என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளே உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆகத்து 17, தமிழர் எழுச்சி நாள் என்னும் பெயரில் கடந்த சில ஆண்டுகளாக நாம் கொண்டாடிவருகிறோம். இந்த ஆண்டு தமிழர் எழுச்சி நாளை, ‘எழும் தமிழ் ஈழம்’ என்னும் பெயரால், இனவிடுதலை அரசியல் மாநாடாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த மாநாடு ஒற்றை அறிவிப்பில் இங்கே எழுச்சிகரமாக நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் செயற்குழுவைக் கூட்டி இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது எப்படி என்று திட்டமிடஇயலவில்லை. சொல்லப் போனால், நானே இந்த மாநாட்டிற்கான பணிகளை கவனிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த சூலை 31ஆம் தேதி ‘உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின்’ சார்பில் ஜெர்மனியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக நான் சென்று விட்டேன். ஐந்து நாட்கள் நான் ஜெர்மனியில் தங்க நேர்ந்துவிட்டது. பிறகு ஐந்து நாட்கள் புதுதில்லியில் தங்கநேர்ந்துவிட்டது. கடந்த ஒரு சில நாட்களாக சென்னையில் நான் தங்கியிருந்தாலும் கூட, இந்த மாநாட்டுப் பணிகளை கவனிக்கஇயலவில்லை.
ஆனாலும், நான் வணங்குகின்ற என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகள், திருமா வளவனை நேரிலே சென்று வாழ்த்தவேண்டும் என்கிற ஆசையோடு - பேராவலோடு கொட்டும் மழையைப் பொருட்படுத்தாமல் இடியைக் கண்டும் அஞ்சாமல், விளம்பரத்தட்டிகளையெல்லாம் காவல்துறையினர் கிழித்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல், எழுதிய சுவர் விளம்பரங்களை யெல்லாம் காவல்துறை சில மணி நேரங்களில் அழித்தாலும் அதைப்பற்றியும் கவலைப்படாமல், சுவர் விளம்பரங்களைத்தானே அழிக்கமுடியும்; விளம்பரத் தட்டிகளைத்தானே கிழிக்க முடியும்; ஆனால், எங்கள் உணர்வுகளை அழிக்கமுடியாது! எங்கள் எழுச்சியை தடுக்க முடியாது!” என்கிற சவாலோடு, இன்றைக்கு சென்னை மாநகரமே திணறக்கூடிய வகையில் அணிதிரண்டு வந்திருக்கின்ற உங்கள் அனை வருக்கும் என்னுடைய நன்றியை முதலில் உங்கள் காலடியில் நான் சமர்ப்பிக்கிறேன்.
இன்று 48வது பிறந்த நாள்! நான் எண்ணிப் பார்க்கிறேன்! 47 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், நான் இன்னும் நின்ற இடத்திலேயே நிற்கிறேன். உலகம் உருண்டு கொண்டே இருக் கிறது, சூழன்றுகொண்டே இருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால், எனக்கு என்னவோ நான் நின்றுகொண் டிருக்கின்ற இடத்திலேயே நிற்பதைப்போன்ற ஓர் உணர்வு.
வா என்று நான் அழைக்கவில்லை, வருவதற்கு ஒரு ரூபாய் நான் கொடுக்கவில்லை; விளம்பரம் எழுதுங்கள் என்று நான் சொல்லவில்லை; எழுது வதற்காக நான் எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் என்மீது நம்பிக்கைவைத்து, என் மீது பாசம் வைத்து, இன்று, இங்கே, இலட்சக்கணக்கிலே திரண்டிருக்கின்ற என் அன்புத் தம்பிகளுக்கு, என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தைகளுக்கு நான் எப்படி நன்றிசொல்லப்போகிறேன் என்று தெரியவில்லை. உங்களையெல்லாம் விடுதலைச் சிறுத்தைகளாய் உருவாக்கியிருக்கிறேன் என்கிற சாதனை என்னை ஆற்றுப்படுத்துகிறது! நாம் இந்த இயக்கத்தைக் கட்டுப்பாடாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நம்மைச் சீண்டுவார்கள்; நம்மைத் தூண்டு வார்கள்; நம்முடைய கட்டுப் பாட்டைச் சீர்குலைக்க முயற்சிப்பார்கள், அதற்கு நாம் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதுதான் என்னுடைய பதற்றம்.
நீங்கள் அனைவரும் கட்டுப்பாடாக நாற்காலியில் அமர்ந்து பார்த்திருப்பீர்களேயானால், பட்டி மன்றப் பேச்சாளர்கள் அனைவரையும் நான் பேசச் சொல்லியிருப்பேன். இந்த நிகழ்ச்சி நள்ளிரவு பன்னிரண்டு மணியைத் தாண்டினாலும் பரவாயில்லை, நாங்கள் காத்திருக்கிறோம் என்கிற வகையில் நீங்கள் அமைதியைக் கடைப்பிடித் திருப்பீர்களேயானால் கட்சியின் முன்னணித் தலைவர்களையெல்லாம் நான் பேசச்சொல்லிக் கேட்டிருப்பேன். ஆனால், அலை அடிப்பது போல் அடித்துக்கொண்டு மேடையை நோக்கி வந்துக் கொண்டேயிருக்கிறீர்கள். மேடையை நோக்கி நீங்கள் நகர்ந்து வருகின்ற இந்த வேகத்தைப் பார்க்கின்ற போது, நீங்கள் கோட்டையை நோக்கி நகரவேண்டும் என்கிற வேட்கையோடு இருக்கிறீர்கள் என்பதை உணரமுடிகிறது. ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றுகூடுவதும் அடக்கப் பட்டவர்கள் ஆயுதம் ஏந்துவதும் தவிர்க்க முடியாத ஒன்று. அது காலத்தின் கட்டளை. இன்றைக்கு ஒடுக்கப்பட்டவர்கள் நாம் ஒன்றுகூடி இருக்கிறோம், வஞ்சிக்கப்பட்டவர்கள் நாம் திரண்டிருக்கிறோம். அதிகார வாசனையே இல்லாமல் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கிடந்த நாம் இன்றைக்கு அதிகாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதற்கான அடையாளமாகத்தான் இந்த மாநாடு இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மத்திய உளவுத்துறையைச் சார்ந்தவர்கள் அல்லது அதிகாரிகள் இந்த மாநாட்டை நடத்தவிடாமல் எப்படியாவது சீர்குலைத்துவிடவேண்டும் என்று கருதி, ஒருசில மணி நேரங்களில் நம்முடைய ‘பேனர்’களையெல்லாம் கிழித்தெறிந்தார்கள். எனது அன்புத்தம்பிகள் வைத்திருந்த அந்த பேனர்களில் அவர்களின் வேர்வை இருக்கிறது. அவர்கள் சிந்திய இரத்தம் இருக்கிறது. அவர்கள் உழைத்த உழைப்பு இருக்கிறது. என்னிடமிருந்து எதையும் எதிர்ப் பார்த்திடவில்லை.
மாநாட்டுக்காக, எனது பிறந்த நாளுக்காக தம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில், சென்னை மாநகரம் முழுக்க வைக்கப் பட்டிருந்த, சுமார் இரண்டாயிரம் பேனர்கள் கிழிக்கப் பட்டிருக்கின்றன. அது எனக்குப் பெரும் மன உளைச்சலை அளித்ததுதான். ஆனாலும், உங்கள் திருமுகங்களையெல்லாம் பார்க்கின்ற போது அந்த உளைச்சல் எங்கோ காணாமல் பறந்து போய்விட்டது. ஆகவே, அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
‘எழும் தமிழ் ஈழம்’ என்று நாம் சொல்லுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதில் என்ன தேசத் துரோகம் உள்ளது என்று மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கருதுகிறார்கள் என்று தெரியவில்லை. எங்களால் தி.மு.க. அரசுக்கு எந்த இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக் கிறோம். ஆனால், எங்கள் உணர்வுகளிலிருந்து எங்கள் நிலைப்பாடுகளிலிருந்து நாங்கள் உறுதியாக இருப்போம்; அதிலிருந்து மாறமாட்டோம். அதனடிப்படையில்தான், நாடாளுமன்ற கன்னிப் பேச்சில் நான் பேசினேன், ‘இந்திய அரசு எமது தமிழ்ச்சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது! சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு எந்த வகையில் எல்லாம் உதவி செய்தது என்பதை ‘வெள்ளை அறிக்கை’யாக வெளியிடவேண்டும்’ என்றும் நான் நாடாளுமன்றத்தில் பேசினேன்.
நாம் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்தும், எடுத்துக்கொண்ட நிலைப்பாட்டிலிருந்தும் ஒரு போதும் பின்வாங்கமாட்டோம் என்கிற வகையில் இன்றைக்கு இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். தமிழீழம் என்கிற கோரிக்கை இன்னும் சிதைந்து விடவில்லை. அந்தக் கோரிக்கை இன்னும் அப்படியே இருக்கிறது. அந்தக் கோரிக் கைக்காகப் போராடுகின்ற இயக்கமாக விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் இருக்கும் என்பதை பிரகடனப்படுத்துகின்ற ஒரு மாநாடுதான் இந்த மாநாடு. நாங்கள் இந்திய அரசின் சட்ட திட்டங் களுக்குக் கட்டுப்பட்டவர்கள் தான்; இந்திய இறை யாண்மையை மதிக்கக்கூடியவர்கள்தான்; இந்திய குடிமக்களாக வாழக்கூடியவர்கள் தான்! ஆனாலும், ஒன்றை நான் சொல்லுகிறேன், ‘தமிழீழ விடுதலைக்காகத் தமிழகத்திலிருந்து போராடக்கூடிய ஆயுதம் ஏந்தாப் புலிகள் நாங்கள்’! தமிழீழக் கோரிக் கையைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இந்தக் கோரிக்கையை அடைகாப்போம், இந்தக் கோரிக் கைக்காக தொடர்ந்து குரல் கொடுப் போம். தமிழீழம் ஒன்றுதான் ஈழத் தமிழர்களுக்கு ஒரே பாதுகாப்பு என்கிற அந்த உண்மையை உலகுக்கு உணர்த்து வோம். அதற்காகத்தான் இந்த மாநாடு.
இன்றைக்குத் தமிழகத்தில் ஒடுக் கப்பட்ட மக்கள் எத்தனையோ அடக்கு முறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகி வருகிறார்கள். இன்றைக் குக்கூட திண்டிவனம் அருகே வானூர் ஒன்றியப் பகுதியில் நம்முடைய இயக்கத் தோழர்களை சாதி வெறியர்கள் தாக்கியிருக்கிறார்கள், குடிசைகளைக் கொளுத்தி யிருக்கிறார்கள், ஆளுங்கட்சிக் கூட்டணியில் நாம் இருந் தாலும்கூட காவல்துறை எப்போதும் தலித்துகளுக்கு எதிராகச் செயல்படும் என்பதற்கு வானூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகளை அவர்கள் வேட்டையாடுகின்ற நடவடிக்கை யிலிருந்து உணரமுடிகிறது.
தைலாபுரம் உங்களுக்குத் தெரியும். தைலாபுரம் என்கிற கிராமத்தில் விடுதலைச்சிறுத்தைகளை, தலித் மக்களைச் சாதிவெறியர்கள் தாக்கியிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் படுகின்ற வதைகளைப் பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை யில்லை. மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலிக் கம்பிகளுக் குள்ளே சிக்கித்தவிக்கிறார்கள். குடிக்க நீர் இல்லை; உண்ண உணவில்லை; மருந்து வசதியில்லை; சுகாதாரம் இல்லை. தமிழகத்தில் இன்று மழை பொழிவதைப்போல இன்றைக்கு வவுனியா காட்டிலும், வன்னிக் காட்டிலும் கடுமையாக மழை பொழிகிறது. அதனால், மழையில், சேற்றில் அந்த மூன்று இலட்சம் தமிழர்களும் இன்றைக்கு வதைப்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இந்த நிலைமைக்கு அவர்கள் ஆளானதற்கு எது காரணம்? யார் காரணம்? இதைப்பற்றியெல்லாம் நான் விரிவாகப் பேசினால் அது மணிக்கணக்கிலே நீளும். ஆனால், ஒன்றை மட்டும் என்னால் உணரமுடிகிறது. அதனைச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நாம் தமிழகத்தில் அடுக்கடுக்கான போராட்டங்களை நடத் தினோம். வேறு எந்தக் கட்சியும் ஈழத்தமிழர்களின் தொடர்பாக பேச முன்வராதபோது, தயங்கியபோது , அச்சப்பட்டபோது, கடந்த ஓராண்டு காலமாக தொடர்ச்சியாக ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போராடிய ஒரே இயக்கம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. சாதிக் கொடுமைகளை எதிர்த்துச் சாதி