா கரன் படங்களையும் ஆங்காங்கே காவல் துறையே அகற்றி இறக்கிவைத்தனர். இதனை எதிர்த்து மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் வீரமுத்து, வடசென்னை மாவட்டச் செயலாளர் வழக் கறிஞர் கபிலன் ஆகியோர்   சிறுத்தைகளைத் திரட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னரே காவல்துறை பின்வாங்க ஆரம்பித்தது.

இந்திய உளவுத்துறை தமிழகம் முழுக்க ‘வீடியோ கவரேஜ்’ செய்ததில் எங்கு பார்த்தாலும் ‘பிரபாகரன்’ படங்களும் ‘ஈழம்’ என்கிற பெயரும் இருந்ததாம். அதனால்தான் இந்தக் கெடுபிடியாம். ஆனால், விடுதலைச்சிறுத்தைகள் இந்த மாதிரி நெருக்கடிகளை எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதில்லை; இப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை. காரணம், விடுதலைச்சிறுத்தை களின் தலைவர் அரசியல் தலைவரல்ல; போராளித் தலைவன்! நெருக்கடி நெருப்பில் நீந்தக் கற்றுக் கொடுத்த அந்தப் போராளித் தலைவனின் ஆணைக்குக் கட்டுப்பட்டு கட்டுப்பாட்டுடன் சிறுத்தைகள் மாநாட்டுக்குக் குவிந்தனர்.

ஆகத்து 17ஆம் நாள் காலையிலிருந்தே மழை விட்டபாடில்லை. ஆனால் சிறுத்தைகளின் வாகனங்கள் சென்னை நகரை மழை முற்றுகை யிட்டது போல முற்றுகையிட்டன. மாலை 5 மணிக் கெல்லாம் புல்லா நிழற்சாலையை சிறுத்தைகள் நிரப்பினர். சிறுத்தைகளின் எழுச்சியைப் பார்த்து மழை பின்வாங்கியது. தோழர் பொன்னரசு ஒருங்கிணைத்த கலை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கியது. பறை நிகழ்ச்சியும் இசை நிகழ்ச் சியும் சிறுத்தைகளை உசுப்பேத்தியது.

இதையடுத்து விடுதலை கலை இலக்கியப் பேரவையின் மாநிலச் செயலாளர் கவிஞர் சுடர் முருகையா ஒருங்கிணைத்த கவியரங்கம் அறிவுப் பூர்வமாக சிறுத்தைகளை நகர்த்தியது. கவியரங் கத்திற்கு தணிகைச்செல்வன் தலைமை தாங்கினார். கவிஞர்கள் சவகர்லால், அனலேந்தி, கருணாநிதி, சுடர்முருகையா ஆகியோர் கவி பாடினர்.

லட்சத்திற்கும் மேலானோர் கூடி மாநாட்டுத் திடலைத் திணறவைத்தனர். மாநாட்டுத் திடலே பிதுங்கியது. மீதிக் கூட்டம் மாநாட்டுத் திடலுக்கு வெளியே நின்றது. அந்தக் கூட்டமும் லட்சத்தைத் தாண்டியது. மக்கள் வெள்ளத்தில் மாலை 7 மணியளவில் வந்திறங்கினார் எழுச்சித்தமிழர். அவர் காரிலிருந்து இறங்கவே அரை மணி நேரமானது, அந்தளவுக்குத் தொண்டர்களின் கூட்டமும் வரவேற்பும் எழுச்சியாக இருந்தது.

ஆரவாரங்களும் வாழ்த்தொலிகளும் விண்ணைத் தாண்டின. மேடைக்கு வந்த எழுச்சித் தமிழர் கைகளைக் கூப்பி அமைதிப்படுத்தினார்.   எழுச்சித் தமிழர் பிறந்த நாள் வாழ்த்துகளாக வந்துக் குவிந்த பழங்கள், பூங்கொத்து, பரிசுப் பொருட்களை மேடையிலிருந்தவாறே வாங்கினார்...  வாங்கினார்... வாங்கிக்கொண்டே இருந்தார். பின்னர் தொண்டர் களை அமைதிப்படுத்தி மாநாட்டு நோக்கங்களை விளக்கிப் பேசினார். எழுச்சித்தமிழரின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பை பொதுச்செயலாளர் ரவிக்குமார் வெளியிட, பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் பெற்றுக் கொண்டார். பின்னர், புரட்சிக்கனல் இளையகம்பன் பாடல்வரிகளில் இலக்கியன் இசையில் தயாரான ‘மீசவச்ச போதிமரம்’ பாடல் ஒலிப்பேழையை பொதுச்செயலாளர் கா.கலைக் கோட்டுதயம் வெளியிட கவிஞர் சுடர்முருகையா பெற்றுக் கொண்டார். உரைகள் அடங்கிய ஒலிப்பேழையை ரமேஷ் நாதன் வெளியிட மருத்துவர் சீனிவாசன் பெற்றுக் கொண்டார். வெளியீட்டு நிகழ்வுக்குப் பின் எழுச்சித் தமிழர் தீர்மானங்களை வாசித்தார். இலட்சக்கணக்கான சிறுத்தைகள் பலத்த கையொலி எழுப்பி தீர்மானங்களை நிறைவேற்றினர்.

நேரம் ஆக ஆக, சிறுத்தைகள் மேடையை முற்றுகையிடத் தொடங்கினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடிக் கொண்டே இருந்தது. மேடையை எழுச்சித் தமிழரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்க அவர் மட்டுமே பேச வேண்டியதாயிற்று. சுமார் 45 நிமிடமே எழுச்சித் தமிழரின் உரை அமைந்தது. ஆனால், அந்த உரை அரசியலில் பெரும் நெருப்பைப் பற்றவைத்தது.

எழுச்சித்தமிழர் உரையாற்றிய பின் மாநில நிர்வாகி களும், மாவட்டச்செயலாளர்களும்,  பரிசுப் பொருட்களும் நிதிகளும் கொடுத்தனர். திருவண்ணாமலை  மாவட்ட தொண்டரணி சார்பாக மதியழகன் பசுமாடும் கன்று குட்டியும் பரிசாக வழங்கினார். நிதி அளிக்கும் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் நிதி, பரிசுப் பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விட்டு எழுச்சித் தமிழர்  கிளம்பினார்.

மாநாட்டுக் கூட்டத்தைப் பார்த்து வியாபாரிகளும் பொதுமக்களும் மாநாட்டுக்கு ஒத்துழைப்புக் கொடுத் தனர். கடைகளை அடைத்துவிட்டு மாநாட்டில் பங்கேற்றனர். ஆனால் வழக்கம் போல் உளவுத்துறை சிறுத்தை களின் கலவரத்தால்தான் கடைகள் அடைக்கப்பட்டன என்கிற பீதியை பரப்புரை செய்தது. மழை விட்டும் தூறல் விடாத கதையாக மாநாடு முடிந்தும் பதற்றம் குறையவில்லை. அந்தளவுக்கு ‘எழும் தமிழ் ஈழம்’ மாநாடு தமிழகத்தை எழுச்சியாக்கியுள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் இந்திய - இலங்கைப் பேராதிக்கவாதிகளின் வயிற்றில் சிறுத்தைகளின் ‘எழும் தமிழ் ஈழம்’  மாநாடு ‘புலி’யைக் கரைத்தது. சிறுத்தைகள் பற்றவைத்த பெரும் நெருப்பு தமிழகத்தில் மேலும் மேலும் தமிழீழ விடுதலையை மூட்டிக் கொண்டே இருக்கிறது.           

 

 

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann