எழும் தமிழ் ஈழம்

இனவிடுதலை அரசியல் மாநாட்டுத் தீர்மானங்கள்

1. வீரவணக்கம்

ஈழ விடுதலைக்கான நான்காம் கட்டப்போரில் சிங்கள இனவெறி - பாசிசக் கும்பல் நடத்திய இனப்படுகொலையில் களப்பலியான பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கும் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளுக்கும் முன்னணி தளபதிகளுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது. அத்துடன், தமிழீழ விடுதலைக்காகத் தீக்குளித்து வீரச்சாவைத் தழுவிய முத்துக்குமார், விடுதலைச்சிறுத்தைகளான தமிழ்வேந்தன், எழில்வளவன், அன்னவல்லி ஆனந்தன் உள்ளிட்ட தமிழகத்துக் கரும்புலிகள் அனைவருக்கும் இம்மாநாடு வீரவணக்கம் செலுத்துகிறது.

2. பாராட்டு

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி கடந்த சனவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் மறைமலை நகரில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மேற்கொண்ட உண்ணாநிலை அறப்போராட்டத்தின் போது குண்டர் தடுப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் 26 பேருக்கும் இம்மாநாடு நெஞ்சார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது.  

3. வதைமுகாம்கள் - விடுதலை!

சிங்கள இனவெறிப் படையினர் சுற்றி வளைத்து முட்கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள சுமார் 3 இலட்சம் தமிழர்களும் அவரவர் வாழிடங் களுக்குச் சென்று குடியேறும் வகையில், உடன டியாக அனைவரையும் விடுதலை செய்ய வேண்டு மென சிங்கள இனவெறி அரசை வற்புறுத்துமாறு அனைத்துலக நாடுகளுக்கும் ஐ.நா. பேரவைக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

4. சிங்களமயமாதல் - தடுப்பு!

தற்போதைய சூழ்நிலையைப் பயன் படுத்தி தமிழர்களின் தாயகமான தமிழீழத்தில் பரவலாக சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கையில் சிங்கள இனவெறி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. கல்வித்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை களிலும் சிங்களவர் களை நியமித்து ஒட்டு மொத்தத் தமிழீழத் தையும் சிங்கள மயமாக்கும் முயற்சிகளில் சிங்கள இனவெறி அரசு ஈடுபட்டு வருகிறது. அனைத்து மரபுகளையும் மீறி சனநாய கத்திற்கு விரோதமான வகையில், தமிழீழத்தை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சிங்கள ஆட்சியாளர்களின் போக்கை சர்வதேசச் சமூகம் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.                        

5. ஈழ விடுதலை - அடுத்த கட்டப் போர்      

தமிழீழ விடுதலைக்கான நான்காம் கட்டப் போர் முடிந்து விட்டதனாலோ அப்போரில் ஈழத் தமிழர்களின் உண்மை பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளும் சில முன்னணி தளபதி களும் வீரச்சாவடைந்து விட்டதனாலோ தமிழீழ விடுதலைப் போர் முற்றிலும் அழிக்கப் பட்டதென சிங்கள இனவெறிக்கும்பலும் அக்கும்பலுக்குத் துணை நிற்கும் பாசிசச் சக்திகளும் பரப்பி வரும் அவதூறுகளை, கற்பனைகளை, கட்டுக் கதைகளை உலகத் தமிழ்ச் சமூகம் நம்ப வேண்டாம் எனவும், ஈழ விடுதலைப் போர் இன்னும் முற்றுப் பெறவில்லை, மீண்டும் அது வெடித்து எழும் எனவும், அத்தகைய நம்பிக் கையோடு உலகத் தமிழினம் ஒன்றுபட்டுக் களமாட முன்வர வேண்டுமெனவும் தமிழ் நாட்டு மக்களுக்கும் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்திற்கும் விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.      

6. தமிழீழத்தை அங்கீகரி!

அறை நூற்றாண்டுக்கும் மேலான சிங்கள இனவெறி ஒடுக்குமுறையிலிருந்து ஈழத் தமிழினம் மீள்வதற்கும் தற்காத்துக் கொள்வதற்கும் உரிய ஒரே தீர்வாகத் தனித்தமிழீழம் என்னும் கோரிக்கை எழுந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் முன்னதாகவே ஈழத்தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. தனித்தமிழீழக் கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகளும் மென்மேலும் பெருகி உள்ளதே தவிர குறையவில்லை. இந்த விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பின்னணியை உணர்ந்து ஈழத் தமிழர்களின் எதிர்கால வாழ்வை தொலைநோக்குப் பார்வையில் ஆய்ந்து சர்வதேசச் சமூகம் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகளின் இம்மாநாடு வற்புறுத்துகிறது.

7. விடுதலைப்புலிகளை விடுதலை இயக்கமாக அங்கீகரி!

‘பயங்கரவாத எதிர்ப்பு’ என்னும் பெயரில் அமெரிக்க வல்லரசு தன்னைத் தற்காத்துக்கொள் வதற்காக அனைத்துலக நாடுகளை ஒருங்கிணைத்து ‘அல்கொய்தா’ போன்ற இயக்கங்களை சர்வதேசப் பயங்கரவாத இயக்கங்களாக பட்டியல் படுத்தியுள்ள அமெரிக்க, இந்திய வல்லரசுகள் ஒரு வெகு மக்கள் இயக்கமான - விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாதப் பட்டியலிலிருந்து உடனடியாக விலக்க வேண்டுமெனவும் வெகுமக்கள் இயக்கமாகவும் விடுதலை இயக்கமாகவும் அங்கீகரிக்க வேண்டுமெனவும் சர்வதேசச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

8. கே.பத்மநாதனை விடுதலை செய்!

புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வகையிலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் புதிய வடிவில் முன்னெடுக்கும் வகையிலும் நாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த திரு. கே. பத்மநாதன் அவர்களை திடீரென மர்மக் கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாகத் தெரிகிறது. இப்போக்கை விடுதலைச்சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன், அவரைக் கடத்தினார்களா? கைது செய்தார்களா? என்கிற உண்மையை சிங்கள அரசு உலகுக்குச் சொல்ல வேண்டுமெனவும் அவர் எந்த நாட்டில் தங்கியிருந் தாரோ அந்த நாட்டு அரசுக்கும் அவருடைய இருப்பைப் பற்றி உலகுக்கு  அறிவிக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்றும் இந்த மாநாடு சுட்டிக்காட்டுகிறது. மேலும், அவர் உயிர் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கவும் உடனடியாக அவரை விடுதலை செய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மெனவும் ஐ.நா. பேரவையை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

முகப்பு

எங்களைப் பற்றி | Copyright © 2009 Namathu Thamizhmann