ஒழிப்புக்காகவும் போரடுவோம், உலகத் தமிழர்களுக்குத் தீங்கு நேர்ந்தால் அதனைத்தடுக்க உயிரை விடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அப்படித்தான் அன்புத்தம்பி கரும்புலி முத்துக்குமார், மறைமலை நகரில் நான் உண்ணாநிலை அறப்போர் இருந் ததைப் பார்த்து வேதனைப்பட்டு வெந்துநொந்து, திருமா வளவன் ஏன் சாகவேண்டும், நான் சாகிறேன் என்று தீக்குளித்துச் செத்தான். மறைமலை நகர் போராட்டம்தான், கரும்புலி முத்துக்குமார் சாவுக்கு உந்துதல் காரணியாகும். அதை யாரும் மறுத்துவிடமுடியாது. தமிழகத்தில் எந்தக் கட்சியும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்தபோது உண்ணாநிலை அறப் போராட்டம் இருந்து, தமிழகத்தில் அந்த வெப்பத்தை உருவாக் கியது விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதான்! அதனைத் தொடர்ந்து 11 பேருக்கு மேலாகத் தீக்குளித்து இறந்தார்கள். அதில், தம்பி தமிழ்வேந்தன், எழில்வளவன், அன்னவல்லி ஆனந்தன் என்கிற மூன்று பேரும் நேரடியாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டில் எந்தக் கட்சிக்காரன் தீக்குளித்து இறந்தான்? ஈழத்தமிழர்களுக்காகத் தமிழ் நாட்டில் எந்தக் கட்சி தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தியது? ஈழத்தமிழர்களுக்காக. தமிழ்நாட்டில் எந்தக் கட்சி தமிழீழத்தை அங்கீகரிக்கக்கோரி மாநாடு நடத்தியது? விடுதலைச்சிறுத்தைகளைத் தவிர.
இன்றைக்கு பிரபாகரன் உயிருடன் இல்லை என்று இராஜபக்சே சொல்லுகிறான். ஒரு மகத்தான போராளியை, ஒரு இயக்கத்தை அழித்துவிட்ட தாகச் சொல்லுகிறான். நான் கேட்கிறேன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இல்லை என்றால் அதை உன் நாடாளுமன்ற அவையிலே சொல்ல வேண்டிதுதானே. அதனைப்பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் ஏன் இதுவரை பேசவில்லை? ஏன் இதுவரை இந்திய அரசுக்கு மேதகு பிரபாகரன் அவர்களின் இறப்புச் சான்றிதழைத் தரவில்லை?
1987ஆம் ஆண்டிலே இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்றிருந்தபோது, பிரபாகரன் இல்லை அவரைக் கொன்றுவிட்டேம் என்று சொல்லி படம் போட்டார்கள். ஆனால், மறுபடியும் மேதகு பிரபாகரன் அவர்கள் வெளியே வந்தாரா இல்லையா? மாவீரர்கள் நாள் கூட்டத்தில் வந்து உரையாற்றினாரா, இல்லையா? இந்திய உளவுத் துறையான ‘ரா’ அன்றைக்கு விளையாண்டது. இன்றைக்கு நான் சொல்லுகிறேன், ‘ரா’ அப்படிச் சொல்லுகிறது! ஆகவே, அவர் இருக்கிறார்! மீண்டும் வருவார்! ஈழ விடுதலைப் போர் மறுபடியும் தொடரும்! நடக்கும்! இந்த உணர்வை தமிழ கத்தில் அடைகாப்பதுதான் திருமாவளவனின் கடமை, விடுதலைச்சிறுத்தைகளின் கடமை. அதை நான் இங்கே உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழ்நாட்டில் நாம் அடுக்கடுக்கான போராட் டங்களை நடத்தினோம். தமிழக முதல்வர் அவர்களும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத் தினார். சட்டமன்றப் பேரவையிலே தீர்மானம் நிறைவேற்றினார். அனைத்துக் கட்சிக் கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றினார். புதுதில்லிக்குச் சென்று பிரதமரைச் சந்தித்து முறையிட்டார். இந்திய அரசு அதைக்கண்டுகொள்ளவில்லை. பொருட்படுத்த வில்லை. அதனால், ஒரே வாரத்தில் ஐம்பதாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், முன்னணித் தளபதிகள் கொல்லப்பட்டார்கள், அப்படிச் செயல்படாமலிருந்து, சிங்களவர் களுக்குத் துணையாக இருந்து எம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களை அழித்த துரோகத்தை, நான் குடியிருக்கின்ற இந்த மண், இந்த தேசம், இந்திய நாடு செய்துவிட்டது. இதை எப்படி சொல்லாமல் இருக்க முடியும்? சட்டத்திற்கு நாங்கள் கட்டுப்படு வோம். ஆனால் துரோகத்தை நாங்கள் தோலுரிக் காமல் இருக்க முடியாது. இறையாண்மைக்குக் கட்டுப் படுவோம். ஆனால், ஒரு சமூகத்தின், ஓர் இனத்தின் அழிவை வேடிக்கை பார்க்கமுடியாது. ஆகவே தான். மறு பிரகடனப்படுத்துகிறோம். ‘எழும் தமிழ் ஈழம்’ இதுதான் இந்த மாநாட்டின் பிரகடனம். இந்த மாநாட்டில் நாம் ஆற்றிய உரையின், தீர்மானங்களின் அடிப்படைக் கருத்து இதுதான்.
ஆகவே, எனதருமைத் தோழர்களே, விடுதலைச் சிறுத்தைகள் சாதி ஒழிப்புக்காகவும், தமிழ்த் தேசியத் திற்காகவும் களப்பணியாற்றி வருகின்ற ஒரு பேரியக்கம். தமிழகத்தில் நிலவுகின்ற, இறுக்கம் நிறைந்த சாதி அரசியலில் இன்றைக்கு தவிர்க்க முடியாத ஓர் அரசியல் சக்தியாக எழுச்சி பெற்று வருகின்ற பேரியக்கம்.
ஒரு காலத்தில் பா.ம.க. இருக்கின்ற அணிதான் வெற்றி பெறும் என்று சொன்னார்கள். இன்றைக்கு பா.ம.க. இல்லாத அணி, விடுதலைச்சிறுத்தைகள் இடம்பெறுகின்ற அணிதான் வெற்றிபெறும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது; உருவாக்கிக் காட்டியிருக் கிறோம். திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் எழுச்சி பெற்று வருகிறது என்பதை அங்கீகரித்து விடக்கூடாது. அதுதான் அவர்களின் நோக்கம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் மைய நீரோட்டத்தில் கலந்து, ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்து இரண்டு எம்.பி. தொகுதிகளைப் பெற்று, அதிலே ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. மூன்றாயிரம் வாக்குகளில் மட்டுமே ஓர் இடத்தை இழந்திருக்கிறது. அதுவும் தனிச் சின்னத்தில், நட்சத்திரம் சின்னத்திலே போட்டி யிட்டு வெற்றிபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், தலித் இயக்க வரலாற்றில் விடுதலைச் சிறுத்தைகள் சாதித்திருக்கிறது என்பதைச்சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நேற்று அரசு ஊழியர்கள் மாநாட்டில் பேசும் போது ஒன்றைச் சொன்னேன்! அரசியலில் நிலவு கின்ற போட்டி என்பது ‘வழுக்கு மரத்திலே ஏறுகின்ற போட்டியைப்’ போன்றது. அந்தப் போட்டியில்கூட கலந்துகொள்ளக்கூடாது என்று நம்மைப்போன்றவர்களை ஒதுக்கிவைப்பார்கள். அதை மீறி விடுதலைச்சிறுத்தைகள் வழுக்கு மரத்திலே ஏறுகின்ற போட்டியில் கலந்திருக்கிறது. அப்படி விடுதலைச் சிறுத்தைகள் வழுக்கு மரத்தில் ஏறுகின்றபோது எதிரிகள் சும்மா இருப்பார்களா? இன்னும் அதிகமாக விளக்கெண்ணையை எடுத்து ஊற்றுவார்கள். ஏறமுடியாமல் தடுக்கின்ற வகையில் காலைப்பிடித்து இழுப்பார்கள். அவன் முன்னேறி விடக்கூடாது என்று எப்படியெல்லாம் முட்டுக் கட்டை போடமுடியுமோ அப்படியெல்லாம் முட்டுக் கட்டையைப் போடுவார்கள். அதையெல்லாம் தாண்டி, அதையெல்லாம் மீறி இன்றைக்கு விடுதலைச் சிறுத்தைகள் சட்ட மன்றத்திலே இரண்டு இடங்களை யும், நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தையும் வென்று காட்டியிருப்பது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மகத்தான சாதனை என்பதை இங்கே நான் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்போது நமக்கு முன்னால் 2011 இருக்கிறது. 2009 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரசு என்கிற இரண்டு கட்சிகளோடும் விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகித்து 28 இடங்களைக் கைப் பற்றியிருக்கிறது. இதே வேறொரு கட்சியாக இருந் திருந்தால், வார ஏடுகளிலும், மாத ஏடுகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் நாள்தோறும் விமர்சனம், ஆராய்ச்சி என்கிற பெயரால் புகழ்ந்து எழுதியிருப்பார்கள். விடுதலைச்சிறுத்தைகள் இந்த அணியில் இருந்ததனால் எந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக ஏற்பட்டிருக்கிறது. 28 இடங்களை வென்றெடுப்பதற்கு எந்த அளவிற்கு தமிழகம் தழுவிய அளவில் விடுதலைச் சிறுத்தை களின் பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதை எழுதிக்காட்டியிருப்பார்கள்.
ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் குறித்து யாரும் எழுதவில்லை. ஆனால் நமக்குத் தெரியும். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இனி விடுதலைச்சிறுத்தைகள் இல்லாமல் எந்த அணியும் வெற்றி பெற முடியாது; நான் அடித்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்; அழுத்தந் திருத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்; நெஞ்சை உயர்த்திச் சொல்லக் கடமைப்பட்டிருக் கிறேன்; தலை நிமிர்ந்து சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். விடுதலைச்சிறுத்தைகள் இல்லாமல் இனி எந்த அணியும் ஆட்சியைக் கைப் பற்றிவிட முடியாது. 2011ஆம் ஆண்டை நோக்கி எமது பயணம் முன்னேறிக்கொண்டிருக்கிறது. அதற்கு இடையில் எனக்கு எவ்வளவோ வேலைகள். இன்னும் மாவட்டங்களைச் சீரமைப் பதற்குரிய கடமைகள் இருக்கின்றன. ஒரு வருடத்திற்குள்ளாக மாவட்டப் பட்டியல்கள் எல்லாம் நான் அறிவிப்பதாக சொல்லி காலம் கடந்துகொண்டே போகிறது. ஒரு நாளைக்கு 20 மணிநேரம் உழைத்தும்கூட என்னால் அந்தப் பணிகளை கவனிக்க முடியவில்லை. விரைவில் அவற்றையெல்லாம் நான் முடித்துவிடுவேன். பிறகு ஒன்றிய அளவில், பகுதி அளவில் பொறுப்பாளர் களைச் சீரமைக்கும் பணிகளைச் செய்வேன் என்கிற உறுதியை இந்த மாநாட்டில் நான் தரக் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால், உங்களிடத்தில் நான் எதிர்ப் பார்ப்ப தெல்லாம் கட்டுப்பாடும் ஒத்துழைப்பும்தான். நீங்கள் மட்டும் என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு உங்களில் ஒருவன் என்கிற முறையிலே உங்களின் தம்பி, உங்களின் அண்ணன், உங்களின் உடன்பிறப்பு என்கிற முறையிலே நான் விடுக்கின்ற வேண்டுகோளை ஏற்று நீங்கள் கட்டுப்பாடாக இருந்து கடமையாற்றுவீர் களேயானால், எழுதிவைத்துக்கொள்ளுங்கள் 2011ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்பது உறுதிப்படுத்தப்படும். அதன்பிறகு நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற அவையில் ஒற்றைச் சிறுத்தைகள் அல்ல, ஏராளமான சிறுத்தைகள் முழங்கு வோம். ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டக் கூடிய வல்லமைபெற்ற இயக்கமாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை நாம் வளர்த்தெடுக்க முடியும், அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழகத்திலுள்ள கொடுமைகளுக்கு எதிராகவும், ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடக்கின்ற இனவெறியாட்டத்திற்கு எதிரா கவும் போராடக்கூடிய பொறுப்பும் கடமை யும் தமிழ் நாட்டில் யாருக்கு இருக்கிறதோ இல்லையோ விடுதலைச்சிறுத்தைகளுக்கு உண்டு, அதை உணர்ந்து நாம் செயலாற்ற வேண்டும்.
ஒரு நாடு அல்ல; ஒரு அரசு அல்ல; உலகமே திரண்டு சிங்களவனுக்குத் துணையாக நின்றது. இந்தியா மட்டுமல்ல, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா இப்படி எண்ணற்ற நாடுகள், ஐரோப்பிய நாடுகள் எல்லாம் சிங்களவனுக்கு ஆதரவு. ஆயுதங் களைத் தருகிறார்கள், இராணுவப் பயிற்சி தருகிறார்கள், மருந்து தருகிறார்கள், உணவுப் பொருள் தருகிறார்கள், பணத்தை அள்ளி அள்ளி கொட்டிக்கொடுக்கிறார்கள். இவ்வள வையும் வைத்துக்கொண்டு புலிகளைச் சிங்களவனால், 25 ஆண்டுகாலம் வீழ்த்தமுடிய வில்லை. எந்த அளவிற்கு வீரம்செறிந்த போராட்டத்தை மேதகு பிரபாகரன் அவர்கள் நடத்தியிருக்கிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதற்கு மிக மிக முக்கியக் காரணம் பிரபாகரன் விரல் நீட்டுகின்ற திசை நோக்கிப் பாய்கின்ற புலிகள் இருந்தார்கள். உலகத்தில் எந்தத் தலைவனும் மக்களோடு போர் முனையில் நின்றதில்லை. அந்தப் பெருமை பிரபாகரன் ஒருவருக்கு மட்டும் தான் உண்டு. உலக நாடுகளின் படைகளே திரண்டு வந்தபோதும், நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறோம் எங்களோடு இருங்கள் என்றபோது மூன்று - நான்கு இலட்சம் பேர் ஒரு படைத்தலைவனின் பின்னால், ஆறுமாத காலம் நின்றார்கள் என்பது உலக வரலாற்றில் இதுவரை எங்கும் நடந்ததில்லை.
மக்களும் சரி, போராளிகளும் சரி அந்தத் தலைவனின் விரல் அசைத்த திசையை நோக்கிப் பாய்ந்தார்கள். இட்ட கட்டளைப் படி நடந்தார்கள். கடந்த சனவரி மாதமே கிளிநொச்சியைக் கைப் பற்றி விட்டார்கள். இதோ இன்னும் ஒருவாரம்தான்; மூன்று நாட்கள்தான்; இரண்டு நாட்கள் தான்; பிரபாகரனைப் பிடித்து விடுவோம், அழித்து விடுவோம் என்று சொன் னார்கள். ஆனால், சனவரி முதல் மே வரை ஐந்து மாத காலம்வரையில் மேதகு பிரபாகரனை நெருங்க முடிய வில்லை. பயந்து, பணிந்து, ஓடிவந்து காலில் விழுந்துவிடு வான்; மக்களை விட்டு விட்டு ஓடி விடுவான்; ஆயுதங்களைக் கீழேபோட்டுக் காப்பாற்று என்று கைக்கூப்பி வருவான் என்றெல்லாம் சில பொறுக்கி களும் கோழைகளும் நினைத் தார்கள். எத்தனை நாடுகள் திரண்டு வந்தாலும் சரி, எத்தனை படைகள் திரண்டு வந்தாலும் சரி, வாருங்கள் நேருக்கு நேர் மோது கிறேன் என்று ஆறு மாத காலம் களத்திலே நேருக்கு நேர் மோதிய பெருமை உலகத்தில் ஒரே தலைவனுக்குத் தான் உண்டு.
எதற்கு இதையெல்லாம் சொல்லுகிறேன் என்றால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்படி ஒரு பிரபாகரனைப் போல் வளர வேண்டும். வீரம்செறிந்த போராளி களாக உங்களைப் பார்க்க நான் விரும்புகிறேன். உணர்ச்சிவயப் படக்கூடியவர்களாக அல்ல. ஆபத்து என்றவுடன் உடனே அடிபணிந்துவிடக்கூடியவர் களாக அல்ல; இலாபங்களுக்காக உடனே அங்கு ஓடலாமா, இங்கு ஓடலாமா என்று தாவுகின்ற குரங்குக் குட்டிகளைப் போல அல்ல; கொள்கையில் உறுதியாக நின்று திருமாவளவனின் தலை மையை ஏற்று தமிழகத்திலே பெரும் புரட்சியை ஏற்படுத்த ஒவ்வொருவரும் நீங்கள் பிரபா கரனாய், வீரம் செறிந்த போரா ளியாய், இந்த மண்ணில் வளர வேண்டும் என்று நான் விரும்பு கிறேன்; அதுதான் என்னுடைய ஆசை. நான் நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று என்னை நேரில்வந்து வாழ்த்திய தோழர் கள் சொன்னார்கள். கட்சிக்கு நிதியை இங்கே வாரி வழங் கினார்கள். சென்றமுறை ஆட்டுக் குட்டியைத் தந்தார்கள், இந்த முறை கன்றுக்குட்டியைத் தந் தார்கள். இப்படி நம்முடைய கட்சிக்குச் சொத்துச் சேர்க்கின்ற நிலை. போராடுவதற்கான அந்த வலிமையைப் பெறுவதற்கான ஒரு சூழல், இன்றைக்கு நம் முடைய சமூகத்தில் வளர்ந்து வருகிறது, எழுச்சி பெற்று வரு கிறது. இதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.
ஆகவே, ஈழ விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் எழுப்புவதும், சாதி ஒழிப்புக்காகத் தொடர்ந்து போராடுவதும் விடுதலைச்சிறுத் தைகளின் இரட்டைக் கடமைகள். அதைத்தான் இந்த மாநாட்டின் முக்கியச் செய்தியாக நான் உங்களுக்கு பிரகடனம் செய் கிறேன். புலிகளை அழித்து விட்டானாம் இராஜபக்சே! போரை முடித்து விட்டானாம் இராஜபக்சே! பொறுக்கிகளும் கோழைகளும் இப்படித்தான் அறிவித்துக் கொண்டிருப்பார்கள். புரட்சி நெருப்பு பற்றிக் கொண் டால் அதனை எந்தச் சக்தி யாலும் அணைக்கமுடியாது.
வட்டுக்கோட்டையில் நடந்த மாநாட்டின் போது ஈழத்தந்தை செல்வா பற்றவைத்த நெருப்பை ஊதி ஊதி ஊழித்தீயாக வளர்த்தார் பிரபாகரன். எங்கோ ஒரு முலை யிலே ஒரு தீபத்தை அணைப் பதைப்போல ஒரு போரை அவர்கள் நிறுத்தியிருக்கலாம். ஆனால், ஈழ விடுதலைப் போர் முற்றுப்பெறவில்லை. ஈழத்தமி ழர்கள் அங்கே குடிக்க நீர் இல் லாமல் உண்ண உணவில்லாமல் அகதிகளாகக் கொடுமைப் படுத் தப்படுகின்ற நிலை தொடர்கிறது. அந்த நிலையிலிருந்து ஈழத் தமிழர்களைக் காப்ப தற்காக ஈழத்தமிழர்களை விடுவிப்பதற் காக, ஈழத்தமிழர்களை வாழவைப் பதற்காக மேதகு பிரபாகரன் வருகின்ற வரையில் அந்தப் போரை விடுதலைச்சிறுத்தைகள் முன்னெடுத்துச் செல்வோம் என்கிற பிரகடனத்தையும் அறிவித்து இந்தப் பிறந்தநாள் விழாவில் வந்து எனக்கு வாழ்த்துகளை அள்ளித்தந்த என் உயிரின் உயிரான விடுதலைச்சிறுத்தை களுக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன். வணக்கம். l